தமிழகம்

நெல் கொள்முதலின்போது முறைகேடாக விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

40views

நெல் கொள்முதலின்போது முறைகேடாக விவசாயிகளிடம் கட்டாயவசூல் செய்வதை தடுக்க வேண்டும் என்று அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நெல் கொள்முதல் செய்ய ஆன்-லைன் மூலமாக விவசாயிகள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டுமென்று அரசு உத்தரவிட்டது. இந்த புதிய முறை விவசாயிகளை பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாக்கியது. உரிய காலத்தில் கொள்முதல் மையத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

இணையம் வேலை செய்யாதது, ஸ்மார்ட் போன் இல்லாத விவசாயிகள், பட்டா தங்கள் பெயரில் இல்லாதவர்கள், குத்தகைவிவசாயிகள் என லட்சக்கணக்கானோர் இந்த புதிய முறையினால் அரசு கொள்முதல் மையத்தில் நெல் விற்பனை செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தில் சார்பில் உணவுத் துறை அமைச்சர் மற்றும்அரசின் உயரதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றோம். பல்வேறு இடங்களில் விவசாயிகள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, நெல் கொள்முதல் மையங்களில் பழைய முறைப்படியே விவசாயிகள் சிட்டா, அடங்கல் கொடுத்து பதிவுசெய்து டோக்கன் பெற்று விற்பனைசெய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருப்பதை தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் வர வேற்கிறது.

அத்துடன், கொள்முதல் மையத்துக்கு கொண்டு வரப்படும் நெல் முழுவதையும் கொள்முதல் செய்வது, அதற்கு தேவையான பணம், சாக்கு, ஊழியர்கள் போன்றவற்றை அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். முறைகேடாக விவசாயிகளிடம் கட்டாய வசூல் செய்வதை தடுக்க வேண்டும். கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான கிடங்கு வசதிகளை கொள்முதல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்திட வேண்டும்.

இவ்வாறு சண்முகம் வலி யுறுத்தியுள்ளார்.

கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை பாதுகாப்பாக வைப்பதற்கு தேவையான கிடங்கு வசதிகளை கொள்முதல் நடைபெறும் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்திட வேண்டும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!