தமிழுக்காக பாடுபட்டவர்கள் எண்ணற்றவர்கள் இருந்தாலும் அவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவராத நிலை இப்போது இருக்கிறது. தமிழுக்காக தொண்டாற்றியே தன்னுயிரை ஈந்த பல்வேறு அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள் என பலர் இருந்தாலும் தமிழகம் மறக்கக் கூடாத சிலர்களில் தமிழ்வேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களும் ஒருவர்.
கடந்த 1883 ஆம் ஆண்டு, மே திங்கள் ஏழாம் நாள், கருந்திட்டை எனும் கிராமத்தில் பிறந்தார்கள், பெற்றோர் மிகப் பெரிய செல்வந்தர்கள். காமாட்சி என்ற பெயருடைய அவரது தாயார் பெரிய நாட்டாண்மை குடும்பத்தைச் சார்ந்தவர். வேம்பு, வேம்புப்பிள்ளை அல்லது வேம்பையன் என்றழைக்கப்பட்ட அவரது தந்தையாரும் பெரும்செல்வந்தரே. பருத்திக்கோட்டை என்றொரு சிற்றூரில் நுழைவு வாயிலுடன் பின்புற தெரு வரை நீண்டு பின்பக்க வாசல் உள்ள வீடுகளைக் கொண்டோர் பெருஞ்செல்வந்தாராகப் போற்றப்பட்டனர். அவர்கள் பெரும் விவசாயிகளாகவும் இருந்துள்ளனர். அப்படிப்பட்டவர்களில் ஒருவர் தான் வேம்பையாப்பிள்ளை என்றழைக்கப்பட்ட அவரது தந்தையார், பல கறவை மாடுகளையும், விவசாயித்திற்கென மாடுகளையும், ஆடுகளையும் வீட்டில் தத்தம் பிள்ளைகளை வளர்ப்பது போல் பேணி காத்தும், அதிகமான பணியாள்களைக் கொண்டிருந்த செல்வக்குடி ஒன்றில் பிறந்தோரே தமிழ்வேள் உமாமகேசுவரனும், இவரது தமையனார் த.வே. கிருட்டிணப்பிள்ளையும் ஆவர்.
இவர் பிறந்த 1883 ஆம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய பன்னிரண்டாம் வருடத்தில் தாயார் காமாட்சியம்மாள் இறந்து விடுகிறாள். தாயில்லா பிள்ளையான இவரது கல்வி தடைப் பெற்று விடக்கூடாது என்றெண்ணிய தந்தையார் வேம்புப்பிள்ளை, உமாமகேசுவரனின் சிற்றன்னை பெரியநாயகி என்பவரிடம் ஒப்படைத்து விடுகிறார். அந்த சிற்றனைக்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும் அனைவரையும் நேர்த்தியாக அரவணைத்து வந்தபோதிலும் அவருக்கு உமாமகேசுவரன் மீது அளவுகடந்த அன்புண்டு. தனது மூத்தப் பிள்ளைப் போல் அதிகப் பாசத்துடனே வளர்த்து வந்துள்ளார்.
1800 களிலே பிராமணரல்லாதார் கல்வி கற்க முடியாத காலமாக இருந்த நிலையிலே, அறியாமை நிலை ஒழிக்கும் படியான காலத்தை உருவாக்க, அங்கும் சுற்றுப்புற வட்டாரச் சிறார்களுக்கும் கல்வியைப் போதிக்கும் படியான கருத்துடன், கருந்திட்டை கிராமத்திலே கிருட்டிணப்பிள்ளை என்ற சொந்தக்காரர் ஒருவர் திண்ணைப்பள்ளி ஒன்றினை தொடங்கினார். அவரிடம் மூன்றாம் படிவம் வரை உமாமகேசுவரன் பாடம் பயின்று வரும் காலத்திலே திரு கிருட்டிணப்பிள்ளையவர்களுக்கு உடல்நிலை சரியற்றுப் போன காரணத்தினால், கோட்டையூர் எனும் பக்கத்துச் சிற்றூர் ஒன்றில் திண்ணைப்பள்ளி நடத்தி வந்த திரு. சங்கரன் பிள்ளை என்பாரிடம் சேர்த்து விடப்பட்டார். நான்காம் வகுப்பு வரை கல்வி பயின்ற போதே மிகச்சிறந்த மாணாக்கராக அறியப்பட்டார். அதாவது பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற இலக்கியங்களை சரளமாக ஒப்பிக்கும் திறனைக் காண முடிந்திருக்கிறது. ஆகவே சில நன்மக்கள் பரிந்துரையின் பேரில், தூயபேதுரு என்றப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பில் சேரக்கப்பட்டார். தமிழுடன் ஆங்கிலத்தையும் நன்றாகக் கற்றுத் தேர்ந்தார்.
