மொழி ரீதியாக நடிகர்களைப் பிரித்துப் பார்ப்பதை நிறுத்தி விட்டேன் என்று ராஜமெளலி தெரிவித்துள்ளார்.
ராஜமெளலி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘இரத்தம் ரணம் ரெளத்திரம்’. இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டிவிவி நிறுவனம் பெரும் பொருட்செலவில் இப்படத்தைத் தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஜனவரி 7-ம் தேதி வெளியாகவுள்ள இந்தப் படத்தின் முதல் டீஸர் நாளை (நவம்பர் 1) காலை வெளியாகவுள்ளது. இதற்கு இணையத்தில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தனது படங்களுக்கான நடிகர்கள் தேர்வு குறித்து ராஜமெளலி, “தென்னக நடிகர், வடக்கைச் சேர்ந்தவர், தமிழ், கன்னடம் என்றெல்லாம் நான் நடிகர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டேன். அதற்கு முன்னரே ரசிகர்களையும் நான் அப்படிப் பிரித்துப் பார்த்ததில்லை. இந்திய ரசிகர்கள் என்றே நான் பார்க்கிறேன். இதை நான் நீண்ட காலமாகச் செய்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனாவின் தீவிரம் குறைந்து திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியானாலும், பெரிய பட்ஜெட் படங்கள் தங்களது முதலீட்டைத் திரும்பப் பெறுமா என்கிற சந்தேகம் நிலவுகிறது.
‘ஆர்.ஆர்.ஆர்’ பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ளது. முதலீடு திரும்பப் பெறுவது குறித்து ராஜமெளலி, “அது என் படத்துக்கான பிரச்சினை மட்டுமல்ல. திரைத்துறைக்கே பிரச்சினை தான். ஒட்டுமொத்த மனித இனத்துக்கும் இந்த தொற்று காலம் பிரச்சினை தான். எனக்கோ, என் படத்துக்கோ என்ன ஆகும் என்று உட்கார்ந்து அழுவது தேவையற்றது. இதுதான் சூழல்.
இந்தத் தடையை எப்படித் தாண்டுவது, இந்தச் சூழலில் எப்படிச் சிறப்பாகச் செயல்படுவது, படத்தை மீண்டும் மீண்டும் திரையரங்கில் பார்க்குமளவுக்கு ரசிகர்களுக்கு எப்படி உற்சாகத்தைக் கொடுப்பது என்று யோசிக்க வேண்டும். எனவே மிகச் சிறப்பான முறையில் படத்தை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.