தமிழகம்

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல்: பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்

44views

திமுக தொண்டரின் சட்டையை கழற்ற வைத்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 19-ம் தேதி நடந்த சென்னை மாநகராட்சி தேர்தலின்போது, ராயபுரம் மண்டலத்துக்குட்பட்ட 49-வது வார்டில் உள்ளஒரு வாக்குச்சாவடிக்குள் திமுகவைச் சேர்ந்த நரேஷ் குமார் என்ற நரேஷ் (33) அத்துமீறி நுழைந்ததாக கூறப்படுகிறது. அங்கு வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிமுகவினர், நரேஷை மடக்கிப் பிடித்து தாக்கினர். அவரை அரை நிர்வாணமாக்கி போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வீடியோவாக வைரலானது.

தாக்குதலில் காயமடைந்த நரேஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவர் அளித்த புகாரின் பேரில் ஜெயக்குமார் உள்ளிட்ட 40 பேர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், கலகம் செய்யத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் தண்டையார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவுசெய்தனர்.

இதையடுத்து, நேற்று முன்தினம்இரவு பட்டினப்பாக்கம் வீட்டில் இருந்த ஜெயக்குமாரை தண்டையார்பேட்டை போலீஸார் கைதுசெய்தனர். அவரை நுங்கம்பாக்கம் காவல் நிலையம் அழைத்துச் சென்று 4 மணி நேரத்துக்கும் மேலாகவிசாரணை நடத்தினர். பின்னர், நள்ளிரவில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதித்துறை நடுவர் முரளிகிருஷ்ண ஆன்ந்த் வீட்டில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து ஜெயக்குமாரை மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, ஜெயக்குமார் பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!