25 வயதில் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறும் ஆஷ்லி பார்ட்டி; கண்ணீர் மல்க அறிவிப்பு! காரணம் என்ன?
டென்னிஸ் உலகின் நம்பர் 1 இடத்தில் இருக்கும் ஆஷ்லி பார்ட்டிக்கு வயது 25. மிக இள வயதிலேயே அவர் தன்னுடைய கரியரில் இருந்து விலகுவதாக அறிவித்திருப்பது விளையாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியான ஒன்றாக அமைந்திருக்கிறது.
ஆஷ்லி பார்ட்டியின் விளையாட்டு வாழ்க்கை இப்படியான எதிர்பாராத தருணங்களால் நிறைந்ததுதான். 2011 விம்பிள்டன் ஜூனியர் பட்டம் பெறுகிற ஆஷ்லி, தான் டென்னிஸில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக அறிவித்த போது அவர் 18 வயது பிரிவில் விளையாட தகுதி பெற்றிருந்தார். அடுத்து இரண்டு வருடங்கள் அவர் டென்னிஸ் மைதானத்தில் கால் வைக்கவில்லை. கிரிக்கெட் விளையாட சென்றார்.
அந்த ஆச்சரியம் குறைவதற்குள் மீண்டும் 2017ல் டென்னிஸ் பக்கம் வந்தவர் ஆரம்பத்தில் 271-வது ரேங்கில் இருக்கிறார். அந்த வருட முடிவுக்குள் அவர் முன்னேறியது 17வது ரேங்குக்கு. மூன்று கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள், 2019 பிரெஞ்ச் ஓப்பன், 2021 விம்பிள்டன், இந்த வருட ஆஸ்திரிலேய ஓப்பன் தொடர் வெற்றிக்கு பிறகு ஆஷ்லி, தற்போது டென்னிஸில் இருந்து விலக முடிவு செய்துள்ளார்.
“டென்னிஸில் இருந்து நான் ஓய்வு பெறுவதை இன்றைக்கு அறிவிப்பது என்பது கடினமாகவும் உணர்ச்சி மிகுந்ததாகவும் உள்ளது. இந்தச் செய்தியை உங்களிடம் எப்படிப் பகிர்வது எனத் தெரியவில்லை. இந்த விளையாட்டு எல்லாவற்றையும் எனக்கு அளித்துள்ளது. நான் பெருமிதமாகவும் நிறைவாகவும் உணர்கிறேன். இந்தப் பயணத்தில் உடன் இருந்த எல்லோருக்கும் நன்றி, வாழ்க்கை முழுவதற்குமான நினைவுகளைத் தந்ததற்கு நான் என்றும் நன்றியுடையவளாக இருப்பேன்” எனப் பதிவிட்டு காணொலியை ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தன்னுடைய நண்பரும் இரட்டையர் பார்ட்னருமான கேஸியோடு (Casey Dellacqua) உரையாடுகிறார்.
அந்தக் காணொலியில், “நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எதற்கும் தயாராகவும்! இது சரியான தருணம் எனத் தோன்றுகிறது. டென்னிஸ்க்கு நன்றியுடையவளாக இருக்கிறேன். எனக்கு எல்லாவற்றையும் டென்னிஸ் கொடுத்துள்ளது. என்னுடைய கனவுகளையும் அதற்கும் அதிகமாகவும். ஆனால் எனக்கு தெரியும் இதிலிருந்து விலகி என்னுடைய மற்ற கனவுகளைத் துரத்தவும், டென்னிஸ் ராக்கெட்டை கீழே வைக்கவும் இதுதான் சரியான நேரம்” என்று கண்ணீர் மல்க அவர் ஓய்வுபெறுவதற்கான காரணத்தைத் தெரிவித்திருக்கிறார்.
பெண்கள் டென்னிஸ் கூட்டமைப்பு, “இந்த விளையாட்டுக்கும் உலகெங்கிருக்கும் பெண்களுக்குமான பிரதிநிதியாக இருந்ததற்கு நன்றி. நாங்கள் உங்களை மிஸ் செய்வோம், ஆஷ்” என ட்விட் செய்துள்ளது. அவரை மிஸ் செய்யும் பதிவுகள் ட்விட்டரில் குவிந்த வண்ணம் உள்ளன.