இலக்கியம்கட்டுரை

பதேர் பாஞ்சாலி உருவான பாடுகளின் கதை

149views
சத்யஜித் ரேயின் சினிமா ஆசை அவர் லண்டனில் இருந்தபோதுதான் அவருக்கு ஏற்பட்டது. அங்கே அவர் பார்த்த பைசைக்கிள் தீவ்ஸ் ஆங்கிலப்படம்தான் அவருள்ளிருந்த ஒரு சினிமா படைப்பாளியை உசுப்பிவிட்டது.
அந்த பைசைக்கிள் தீவ்ஸ் படம்போலவே ஒரு இயல்பான சினிமாவை உருவாக்கவேண்டும் என்று அவர் தன் மனதில் நினைத்தபோதே அவருள் தோன்றிய கதைதான் பதேர் பாஞ்சாலி. அது வங்கத்தின் பிரபல எழுத்தாளர் விபூதி பூஷண் பேனர்ஜி எழுதிய நாவல். அது நாவலாக வெளிவரும் முன்னர் வங்கத்தின் இலக்கிய இதழ் ஒன்றில் தொடர்கதையாக வெளிவந்தது. அந்தத் தொடர்கதையைத் தொடங்குகிறபோது ஒரு விசித்திரமான அறிவிப்பை அந்தப் பத்திரிகை செய்திருந்தது. இந்தத் தொடர் வாசகர்களுக்குப் பிடிக்காமல்போகமானால் இதனை நிறுத்திவிடுகிறோம் என்ற அறிவிப்பே அது. ஆனால், உண்மையில் விபூதி பூஷண் ஐம்பதுக்கும் மேலான நூல்களை எழுதியபோதிலும் அவருக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத்தந்தது இந்த பதேர் பாஞ்சாலிதான்.
அந்தப் பதேர் பாஞ்சாலிதான் சத்யஜித் ரேயின் முதல் சினிமா முயற்சியின்போது அவர் மனதில் தோன்றியது. ரேயின் மனங்கவர்ந்த கதையாடலாக அந்த நாவல் இருந்தது. நாவலின் முக்கியப் பாத்திரங்களான அபுவையும் துர்க்காவையும் வங்க மக்கள் கொண்டாடினார்கள். நாவலாசிரியர் விபூதி பூஷணின் சொந்த வாழ்க்கைதான் இந்த நாவல் என்றும் பேசப்பட்டது. வறுமை மிகுந்த பின்னணியில் அபுவைப்போலலே பூஷணும் ஒரு கிராமத்துப் பூசாரி மகனாகப் பிறந்து, கல்கத்தாவில் கல்லூரியில் படிக்கையிலே காதல் வசப்பட்டு, அந்தப் பெண்ணையே மணந்து, அந்தக் காதல் மனைவியையும் திருமணமாகிய ஒரே ஆண்டில் வங்கம் முழுதும் பரவிய ஒருவித விஷக் காய்ச்சலுக்குப் பலி கொடுத்தார்.

மனமொடிந்துபோனபோதிலும் அவர் குடிசைப் பகுதியில் குடியேறி, அந்த மக்களிடம் பரிவு காட்டி, அவர்களுக்காக உழைத்தார். சோகமும் தன்னம்பிக்கையும் நிறைந்த தனது வாழ்வியல் அனுபவத்தை எழுதியபோது விபூதி பூஷணின் உற்ற நண்பர் நீரத் சௌத்ரியின் உதவியோடு அது நூலாக வெளியானது. பூஷணின் படைப்புகளை படக்கதையாக வெளியிட ஒரு பதிப்பகம் முன்வந்தபோது சிறந்த ஓவியரும், வடிவமைப்பாளருமான சத்யஜித் ரே அந்தப் பணியைச் செய்ய நேர்ந்தது. அப்போதுதான் பதேர் பாஞ்சாலியில் தனது மனதைப் பறிகொடுத்தார் ரே.
லண்டனிலிருந்து நாடு திரும்பும்போது கப்பல் பயணத்திலேயே பதேர் பாஞ்சாலி கதையைக் காட்சிகளாகப் பிரித்து எழுதி முடித்தார் ரே. இப்படித்தான் 1928 ல் ஒரு தொடர்கதையாக வெளிவந்த பதோர் பாஞ்சாலியை 1950 ல் ஒரு திரைப்படமாக எடுக்கத் திட்டமிடப்பட்டது. விபூதி பூஷண் பேனர்ஜி தனது நாவலில் எழுதியிருந்த வசனங்களை அப்படியே பெரும்பாலும் வைத்துக்கொண்டார் ரே.
