உலக பிரசித்தி பெற்ற, 412வது மைசூரு தசரா விழா இன்று கோலாகலத்துடன் துவங்கவுள்ளது. தசரா பண்டிகை மற்றும் அது தொடர்பான விழாக்கள் துவங்குவதை ஒட்டி, மைசூரு நகர் முழுதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. மக்கள் உற்சாகமாக காட்சியளிக்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நகரில் குவிந்துள்ளனர்.மைசூரை ஆண்ட உடையார் மன்னர் வம்சத்தினர், 1610ல் முதல் முறையாக தசரா விழா கொண்டாடினர். மன்னர்கள் ஆண்ட காலங்களில், அவர்களையே தங்க அம்பாரியில் அமர வைத்து ஜம்பு சவாரி ஊர்வலம் நடத்தப்பட்டு வந்தது.வரவேற்புமன்னர் ஆட்சி முடிந்த பின், சாமுண்டீஸ்வரி தேவி சிலையை அமர வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.ஆண்டுதோறும் நவராத்திரியின் ஒன்பது நாட்களும், சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். 10வது நாளான விஜயதசமி அன்று, ஜம்பு சவாரி எனப்படும் யானைகளின் பாரம்பரிய ஊர்வலம் நடக்கும்.அந்த வகையில், 412வது தசரா விழாவை, நாட்டின் மூத்த அரசியல் தலைவரும், கர்நாடகா முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணா இன்று காலை, சாமுண்டி மலையில், சாமுண்டீஸ்வரி தேவிக்கு மலர் துாவி துவக்கி வைக்கிறார்.
கொரோனாவால் துவக்க விழாவில், 100 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மைசூரு வந்த அவரை, மேயர் சுனந்தா பாலநேத்ரா, மாவட்ட கலெக்டர் பகாதி கவுதம், அமைச்சர்கள் சோமசேகர், பைரதி பசவராஜ் உட்பட உயர் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.உற்சாகம்முதல்வர் பசவராஜ் பொம்மை, அமைச்சர்கள் மைசூரில் முகாமிட்டுள்ளனர். இன்று முதல், 14 வரை, அரண்மனை வளாகத்தில் தினமும் கர்நாடகாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் கலாசார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வழக்கமாக, குஸ்தி, விவசாய தசரா, மகளிர் தசரா, குழந்தைகள் தசரா, உணவு திருவிழா, கைவினை பொருட்கள் கண்காட்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.கொரோனா பரவலால் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
அதே வேளையில், ஜம்பு சவாரி ஊர்வலத்தில், கர்நாடக நாட்டுப்புற கலைகள் இடம் பெறுவதற்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை.ஊர்வலத்தில் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யூ யானை உட்பட எட்டு யானைகள் அரண்மனை வளாகத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பே அழைத்து வரப்பட்டு ஒத்திகை பார்க்கப்படுகிறது.தசரா விழா துவங்குவதை ஒட்டி, மைசூரு நகர் முழுதும் விழா கோலம் பூண்டுள்ளது. நகரின் பல ஓட்டல்கள், சுற்றுலா பயணியரால் நிரம்பி வழிகின்றன. மைசூரு அரண்மனை வண்ண விளக்குகளால் ஒளிர்கிறது. உற்சாக வெள்ளத்தில் நகர மக்கள் ஜொலிக்கின்றனர்.