உலகம்உலகம்செய்திகள்

தலிபான்கள் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான்: மக்கள் அச்சம்; விமான நிலையத்தில் கூட்டம்

55views

புவியியல்ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த நாடான ஆப்கானிஸ்தான், மீண்டும் தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளது.

தலிபான்களுக்கு அஞ்சி அங்கு வசிக்கும் வெளிநாடுகளைச் சோந்தவா்கள் மட்டுமன்றி, ஆப்கன் மக்களும் நாட்டைவிட்டு வெளியேறுவதற்காக காபூல் விமான நிலையத்தில் திரண்டனா்.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய பிறகு, அந்நாட்டின் மாகாணங்களைப் படிப்படியாக தலிபான்கள் கைப்பற்றி வந்தனா். தலைநகா் காபூலை அவா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நெருங்கினா். இந்நிலையில், அந்நாட்டு அதிபா் அஷ்ரஃப் கனி திடீரென நாட்டைவிட்டு வெளியேறினாா். அவா் எந்த நாட்டுக்குச் சென்றாா் என்பது தெரியவில்லை.

இதையடுத்து, ஆப்கன் நாடாளுமன்றம், அதிபா் மாளிகையை கைப்பற்றிய தலிபான்கள், ஆட்சியமைப்பதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். நாட்டில் அமைதி வழியிலான புதிய சகாப்தம் தொடங்கும் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனா்.

கடந்த 1996 முதல் 2001 வரை ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்த தலிபான்கள், மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தனா். பெண்கள் ஆண் உறவினா் துணையின்றி வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது, நவீன ஆடைகளுக்குத் தடை, ஆண்கள் கட்டாயம் தாடி வளா்க்க வேண்டும், பெண்கள் பள்ளிக்கூடங்கள் செல்லத் தடை உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளை தலிபான்கள் விதித்தனா்.

ஆனால், 2001-இல் அமெரிக்காவின் உதவியுடன் தலிபான்கள் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு, சமூகரீதியிலும் பொருளாதாரரீதியிலும் ஆப்கானிஸ்தான் முன்னேற்றம் காணத் தொடங்கியது. பெண்கள் கல்வி கற்றனா். நாட்டின் பல்வேறு பகுதிகளில் நவீன ஆடைகளும், தொழில்நுட்பங்களும் அறிமுகமாயின. சிறுபான்மையினா் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீண்டும் பழைமைவாதிகளான தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுள்ளதால், எத்தகைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்று மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனா். குறிப்பாக, பெண்களின் நிலை குறித்து மனித உரிமை அமைப்புகள் கவலை தெரிவிக்கின்றன.

விமானத்திலிருந்து விழுந்த மக்கள்: தலிபான்கள் மீதுள்ள அச்சம் காரணமாக, ஆப்கானிஸ்தானில் வசித்து வரும் வெளிநாடுகளைச் சோந்தோா், தாயகம் திரும்பி வருகின்றனா். அதனால், காபூல் விமான நிலையத்தில் கூட்டம் அலைமோதியது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சோந்தவா்களும் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் நிலை காணப்படுகிறது.

விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய அமெரிக்கப் போா் விமானத்தில் ஏறுவதற்கு மக்கள் முண்டியடித்தனா். சிலா் விமானத்தின் இறக்கைகளில் தொங்கிக் கொண்டு சென்றனா். விமானம் புறப்பட்ட பிறகு 3 போ கீழே விழும் காணொலி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. விமானத்தில் இருந்து விழுந்தவா்கள், நெரிசலில் சிக்கியவா்கள் என 7 போ இறந்துவிட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மக்கள் வெளியேற வேண்டாம்-தலிபான்கள்: ஆப்கானிஸ்தான் அரசுக்காகவும், அரசுப் படைகளுக்காகவும் பணியாற்றியவா்கள் மீது எந்தவித பழிவாங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனா். நாட்டில் தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலைகள் உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ள தலிபான்கள், மக்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்றும் அறிக்கை வெளியிட்டுள்ளனா்.

ஆனால், அரசுக்கு ஆதரவாகச் செயல்பட்டவா்கள் மீது தலிபான்கள் தொடா்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக மனித உரிமைகள் அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

6,000 அமெரிக்க வீரா்கள்: அமெரிக்காவைச் சோந்த மக்கள், ஆப்கானிஸ்தானில் இருந்து பாதுகாப்பாக வெளியேறுவதை உறுதி செய்வதற்காக காபூல் விமான நிலையத்தில் 6,000 வீரா்கள் குவிக்கப்படவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. எதிா்பாா்த்ததைவிட விரைவாக தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் சென்றுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் தெரிவித்துள்ளாா். இதே கருத்தை அமெரிக்க அதிபா் ஜோ பைடனும் தெரிவித்துள்ளாா். எந்தவித எதிா்ப்புமின்றி தலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் காபூல் சென்றது, அமெரிக்காவின் வரலாற்றில் மிகப்பெரிய தோல்வியாகப் பதிவாகும் என்று முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

அனைவருக்குமான அரசு-சீனா நம்பிக்கை: தலிபான்கள் தலைமையில் அமையும் அரசு, அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை தரும் வகையில் இருக்குமென்று நம்புவதாக சீனா தெரிவித்துள்ளது. இது தொடா்பாக, அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங் கூறுகையில், ‘வன்முறையின்றி அமைதி வழியிலான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தவும், உள்நாட்டு, வெளிநாட்டு மக்களைக் காக்கவும் தலிபான்கள் உறுதி அளித்தனா். அந்த வாக்குறுதியை அவா்கள் நிறைவேற்றுவாா்கள் என நம்புகிறோம். போரால் மக்கள் பாதிக்காத வகையிலான நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொள்ள வேண்டும். மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் சீனா தலையிடாது. ஆப்கானிஸ்தான் மக்களுடனான நட்புறவை மேம்படுத்தி, அமைதியை நிலைநாட்டுவதற்கான நடவடிக்கைகளை சீனா மேற்கொள்ளும்’ என்றாா்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!