ரே லண்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஒருசில நாட்களிலேயே விபூதி பூஷண் மரணத்தைத் தழுவினார். பதேர் பாஞ்சாலியைத் தான் திரைப்படமாக உருவாக்க பூஷணின் துணைவியாரிடம் அனுமதி கோரி சந்அவரைச் சந்தித்தார் ரே. ஒரு தேர்ந்த அச்சு ஊடக வடிவமைப்பாளர் என்ற வகையில் ரேயை அறிந்திருந்த பூஷணின் மனைவி உடனே அவரின் திரைப்பட முயற்சிக்கு அனுமதி கொடுத்துவிட்டார். பூஷணின் நண்பர்கள் சிலர் இதற்கு ஆட்சேபனைகள் தெரிவித்தார்கள். இருந்தபோதிலும் ரேயின் முயற்சிகளை ஆதரிப்பவராகவே பூஷணின் மனைவி இருந்தார்.
ரேயின் முதல் திரைப்பட முயற்சிக்கு நிதியுதவி கிடைப்பதில் பெரும் சிக்கல்கள் தோன்றின. சினிமாவுக்கு ரே புதிது என்பதே முதற்பெரும் காரணமாக இருந்தது. முன் அனுபவமற்ற ரே எப்படி இந்தப் படத்தை உருவாக்கிவிடுவார் என்று ஐயம் கொண்டார்கள் தயாரிப்பாளர்கள். ஆடல், பாடல் ஏதுமில்லாமல் ஒரு சினிமாவை இந்தியப் பட அதிபர்களால் நினைத்துக்கூடப் பார்க்க இயலவில்லை. அது எப்படிச் சாத்தியம் என்று வியந்தார்கள். உள்அரங்கங்களிலேயே படப்பிடிப்புகள் நடந்துகொண்டிருந்த அந்த நாட்களில் முழுக்க முழுக்க வெளிப்புறப் படப்பிடிப்பு மூலமாக ஒரு திரைப்படத்தை உருவாக்கலாம் என்ற ரேயின் திட்டத்தின்மீது தயாரிப்பாளர்கள் அவநம்பிக்கை கொண்டிருந்தனர். இப்படியாக இரண்டு ஆண்டுகளை ரே வீணடிக்க வேண்டியிருந்தது.
இதற்கிடையில், விபூதி பூஷண் பேனர்ஜியின் இந்த நாவலின் புகழைக் கருத்தில்கொண்டு தயாரிப்பாளர் ஒருவர் அவரின் மனைவியிடம் சென்றார். அப்போது பிரபலமாக இருந்த ஒரு இயக்குநரைக் குறிப்பிட்டு அவரைக் கொண்டு இந்தத் திரைப்படத்தைத் தாம் எடுக்க விரும்புவதாகக் கூறினார். அதற்காக எவ்வளவு தொகையும் கூடுதலாகத் தர இசைவதாகவும் சொன்னார். பணம் போதவில்லை என்றால் இன்னும்கூட அதிகமாகத் தருவதாகச் சொன்னார் அந்தத் தயாரிப்பாளர். பேனர்ஜியின் மனைவி இதைக் கடுமையான வார்த்தைகளால் மறுத்தார். என் குழந்தையைப் பணத்திற்காக ஏலம் விட முடியாது என்றார். அவருக்கு ரே மீது மட்டும் முழு நம்பிக்கை இருந்தது.
அடுத்து அனில் சௌத்ரி என்ற நண்பர் ரேவிடம் வந்து சேர்ந்தார். அவர் ராணா தத்தா என்ற தயாரிப்பாளரிடம் ரேயை அறிமுகம் செய்துவைத்தார். அவர் அப்போதுதான் ஒரு வங்கமொழித் திரைப்படத்தை வெளியிட்டிருந்தார். கொஞ்சம் பணம் கொடுத்து படப்பிடிப்பைத் தொடங்குமாறு கூறினார். வெளியிடப்பட்டிருக்கும் படம் ஓடி அதன் லாபத்தில் இந்தப் படத்தை ரே எடுக்கலாம் என்று வாக்கும் கொடுத்திருந்தார். ரே ஒரு கிராமத்தில் தனது படப்பிடிப்பைத் தொடங்கினார். ஆனால், தத்தாவின் படம் தோல்வியைத் தழுவியதால் அவரால் சத்யஜித் ரேவுக்கு உறுதியளித்தபடி அவரின் பதேர் பாஞ்சாலிக்குப் பணம் கொடுக்க இயலவில்லை. படப்பிடிப்பு துவங்கிய நிலையிலேயே நின்றுபோனது.
