விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி ஒரு ரன்னில் புதுச்சேரியிடம் அதிர்ச்சி தோல்வி

51views

20-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மும்பை, ஜெய்ப்பூர், திருவனந்தபுரம், ராஜ்கோட் உள்பட 7 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

எலைட் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி நேற்று தனது 4-வது லீக் ஆட்டத்தில் புதுச்சேரி அணியை திருவனந்தபுரத்தில் எதிர்கொண்டது. மழையால் ஒரு ஓவர் குறைக்கப்பட்டு 49 ஓவர்களாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் முதலில் பேட் செய்த புதுச்சேரி 9 விக்கெட்டுக்கு 225 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபித் அகமது 87 ரன்கள் (84 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார். ஒரு கட்டத்தில் புதுச்சேரி 9 விக்கெட்டுக்கு 147 ரன்களுடன் ஊசலாடிய நிலையில் பாபித் அகமது, பரத் ஷர்மாவின் (22 ரன், நாட்-அவுட்) ஒத்துழைப்புடன் அணியை 200 ரன்களை கடக்க வைத்தார். தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய தமிழக அணி 69 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. இதன் பின்னர் கேப்டன் ஜெகதீசனும், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். அணியின் ஸ்கோர் 159 ரன்களாக (35.1 ஓவர்) உயர்ந்த போது தினேஷ் கார்த்திக் 65 ரன்களில் கேட்ச் ஆனார். இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு மாறியது. ஜெகதீசன் 64 ரன்களிலும், அதிரடி வீரர் ஷாருக்கான் 8 ரன்னிலும் வெளியேறினர்.

இதற்கிடையே, மழை குறுக்கிட்டதால் உள்ளூர் போட்டிகளில் பயன்படுத்தப்படும் வி.ஜெ.டி. விதிமுறைப்படி தமிழக அணிக்கு 44 ஓவர்களில் 206 ரன்கள் வெற்றி இலக்காக மாற்றி அமைக்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து ஆடிய தமிழக அணியால் 44 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 204 ரன்களே எடுக்க முடிந்தது. இதையடுத்து வி.ஜெ.டி. விதிமுறைப்படி புதுச்சேரி அணி 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் 3 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த தமிழக அணிக்கு இது முதல் தோல்வியாகும். 4-வது ஆட்டத்தில் ஆடிய புதுச்சேரிக்கு 2-வது வெற்றியாகும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!