போதைப் பொருள் மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன என காங்கிரஸ் எம்.பி., ராகுல் கேள்வி எழுப்பினார்.
குஜராத் மாநிலத்தின் ஆமதாபாத் மற்றும் பொடாட் மாவட்டங்களில் சமீபத்தில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுந்தில் 42 பேர் உயிரிழந்தனர். 97 பேர் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: வறண்ட மாநிலமான குஜராத்தில், கள்ளச்சாராயம் குடித்ததால் பல குடும்பங்கள் அழிந்து கிடக்கின்றன. பில்லியன் கணக்கான மதிப்புள்ள போதைப்பொருள்களும் அங்கிருந்து தொடர்ந்து கைப்பற்றப்படுகின்றன. மகாத்மா காந்தி மற்றும் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆகியோர் பிறந்த மண்ணில், கண்மூடித்தனமாக போதை வியாபாரம் செய்யும் இவர்கள் யார் என்பது மிகவும் கவலைக்குரிய விஷயமாக உள்ளது. இந்த மாபியா கும்பலுக்கு எந்த ஆளும் சக்திகள் பாதுகாப்பு அளிக்கின்றன?. இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.