ஆயிரத்தி நானூறு படங்களை தாண்டி சென்றுகொண்டிருக்கிறார் இளையராஜா. தற்போது பியூட்டிபுல் பிரேக்அப் என்ற ஆங்கில படத்திற்கும் இசை அமைக்கிறார்.
அவரது பாடலை பயன்படுத்துவது தொடர்பான வழக்கில் அவருக்கு சாதகமான தீர்ப்பை நீதிமன்றம் வழங்கி உள்ளது. தனது சகோதரர் கங்கை அமரனுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். இப்படி பல பாசிட்டிவான விஷயங்கள் இளையராஜாவுக்கு நடந்து வருகிறது. இந்த மகிழ்ச்சியின் ஒரு பகுதியாக தனது அடுத்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்.
திரைப்பட பாடல்களோடு இளையராஜாவின் இசை ஆல்பங்களும் உலக புகழ்பெற்றவை. பாடல் இல்லாமல் இசை கருவிகளைக் கொண்டு அவர் இசை அமைத்த ஆல்பங்கள் பல வெற்றி பெற்றிருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் கடந்த 1986ம் ஆண்டு வெளியாகி, இசைக்கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஹவ் டூ நேம் இட்’ ஆல்பம். வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட 10 இசைக்கருவிகளை முதன்மையாகக் கொண்டு இந்த ஆல்பம் உருவாகியிருந்தது.
தற்போது இதன் இரண்டாம் பாகத்தை வெளியிடப்போவதாக இளையராஜா அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: திரைப்படங்கள் பாகம் 1, பாகம் 2 , பாகம் 3 என வருவதை பார்க்கிறோம் இல்லையா?, உதாரணமாக சூப்பர் மேன் 1, சூப்பர் மேன் 2, சூப்பர்மேன் 3-னு போகுது, பேட்மேன் 1, 2,3, 4-னு வரிசையாக வந்து போகுது. இதேபோல மியூசிக்கில் ஏன் வரக்கூடாது அப்படினு ஒரு யோசனை எனக்கு வந்தது. அதனால், உங்களுக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் ஹவ் டூ நேம் இட் இரண்டாம் பாகம் சீக்கிரமே வரவிருக்கிறது. என்று அந்த வீடியோவில் கூறியிருக்கிறார்.