இந்தியா

ஹைதராபாத்தில் 5-ம் தேதி நடைபெறவுள்ள ராமானுஜர் சிலை திறப்பு விழா; சிறப்பு யாக பூஜைகள் தொடங்கின: 7,000 போலீஸாருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள்

94views

ஹைதராபாத்தில் நிறுவப்பட்டுள்ள வைணவ ராமானுஜர் ஆச்சாரியார் சிலை வரும் 5-ம் தேதி திறக்கப்பட உள்ளது.

இதற்கான சிறப்பு யாக பூஜைகள் தொடங்கி உள்ளன. முக்கிய பிரமுகர்கள் பலர் வருகை தர இருப்பதால் 7,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஹைதராபாத்தை அடுத்துள்ள முச்சிந்தல் பகுதியில், வைணவ ஆச்சாரியார் ராமானுஜர் அவதரித்து 1000 ஆண்டு நிறைவுற்றதை கொண்டாடும் வகையில், சின்ன ஜீயர் ஆஸ்ரமத்தில் 45 ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டுள்ள இடத்தில் பத்ம பீடத்தின் மீது 216 அடிஉயரத்தில் ராமானுஜருக்கு பஞ்சலோக சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது வரும் 5-ம் தேதிதிறக்கப்பட உள்ளது. இவ்விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். ரூ.1,000 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆஸ்ரமத்திற்கு தற்போது தெலங்கானா, ஆந்திரா, தமிழகம், கர்நாடகம், கேரளா, மகாராஷ்டிரா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வேத பண்டிதர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

மேலும் இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து தன்னார்வலர்கள் சேவை செய்ய திரண்டு வருகின்றனர். இதுதவிர அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளில் இருந்தும் இங்கு தொண்டு செய்ய வந்துள்ளனர். நேற்று முதல் யாக பூஜைகள் தொடங்கின. நேற்று மாலை அங்குராற்பணம் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முன்னதாக நேற்று காலை சின்ன ஜீயர் சுவாமிகள் தலைமையில் வேத பண்டிதர்கள் அங்குள்ள ராமர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து, உற்சவருடன் ஊர்வலமாக ஆஸ்ரமத்திற்கு வந்தனர்.

வரும் 14-ம் தேதி வரை நடக்கும் யாக பூஜைகளில் லட்சுமி நாராயணா மகா யாகம் தொடர்ந்து நடைபெறும். இதில், 108 திவ்ய தேச சன்னதிகள் பிரதிஷ்டை, கும்பாபிஷேகம், தங்க ராமானுஜர் சிலை பிரதிஷ்டை நடைபெற உள்ளது. இதில் 4 வேதங்களுக்கான பாராயணம், 10 கோடி அஷ்டாக் ஷரி மகா பூஜை, புராண, இதிகாச, ஆகம பாராயணம் போன்றவை நடைபெற உள்ளது. ஹைதராபாத்தில் இருந்து இந்த ஆஸ்ரமத்திற்கு வரும் அனைத்து தடங்களும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. ராமானுஜரின் சிலை இரவில் மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது.

இங்கு வரும் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியும், 7-ம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், 8-ம் தேதி உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், 13-ம் தேதி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் வருகை தர உள்ளனர். மேலும், நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாநில ஆளுநர்கள், முதல்வர்கள், எம்.பிகள், அமைச்சர்கள் ராமானுஜரின் சமத்துவ சிலையை காணவருகை தர உள்ளனர். இதற்காக7 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புபணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர, ஆம்புலன்ஸ்கள், தீயணைப்பு படை வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டுள்ளது. 5-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் விழாவிற்காக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!