நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் நடத்த தடை: ஒன்றிய பாஜக அரசு அடுத்த அதிரடி
நாடாளுமன்ற வளாகத்தில் தர்ணா, ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை எம்.பி.க்கள் நடத்தக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் அவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் அடங்கிய புத்தகத்தை மக்களவை செயலகம் நேற்று வெளியிட்டது. அதில், ‘வாய்ஜாலம் காட்டுபவர், சின்னஞ்சிறு புத்திக்காரர், கொரோனா பரப்புவர், வெட்கக்கேடு, திட்டினார், துரோகம் செய்தார், ஊழல், ஒட்டுகேட்பு முறைகேடு, நாடகம், கபட நாடகம், திறமையற்றவர், சகுனி, சர்வாதிகாரம், சர்வாதிகாரி, கோழை, கிரிமினல், முதலை கண்ணீர் உள்பட பல வார்த்தைகள் பயன்படுத்தக்கூடாத வார்த்தை அவையில் பேச தடை விதிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த சர்ச்சை ஓயும் முன், நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் எம்.பி.க்கள் ஈடுபடக்கூடாது என நாடாளுமன்ற செயலக பொதுச்செயலாளர் பி.சி.மோடி அறிவித்துள்ளார்.இது தொடர்பான சுற்றறிக்கையை அவர் எம்பிக்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் நாடாளுமன்ற வளாகத்திற்குள் மத நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றும் எம்.பி.க்கள் உண்ணாவிரதம், தர்ணாவில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிரான தம் நிலைப்பாட்டை தெரிவிக்க எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்துவது வழக்கம். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு ஒவ்வொரு கட்சியினருமே தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவர். தற்போது ஒன்றிய பாஜக அரசு இதற்கு தடை விதித்துள்ளது. நாடாளுமன்ற செயலக பொதுச் செயலாளரின் புதிய அறிவிப்பால் சர்ச்சை எழுந்துள்ளது.