தமிழகம்

‘ஸ்டெர்லைட் ஆலையில் விரைவில் உற்பத்தி துவங்கும்’

94views

”ஸ்டெர்லைட் ஆலையில் விரைவில் தாமிர உற்பத்தியை துவக்குவோம்,” என, ஆலையின் தலைமை இயக்கக அதிகாரி ஏ.சுமதி தெரிவித்தார்.நேற்று அவர் அளித்த பேட்டி: துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை, ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்யக்கூடிய திறனுடையது.

இதை, எட்டு லட்சம் டன்னாக விரிவாக்கம் செய்ய முடிவு செய்தபோது, மக்கள் எதிர்ப்பால் 2018ல்ஆலைமூடப்பட்டது. ஆலைக்கு துாத்துக்குடி மக்களிடம் எந்த எதிர்ப்பும் இல்லை; அவர்கள் ஆலைக்கு ஆதரவாகவே உள்ளனர். அப்பகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், கட்டமைப்புகள், குடிநீர், வேலை வாய்ப்பு, கல்வி வசதி, சுகாதாரம் ஆகியவற்றை, தற்போது வரை ஸ்டெர்லைட் ஆலை செய்து வருகிறது. இதுதவிர, அப்பகுதி மக்களின் திறனை மேம்படுத்தும் திட்டங்களையும் செயல்படுத்தி, அதன் வாயிலாகவும் வேலைவாய்ப்பை, ஸ்டெர்லைட் ஆலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள, 10 ஆயிரம் மாணவர்களுக்கு, 10 கோடி ரூபாய் செலவில், 10ம் வகுப்பு வரை கல்வி வசதி ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காலத்தில், 45 கோடி ரூபாயிலான கட்டமைப்புகளை ஏற்படுத்தி, மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை, அனைத்து மாவட்டங்களுக்கு வழங்கினோம். துாத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு, 100 சதவீதம் ஆக்சிஜன் சப்ளை செய்துள்ளோம்.ஆலையை மூடியதால் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு தேவையான மூலப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. 400 நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

25 ஆயிரம் நபர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். தமிழகம் மட்டுமின்றி தேசிய பொருளாதா வளர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடும் முன், இந்தியாவில் இருந்து 8,200 கோடி ரூபாய்க்கு தாமிரம் ஏற்றுமதியானது. தற்போது, அதே அளவுக்கு வெளிநாடுகளில் இருந்து தாமிரம் இறக்குமதியாகிறது.

கடந்த 18 ஆண்டுகளில், இந்த அளவுக்கு தாமிரம் இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை. சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும், தாமிரம் உற்பத்தி தொடர்பான அனைத்து விதிகளையும், ஸ்டெர்லைட் ஆலை பின்பற்றி வருகிறது. அதற்கேற்ப, ஸ்டெர்லைட் ஆலையின் தொழில் நுட்பங்கள், கருவிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. ஆலையில் இருந்து கழிவு நீர் வெளியேறுவது பூஜ்ஜியமாக உள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையால், துாத்துக்குடியில் எந்த மாசும் ஏற்படவில்லை. ஆலையை விரிவாக்கம் செய்ய எழுந்த எதிர்ப்பால் ஆலை மூடப்பட்டது.இதற்கு, வெளியிலிருந்து ஏவப்பட்ட சக்திகளே காரணம். அந்த சக்திகளை அரசு கட்டுப்படுத்த வேண்டும். ஆலை சுற்றுச்சூழல் விதிகளை மிகச் சரியாக பின்பற்றுகிறது.

விரைவில், ஆலையில் உற்பத்தியை துவங்குவோம் என்ற நம்பிக்கை உள்ளது. ஆலை தொடர்பான வழக்கு விரைவில் நீதிமன்றத்திற்கு வருகிறது. அப்போது, அதுகுறித்த முடிவுகள் தெரிய வரும். இவ்வாறு சுமதி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!