அனில் சௌத்ரியின் யோசனைப்படி ஒரு பத்து நிமிடங்களுக்கு ஓடுவதுபோல ஒரு டிரெய்லர் ஒன்றை உருவாக்கி, அதனைத் தயாரிப்பாளர்களுக்குப் போட்டுக்காட்டலாம் என்று முடிவெடுத்தார் ரே. தனது காப்பீட்டுத் தொகையில் 7 ஆயிரம் ரூபாயைக் கடன் வாங்கினார். சொந்தக்காரர்களிடம் கையேந்தி 2 ஆயிரம் பெற்றார். இரண்டு தொழில்நுட்ப நண்பர்கள் இணைந்துகொண்டார்கள். ஒரு கேமிராவை வாடகைக்கு எடுத்துக்கொண்டார்கள்.
நாவலில் இடம்பெற்றிருந்த கோபால்பூருக்குப் போனார்கள். கொஞ்சம் ஷூட் செய்தார்கள். திருப்தியாக வரவில்லை. சிதிலமடைந்த பழைய வீடு, அருகில் சிறு குளம், மாந்தோப்பு, வயல்வெளி, ரயில் பாதை இவை அமைந்த ஒரு இடத்தைத் தேடிப்போனார்கள். கல்கத்தாவிற்கு அருகிலிருந்த பொரால் எனும் சிற்றூர் கண்ணில் பட்டது. ஆனால் அங்கே ரயில் பாதை இல்லை. அதற்காக இன்னும் 60 கிலொ மீட்டர் போக நேர்ந்தது.
பொரால் கிராமத்தின் பாழடைந்த வீட்டின் சொந்தக்காரர் படுத்த படுக்கையாகக் கல்கத்தாவில் இருந்தார். அவரைக் கெஞ்சி, மன்றாடி படப்பிடிப்புக்காக அந்த வீட்டைக் கேட்பதற்குள் போதும் போதும் என்றானது. குடியிருக்கவே லாயக்கில்லாத, மனித வாடையை மறந்து காலம் பல ஆன அந்த வீட்டிற்கு மாதம் 50 ரூபாய் வாடகை என்று பேசி முடிவானது. அதன் பின்னர்தான் அவர் அந்த வீட்டைப் படப்பிடிப்புக்குத் தரச் சம்மதித்தார்.
நடிக்க கதை மாந்தர்கள் தேவை என்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்தார் ரே. ரேயின் மனைவி தங்கள் வீட்டருகே இருந்த ஒரு சிறுவனைப் பரிந்துரைத்தார். ரேயுடன் கேமர் விளம்பர நிறுவனத்தில் வேலை பார்த்த நண்பர் சுப்ரதா பேனர்ஜியின் மகள் துர்கா பாத்திரத்திற்குத் தேர்வானார். சுப்ரதாவின் மனைவி கருணா பேனர்ஜி நாடகங்களில் நடித்த அனுபவமுள்ளவர். அவரை அபு, துர்கா ஆகியோரின் தாயார் சரபோஜயா பாத்திரத்தில் நடிக்கச் சம்மதிக்க வைத்தார் ரே. வளர்ந்து பெரியவளான துர்கா பாத்திரத்தில் பள்ளி மாணவி உமா தாஸ்குப்தா தேர்வானார். ரயில் பாதையினருகே வளர்ந்து மண்டிக்கிடந்த காஸ் பூக்கள் ஆரம்பக் காட்சியின் படப்பிடிப்பின்போது இருந்தது. இப்போது இல்லை. எனவே அதற்காக மேலும் 6 மாதங்கள் காத்திருக்க வேண்டியதாயிற்று.
