சினிமா

மரைக்காரை தியேட்டரில் வெளியிடுங்கள் ; அமைச்சர் வலியுறுத்தல்

144views

மோகன்லால், பிரியதர்ஷன் கூட்டணியில் மிக பிரம்மாண்டமான வரலாற்று படமாக தயாராகியுள்ளது ‘மரைக்கார் ; அரபிக்கடலின்டே சிம்ஹம்’.

கடந்த வருடம் மார்ச் மாதமே, அதாவது கொரோனா முதல் அலை ஆரம்பித்த அந்த காலகட்டத்திலேயே தியேட்டர்களில் வெளியாவதற்கு தயாராகிவிட்டது. அதனால் மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்தப் படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை தியேட்டரில்தான் வெளியாகும் என்கிற நிலைமை நிலவியது. கடந்த வருடம் முதலே இந்த படத்தை ஓடிடி தளங்கள் போட்டி போட்டுக்கொண்டு விலை பேசினாலும் கூட ரசிகர்களுக்கு தியேட்டரில் இந்த படத்தை பார்க்கும் அனுபவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்ய வேண்டும் என்பதில் மோகன்லாலும் படத்தின் தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூரும் உறுதியாக இருந்தனர். அதற்கேற்ப கடந்த சில நாட்களுக்கு முன்பாக கேரளாவில் 50 சதவீத இருக்கைகள் அனுமதியுடன் தியேட்டர்கள் இயங்கலாம் என அறிவிப்பு வெளியானது.

ஆனால் இந்த சமயத்தில் திடீரென மரைக்கார் படத்தை தியேட்டர்களில் வெளியிடுவதில் இருந்து பின்வாங்கிய தயாரிப்பாளர் இந்தப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடுவதற்காக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்தார். இது தியேட்டர்காரர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த படத்தின் மூலம் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.இந்த நிலையில் இந்த படத்தை தியேட்டர்களில் வெளியிடுவது குறித்து தயாரிப்பாளர் பரிசீலிக்க வேண்டும் என கேரள செய்தித்துறை அமைச்சர் ஷாஜி செரியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, தியேட்டர்கள் திறப்பதற்கு முன்பு தயாரிப்பாளர் இந்த முடிவை எடுத்திருந்தால் ஏற்றுக்கொள்ளலாம். தற்போது திரையரங்குகளை திறப்பதற்கு அரசு ஆவண செய்துள்ள நிலையில், இப்படி ஓடிடி தளங்களில் படங்களை வெளியிட்டால் தியேட்டர்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படும். எனவே மரைக்கார் படத்தை தியேட்டர்களில் வெளியிட்டுவிட்டு, அதன் பின்னர் ஓடிடி தளங்களுக்கு கொடுப்பதுதான் சரியாக இருக்கும் என கூறியுள்ளார். அமைச்சரே இந்த விஷயத்தில் தலையிட்டு கருத்து கூறியுள்ளதால் மரைக்கார் தயாரிப்பாளருக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!