விஜய் சேதுபதி படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த்.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’. விக்னேஷ் சிவன் மற்றும் லலித் குமார் இருவரும் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் மாதம் இப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்நிலையில், இப்படக்குழு இன்று ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் நடிகராக இந்தப் படத்தில் நடித்துள்ளார் என்பதுதான் அந்த அப்டேட். முகமது மொபி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஸ்ரீசாந்த். இன்று அவரின் பிறந்தநாள் என்பதால் ”காத்துவாக்குல ரெண்டு காதல்’ படக்குழுவினர் கேரக்டர் போஸ்டர் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட் வீரரான ஸ்ரீசாந்த் ஐபிஎல் சூதாட்ட சர்ச்சையில் சிக்கி, அவருக்கு கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த தடை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்ததைதோடு, வழக்கு தொடுத்து அதிலிருந்து மீண்டுவந்தார். தற்போது கேரள மாநில கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருபவர், சில ஆண்டுகள் முன் திரைப்படங்களிலும் நடித்தார். இந்தி திரைப்படம் ஒன்று, மலையாள திரைப்படம் ஒன்று என நடித்தவர் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படம் மூலமாக தற்போது தமிழ் சினிமாவிலும் கால்பதிக்க உள்ளார்.
முன்னதாக, ஸ்ரீசாந்த், இந்தி பிக்பாஸ் சீசன் 12ல் பங்கேற்று ரன்னர் அப்பாக வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக சார்பில் கேரள சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டார் என்பதும் கவனிக்கத்தக்கது.