188views
பாரதி…
நீ… இந்த தேசத்தின் நெருப்புப்பொறி…
ஒரு நூற்றாண்டு முடிந்த பின்னரும்
இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறாய்…
உன்னைத்தொட்டுப் பார்த்த பிறகுதான்
ஒவ்வொருவருக்குள்ளும்
பற்றிக்கொள்கிறது கவிதைத் தீப்பொறி …
நீ இந்த கலியுகத்தின் கவிதை போதை…
ஏதோ ஒருவழியில்
எல்லோருக்கும் கொஞ்சம் உன்னைப் பிடித்திருக்கிறது…
புரட்சியில் நீயொரு புதுமைப் புரட்சியாளன்
எல்லோரும் தாய்நாடு போற்றுகையில்
நீ மட்டும்தான் தந்தையர் நாடு போற்றினாய்…
நீ அக்கிரகாரத்தின் அதிசயக்கத்தக்க அக்கினிக்குஞ்சு…
வெள்ளயனுக்கு எதிராக மட்டுமா…
பேராசைக்காரனடா பார்ப்பான் என்று
பார்ப்பனக் கொள்ளையனுக்கு எதிராகவும்
எப்போதும் சுட்டுக்கொண்டேதான் இருந்தாய்…
உன் தலைப்பாவுக்குள் நீ ஒழித்து வைத்ததெல்லாம்
அணுகுண்டுகளும் வெடிகுண்டுகளுமா..?
அது தலையா…பாவா…
தலைப்பாவா…நாட்டு
விடுதலைப்பாவா…இல்லையேல்
வெடிகுண்டுப்பாவா…?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது …
தேசமெங்கும் தோணிகளோட்டி
நீ கண்ட விசித்திரக்கனாக்கள்..
நீயொரு முரண்தொடை…
ரவுத்திரம் காட்டும் உன் மீசை…
இயற்கையின் ரம்மியம் பேசும்
உன் உள்மன ஆசை…
தமிழ்போல் இனிதாவதில்லை
எனும் ஒரு பேச்சு..
மெல்லத்தமிழினிச் சாகும்
எனும் ஒரு வீச்சு…
ஆனாலும் ஒன்றுபட்ட இந்தியமே
எப்போதும் உன்மூச்சு…
மரபுக்கவிதை உனக்குத்தாய்ப்பால்…
வசன கவிதை உனக்குச் சத்துணவு…
வெளிநாட்டுச் சாத்திரங்கள்
விரும்பிச்செய்த பாத்திரம் நீ…
ஆயிரம் தெய்வங்களைத்தேடும்
அறிவிலிகளைச் சாடிய சூத்திரம் நீ…
கவிதை ஆத்திரம் நீ…
தமிழில்…
நவீன பாத்திச்சூடி
புதிய ஆத்திச் சூடியவன் நீ…
சாத்திரச் சழக்குகளைச் சாடியவன் நீ…
காக்கைக் குருவிகளுடன் கூடினாய்…
காடு மலைகளையும் நாடினாய்..அட..
மண்ணில் தெரியுது வானம் என்று அந்த வானத்தையும் பாடினாய்…
நீயொரு இயற்கைக்கவிஞன்…
உன் பிருந்தாவனத்தில்
பிறைக்கொடிகளும் பூக்கும்…
அங்கே கண்ணனுக்கும் இடமுண்டு…
காந்தியும் வருவார்..
காக்கை,குருவிகளும் வரும்…
கண்ணனுக்கும் வண்ணனுக்கும் மட்டுமல்ல
அல்லாவுக்கும் எழுதியது உன் பேனா…
இஸ்லாத்தைப் படியுங்கள்..
உங்கள் இருட்டுக்கள் விலகும் ..
அறிவு விசாலப்படும் என்றும்
முழங்கியது உன் நா…
எத்தனை பூட்டுக்கள் போட்டும்
பூட்டப்பட முடியாத புரட்சிப்புயல் நீ …
குளிர்ச்சிப்படுத்த முடியாத
உச்சி வானத்து வெயில் நீ …
நீ கட்டறுத்துப்பாயும் காட்டாற்று வெள்ளம்…
கலையூறி வரும் கவிமாமழை உள்ளம்…
படித்தவர்க்கு மட்டுமல்ல…
படிக்காதவர்க்கும் நீ
விடுதலைப் பாட்டுதான்…
கவிதை உலகுக்கு ஓர் எடுத்துக் காட்டுதான் …
-
அத்தாவுல்லா, நாகர்கோவில்
add a comment