உத்தரபிரதேச முன்னாள் முதல்வரான அகிலேஷ் சிங், கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸுடன் கூட்டணி வைத்தார். இங்குள்ள 403 தொகுதிகளில் காங்கிரஸுக்கு 103 தொகுதிகளை ஒதுக்கினார். இதில் காங்கிரஸ் முந்தைய தேர்தலை விடக் குறைவாக, வெறும் 7 இடங்களில் மட்டுமே வென்றது. இதனால் காங்கிரஸுடன் இனி கூட்டணி இல்லை என அகிலேஷ் அப்போது அறிவித்தார்.
2019 மக்களவைத் தேர்தலில் அகிலேஷ் தனது முக்கிய எதிர்க்கட்சியான, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் (பிஎஸ்பி) கூட்டணி வைத்தார். இதில் 10 தொகுதிகளில் பிஎஸ்பி வெற்றி பெற்றது. அகிலேஷ் கட்சிக்கு வெறும் 5 இடங்களே கிடைத்தன. இதனால் மாயாவதியுடனும் இனி கூட்டணி இல்லை என அகிலேஷ் முடிவு எடுத்தார்.
இந்நிலையில் உ.பி. சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. கான்பூரில் இருந்து இரு தினங்களுக்கு முன்பு ரத யாத்திரை மூலம் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், ‘பெரிய கட்சிகளுடன் கூட்டணி வைத்ததால் எங்கள் கட்சிக்கு கசப்பான அனுபவம் கிடைத்தது. இதனால் சிறிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம். பெரிய கட்சிகளுடன் கூட்டணி என்பது இனி இல்லை. பாஜகவை எதிர்க்கும் பெரிய கட்சியாக சமாஜ்வாதி உள்ளது’ என்றார்.
இதன் மூலம் உ.பி.யில்மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான அரசியல் சூழல் நிலவுவதாக கருதப்படுகிறது. இதற்கு அங்கு எதிர்கட்சிகளின் வாக்குகள் பிரிவதும் முக்கியக் காரணம் ஆகும்.