இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 25.2 ஓவர்களில் 110 ரன்னில் சுருண்டது. கேப்டன் பட்லர் அதிகபட்சமாக 30 ரன் எடுத்தார். பும்ரா 19 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். முகமது ஷமி 3 விக்கெட் டும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். பின்னர் ஆடிய இந்தியா 18.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 114 ரன் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ரோகித் சர்மா 58 பந்தில் 7 பவுண்டரி, 5 சிக்சருடன் 76 ரன்னும், ஷிகர் தவான் 54 பந்தில் 31 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர்.
ரோகித்சர்மா- தவான் ஜோடி தொடக்க விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன் எடுத்து சாதனை படைத்தது. இருவரும் இணைந்து 5,108 ரன் எடுத்து உள்ளனர். 112 இன்னிங்சில் இந்த ரன்னை தொட்டுள்ளனர். ஒருநாள் போட்டியில் தொடக்க விக்கெட்டுக்கு 5 ஆயிரம் ரன்னை எடுத்த 4-வது ஜோடி ரோகித் சர்மா-தவான் ஆவார்கள். தெண்டுல்கர்-கங்குலி 6,609 ரன்னுடன் முதல் இடத்தில் உள்ளனர். கில்கிறிஸ்ட்-ஹைடன் (ஆஸ்திரேலியா) ஜோடி 5,379 ரன்னுடன் 2-வது இடத்திலும், கிரீனிட்ஜ்- ஹெய்ன்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) ஜோடி 5,150 ரன்னுடன் 3-வது இடத்திலும் உள்ளது.