அக்டோபர் 2ஆம் தேதி மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் “ரேவ் விருந்து” நடப்பதாக மும்பை சரக போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் அதிகாரிகள் மப்டி உடையில் ரகசியமாக கப்பலில் ரோந்து சென்றனர். அப்போது, கப்பலில் ஹெராயின் உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு இருந்தவர்களில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர் என தெரியவர, அவருடன் சேர்த்து எட்டு பேரை கைது செய்து மும்பை சரக அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதுதொடர்பான வழக்கு போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்கும் மும்பை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. நீதிமன்ற காவல் முடிந்து ஜாமின் கோரி ஆர்யன் கான் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. முதல் முறை ஜாமின் மறுக்கப்பட்டு 20ஆம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆர்யன் கான் மீண்டும் ஜாமின் கோரினார். ஆனால் இதற்கு போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவிக்கவே, மீண்டும் ஜாமினை மறுத்தது நீதிமன்றம். இதையடுத்து தன்னுடைய மகனை சிறையில் சென்று நடிகர் ஷாருக்கான் சந்தித்துப் பேசினார். சந்திப்பு நிகழ்ந்த அன்றைய தினமே ஷாருக்கான் வீட்டில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மத்திய பாஜக அரசு வேண்டுமென்றே செய்வதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. ஷாருக்கான் இஸ்லாமியர் என்பதால் அவரது மகன் குறிவைக்கப்படுகிறார் என்றும் சொல்லப்பட்டது. இச்சூழலில் ஜாமின் கேட்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. ஆர்யன் கான் சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்கி வாதாடினார். மூன்று நாட்கள் நடைபெற்ற விசாரணையில் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் ஜாமின் நிபந்தனைகளை நாளை தான் அறிவிக்கும் என்பதால், அவர் விடுதலையாக சில நாட்களாகும். நவம்பர் 2 ஷாருக்கான் பிறந்தநாளுக்கு முன்பாக ஆர்யன் கான் விடுதலையாவர்.