மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் வழக்கு தொடர்பாக கடந்த 22-ம் தேதி கொல்கத்தாவில் மாநில அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு நெருக்கமான நடிகை அர்பிதாவின் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை செய்து ரூ.22.5 கோடி ரொக்கம், ஒன்றரை கிலோ தங்கம், ரூ.54 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்தது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி, நடிகை அர்பிதா நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். அமைச்சரிடம் 2 நாள் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு கொல்கத்தா நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் அவர் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால், நல்ல உடல்நிலையில் உள்ள அமைச்சர் நாடகமாடுகிறார். அவரை மத்திய அரசு மருத்துவ மனை அல்லது ராணுவ மருத்துவ மனைக்கு மாற்ற உத்தர விட கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது. இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதே வழக்கில் கைதான நடிகை அர்பிதா முகர்ஜி ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. அவரை 14 நாட்கள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிபதி, நடிகை அர்பிதாவை ஒரு நாள் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினார்.
அமலாக்க துறை கூறும்போது, ‘‘அர்பிதா பெயரில் பல்வேறு போலி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு கோடிக்கணக்கில் மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்று தெரிவித்தார்.