ஜூலை 28-ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னையில் ஜூலை 28ம் தேதி தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் புதுக்கோட்டையில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் இன்று (ஜூலை 15) நடைபெற்றது. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆட்சியர் கவிதா ராமு கொடி அசைத்து மாரத்தான் ஓடட்த்தை தொடங்கி வைத்தார்.
இந்த ஓட்டத்தில் புதுக்கோட்டை விளையாட்டு விடுதியை சேர்ந்த 100 மாடவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய ஓட்டமானது ஆட்சியர் அலுவலக ரவுண்டானா, நகராட்சி அலுவலகம், அண்ணா சிலை, பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அரசு மகளிர் கல்லூரி வழியாக மீண்டும் மாவட்ட விளையாட்டு மைதானத்தை அடைந்தது.
மேலும், விழிப்புணர்வு வில்லைகள் பள்ளி கல்லூரி வாகனங்களில் ஒட்டப்பட்டன. மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்ட செஸ் விளையாட்டு போட்டியை ஆட்சியர் பார்வையிட்டார். செல்ஃபி பாயின்டில் நின்று செல்ஃபி எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெய்சங்கர், கோட்டாட்சியர்(பொ) கருணாகரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.