75 வயது விதவையான இந்திர் தாக்ருன் பாத்திரத்திற்கு பழம்பெரும் நாடக, பேசாப்படக் கலைஞர் சுனிபாலா தேவி என்பவர் தேர்வானார். இவரின் நடிப்பும், கலை நேர்த்திமிக்க ஈடுபாடும் ரேயையே அசத்திவிட்டது. அவரின் நடிப்பை நியூயார்க் ஹெரால்ட் டிரிப்யூன் வெகுவாகப் பாராட்டியிருந்தது. நடிகர்கள் தேர்வுக்குப் பிறகு படப்பிடிப்பு தொடங்கினாலும் கலைஞர்களுக்கு மதிய உணவு தருவதுகூட சிரமமான நிலை. ரேயின் மனைவி விஜயா ரே தனது மாமியாருக்குத் தெரியாமல் சில நகைக்களைத் தந்தார். 1300 க்கு அடகு வைக்கப்பட்டது. படப்பிடிப்பு மீண்டும் தொடர்ந்தது. விஜயா ரேவுக்கு வளைகாப்பு போன்றதொரு சடங்கு செய்ய நேர்ந்தது. நகைகளை மாமியார் கேட்டார். ரேயின் உதவியாளர் தனது மனைவியின் நகைகளை அடகுக்கடையில் கொடுத்து, விஜயாவின் நகைகளை மீட்டு வந்த சுவையான சம்பவம் எல்லாம் நடந்தது.

படம் 4000 அடி வளர்ந்திருந்தது. வங்கத்தின் தயாரிப்பாளர்கள் பலரிடமும் அதனைப் போட்டுக்காட்டினார் ரே. இதற்காக அவர் தனது ஓவியம் குறித்த அரிய நூல்கள், சேகரித்து வைத்திருந்த கிடைத்தற்கரிய இசைத்தட்டுக்கள் எல்லாவற்றையும் விற்றார். படம் பார்த்த தயாரிப்பாளர்கள் படம் குறித்து அலட்டிக்கொள்ளவே இல்லை என்பது பெரிய சோகம். 80 வயதாகிவிட்ட சுனிபாலா எந்த நேரத்திலும் இறந்துவிடக்கூடும் என்ற அச்சம் ரேயை ஆட்டுவித்தது. அதற்குள் வருடங்கள் 4 ஓடிவிட்டன.
ரேயின் தாயாருக்குத் தெரிந்த நபர் ஒருவர் மேற்கு வங்கத்தின் அன்றைய முதல்வர் பி.சி.ராய்க்கு வேண்டியவராக இருந்தார். அவர் மூலம் மேற்குவங்க அரசின் விளம்பரத்துறையும் முதல்வரும் படத்தின் எடுக்கப்பட்டது வரை பார்க்க ஏற்பாடானது. பிறகு விளம்பரத்துறை மூலம் சிறிது நிதியுதவி தரப்பட்டது. படப்பிடிப்பு மீண்டும் தொடர்ந்து, முடிந்தது.
இத்தனைக்குப் பிறகும் அன்றைய மேற்குவங்க அரசின் விளம்பரத்துறையோ பதேர் பாஞ்சாலியைப் பெருமிதத்துடன் எடுத்துச்செல்ல ஆர்வமின்றி இருந்தது. பம்பாயின் வணிக சினிமா பதேர் பாஞ்சாலியை ஒருவித வெறுப்போடு அணுகி அதனைப் புறந்தள்ளும் முனைப்பில் இருந்தது. அந்நாளைய பிரதமர் நேருவின் கவனத்திற்கு இது கொண்டுசெல்லப்பட்டது. மேற்குவங்க அரசிடமிருந்து பதேர் பாஞ்சாலியின் பிரதிகள் விலைக்கு வாங்கப்பட்டு, உலகின் பல நாடுகளின் இந்தியத் தூதரகங்களுக்கு அனுப்பிவைக்க நேரு உத்தரவிட்டார். அதன் மூலமே உலக சினிமா ரசிகர்களும், ஆர்வலர்களும், விமரிசகர்களும் இந்தப் படத்தைப் பார்க்கும் வாய்ப்பு ஏற்பட்டது.
பதேர் பாஞ்சாலி வெளிவந்த காலம் தொடங்கி, இன்றுவரையில் அதன் மீதான புகழுரைகள் உலகத்தின் எல்லா பாகங்களிலிருந்தும் வந்தவண்ணமே இருக்கின்றன. பிரபல இசைமேதை பண்டிட் ரவிசங்கர் இந்தப் படத்திற்கு இசையமைத்தார். இந்தப் படம் மட்டுமல்லாமல் ரேயின் அபராஜிதோ, அபுர் சன்சார் போன்ற படங்களும் உலகப் பிரசித்தி பெற்றன. சத்யஜித் ரே எனும் இந்தியாவின் அந்த உலகக் கலைஞனின் நூற்றாண்டில் அவரது அற்பணிப்புமிக்க சினிமா சாதனைகளை நினைவுகூர்வோம்.
  • சோழ. நாகராஜன்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!