இந்தியா

ஹிஜாப் விவகாரத்தால் கடலோர கர்நாடகாவில் பதற்றம்: பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாள் விடுமுறை அறிவிப்பு

44views

கடலோர கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தை ஆதரித்தும், எதிர்த்தும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

நிலைமையை கட்டுப்படுத்த அடுத்த 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் (முக்காடு), பருதா (முகத்திரை), புர்கா (முழு நீள உடை) அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து அங்குஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டதால், 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் இறங்கினர்.

கடந்த வாரத்தில் மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்கமகளூரு உள்ளிட்ட இடங்களிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால் மாணவிகள் 6ம் நாளாக நேற்றும் சாலையில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதை கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து ‘ஜெய் ராம்’ என முழக்கம் எழுப்பினர். இதனை கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து ‘ஜெய் பீம்’என முழக்கம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலோர கர்நாடகாவில் தொடங்கிய இந்த போராட்டம் நேற்று பாகல்கோட்டை, ஹாசன், மண்டியா, கோலார் ஆகிய மாவட்டங்களிலும் பரவியது. ஷிமோகாவில் உள்ள பாபுஜி நகரில் ஏபிவிபி மாணவ அமைப்பினர் முஸ்லிம் மாணவிகளை சூற்றிவளைத்து ‘ஜெய் ராம்’ என முழக்கம் எழுப்பினர். மேலும் தேசிய கொடி கட்டும் கம்பத்தில் ஏறி, காவிக் கொடியை கட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவ அமைப்பினர் கல்வீச்சிலும் ஈடுபட்டதால் கல்லூரி நிர்வாகம் கட்டுப்படுத்த முடியாமல் திணறியது. இதனால் போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். அங்கு பதற்றம் நிலவுவதால் அடுத்த 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஹாசன் அரசு கல்லூரிக்கு நேற்று ஹிஜாப் அணிந்துவந்த மாணவியை காவி துண்டு அணிந்த‌ ஏபிவிபி அமைப்பினர் சூழ்ந்து கொண்டு ‘ஜெய் ராம்’ என முழக்கம் எழுப்பினர். அந்த கூட்டத்துக்கு அஞ்சாமல் மாணவி தனியாளாக ‘அல்லாஹ் அக்பர்’என முழக்கம் எழுப்பிய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ஹிஜாப் விவகாரம் தீவிரமடைந்துள்ளதால் காங்கிரஸ், மஜத ஆகிய எதிர்க்கட்சியினர் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமாறு கோரிக்கை விடுத்தனர். இதனால் டெல்லியில் உள்ள கர்நாடக‌ முதல்வர் பசவராஜ் பொம்மை, உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திரா, கல்வித்துறை அமைச்சர் நாகேஷ் ஆகியோரிடம் நிலைமையை கேட்டறிந்தார்.

பின்னர் பசவராஜ் பொம்மை, ”கர்நாடகாவில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி கல்லூரி நிர்வாகத்தினர், கர்நாடக மக்கள் அனைவரும் அமைதியையும் நல்லிணக்கத்தையும் பேணிக் காக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அடுத்த 3 நாட்களுக்கு மாநிலத்தில் உள்ள‌ அனைத்து பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

ஹிஜாப் விவகாரம் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்ற வழிகாட்டுதல்கள், கர்நாடகாவில் நிலவும் சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சீருடை விவகாரத்தில் முடிவெடுக்கப்படும்”என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!