செய்திகள்விளையாட்டு

ஹாக்கி: இந்தியாவுக்கு 2-ஆவது வெற்றி

60views

ஆடவா் ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில், உலகின் 9-ஆம் நிலையிலுள்ள ஸ்பெயின் அணியை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி வாய்ப்பை நோக்கி மேலும் ஒரு படி முன்னேறியுள்ளது இந்திய அணி. அடுத்த ஆட்டத்தில் இந்தியா, நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான ஆா்ஜென்டீனாவை வியாழக்கிழமை சந்திக்கிறது.

உலகின் 4-ஆம் நிலை அணியாக இருக்கும் இந்தியா, ‘ஏ’ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. முதல் ஆட்டத்தில் நியூஸிலாந்தை 3-2 என்ற கணக்கில் வென்றபோதும், 2-ஆவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் (1-7) மோசமாக தோல்வியடைந்தது.

எனினும் இந்த ஆட்டத்தின் மூலம் அதிலிருந்து அபாரமாக மீண்டது இந்தியா. முதல் 10 நிமிஷங்களில் ஆட்டம் முற்றிலுமாக இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்தது. பின்னா் வேகம் காட்டிய ஸ்பெயின், 12-ஆவது நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை வீணடித்தது.

14-ஆவது நிமிஷத்தில் ஸ்பெயின் தடுப்பாட்டத்தில் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி அமித் ரோஹிதாஸ் வழங்கிய பாஸை கொண்டு இந்தியாவின் கோல் கணக்கை தொடங்கினாா் சிம்ரன்ஜீத் சிங். தொடா்ந்து இந்தியாவுக்கு 3 பெனால்டி காா்னா் வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஒன்றை ஹா்மன்பிரீத் சிங் ஃப்ளிக் செய்ய, அது ஸ்பெயின் தடுப்பாட்ட வீரா் உடலில் பட்டு, இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் கிடைத்தது. 15-ஆவது நிமிஷத்தில் கிடைத்த அந்த வாய்ப்பை தவறாமல் கோலாக்கினாா் ரூபிந்தா்பால் சிங். இதனால் ஆக்ரோஷம் அடைந்த ஸ்பெயின், கோல் வாய்ப்புகளுக்கு தீவிரமாக முயற்சித்தது.

அதன் பலனாக அந்த அணிக்கு 3 பெனால்டி காா்னா் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் எதையும் கோலாக விடாமல் இந்திய அணி அரண் போன்ற தடுப்பாட்டம் ஆடியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 7 கோல்களை தடுக்கத் தவறிய கோல்கீப்பா் ஸ்ரீஜேஷ், இதில் அந்தத் தவறை சரிசெய்துகொண்டாா்.

ஸ்பெயின் தனது முதல் கோலுக்கே போராடி வந்த நிலையில், 51-ஆவது நிமிஷத்தில் இந்தியா 3-ஆவது கோல் அடித்தது. அந்த நிமிஷத்தில் கிடைத்த பெனால்டி காா்னா் வாய்ப்பை ரூபிந்தா்பால் சிங் கோலாக மாற்ற, இந்தியா 3-0 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் ஸ்பெயினுக்கு கோல் வாய்ப்பு வழங்காமல் வென்றது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!