வங்கதேச அணியுடனான 2வது டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற பாகிஸ்தான் 2-0 என தொடரை கைப்பற்றி அசத்தியது.
தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் 3 நாள் ஆட்டமும் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில், டாஸ் வென்று பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 300 ரன் என்ற ஸ்கோருடன் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம், 4ம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 76 ரன் எடுத்திருந்தது. ஷாகிப் ஹசன் 23, தைஜுல் (0) இருவரும் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். தைஜுல், காலித் அகமது டக் அவுட்டாகி வெளியேற, ஷாகிப் 33 ரன் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். வங்கதேசம் முதல் இன்னிங்சில் 87 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (32 ஓவர்). பாக். பந்துவீச்சில் சஜித் கான் 8, அப்ரிடி 1 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 213 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற வங்கதேசம் 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, அந்த அணி 25 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்நிலையில், கடுமையாகப் போராடிய முஷ்பிகுர் 48, லிட்டன் தாஸ் 45, ஷாகிப் ஹசன் 63 ரன் எடுக்க, மிராஸ் 14, காலித் 0, தைஜுல் 5 ரன்னில் பெவிலியன் திரும்பினர். வங்கதேச அணி 84.4 ஓவரில் 205 ரன் எடுத்து 2வது இன்னிங்சை இழந்தது. பாகிஸ்தான் இன்னிங்ஸ் மற்றும் 8 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. பாக். பந்துவீச்சில் சஜித் 4, அப்ரிடி, ஹசன் அலி தலா 2, பாபர் 1 விக்கெட் வீழ்த்தினர்.
சஜித் ஆட்ட நாயகன் விருதும், அபித் அலி தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.