அவருடைய கற்கும் ஆற்றலை கேட்டோர் யாவரும் வாயடைத்துப் போனார்கள். ஆம், பள்ளி ஆசிரியர் அவரிடம் ஒரு பாடத்தைக் கொடுத்து மனப்பாடம் செய்து மறுநாள் ஒப்பிக்க வேண்டும் எனக் கூறி விட்டால் போதும், மறுநாளே, முழுப் புத்தகத்தையும் சரளமாக ஒப்பித்து விடுவாராம். அறிவோர் யாவரும் வியந்து போகும் அளவிற்கு அற்புதமான திறனை கொண்டிருந்தார். பின்னர், கல்லூரியில் சேர்ப்பிக்கப்பட்டு படித்து வரும் காலத்தில், 1900 ஆம் வருடத்தில் ஒரு துயரச் சம்பவமாக அவரது தந்தையார் வேம்புப்பிள்ளை இறந்து விடுகிறார், மேலும், சில குடும்பச்சூழல்கள் காரணமாக ஓரிரு வருடம் படிப்பை முடிக்கும் காலமும் தள்ளிப் போகிறது. எனினும், தனது சிற்றன்னை ஆதரவுடன் கல்வியார்வம் குறைய விடாது இளங்கலை படிப்பை சிறப்பாக முடித்து விடுகிறார். அந்தக் காலத்தில் குதிரை ஊர்வலம் வைத்து பிரமாண்டமாக திருமணம் செய்விப்பது என்பது, பெரும் செல்வந்தர்களால் மட்டுமே நடத்த முடிவது, நாட்டாண்மைக் குடும்பப் பெரும் செல்வந்தரான உமாமகேசுவரன் பிள்ளைக்கும் மிக ஆடம்பரமாகவே, 1907 ஆம் ஆண்டு பிப்ரவரி ஏழாம் தேதி தூரத்து உறவினர் ஒருவரின் மகளான பெரியநாயகி என்பவருடன் இவருக்கு திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது.
மூன்றும் ஆண் பிள்ளைகளாக பிறந்த அக்குழந்தைகளுக்கு பஞ்சாபகேசன், மாணிக்கவாசகன், சிங்காரவேலன் எனப் பெயரிடப்பட்டு சீரும் சிறப்புமாக வளர்க்கப்படுகிறார்கள். அவர்களுக்கானப் பெயர்களில் காரணமும் உண்டு. அந்த காலத்திலே மிகச் சிறந்த தமிழறிஞர் ஒருவரின் பெயரும், உமாமகேசுவரனின் தாத்தாவின் பெயருமான பஞ்சாபகேசன் எனும் பெயரை முதல் பையனுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். பத்தி இலக்கியத்திலே வெகுமாகப் புகழப்படும் ஒரு உன்னதமான தமிழ்ப் புலவரின் பெயரான மாணிக்கவாசகம் எனும் பெயரை இரண்டாவது மகனுக்கு சூட்டியுள்ளனர். 1916 ல், துவக்கப்பட்டிருந்த தென்னந்திய நலச்சங்கத்துடன் மும்முரமாக பணியாற்றியவர்களில் ஒருவரும் சென்னைத் துறைமுக வளாகத்தில் சிலை கொள்ளுமளவிற்கு சிறப்புற சேவை செய்தவருமான, பொதுவுடைமைத் தலைமைத் தொண்டராக விளங்கிய ஒரு முக்கிய தமிழ் ஆளுமையாக போற்றப்பட்டு வருவரான சிங்காரவேலன் என்பவரின் பெயரை தங்களுக்கு மூன்றாவது மகனுக்கு வைத்தனர்.
மூன்றாவது பிள்ளைப் பிறந்து நான்கே மாதமாக இருந்த நிலையிலே உமாமகேசுவரரின் மனைவி இறந்து போக, தனக்கு நேர்ந்தது போலவே எனது குழந்தைகளும் தாயில்லாப் பிள்ளைகளாகி விட்டார்களே என்று மனம் நொந்து போன போதும், வருத்தமான சூழலை மறந்து துக்கத்தை எறிந்து விட்டு, தானே தனது பிள்ளைகளுக்கு தாயும் தகப்பனுமாக இருந்து நல்லபடியாக பிள்ளைகளை படிக்க வைத்து வளர்க்கிறார். அந்தக் காலத்தில் நீரழிவு நோய்க்கு தக்கதொரு மருத்துவ வசதியில்லாத காரணம் பொருட்டே, மேலும் ஒரு சோகமாக, தனது மூத்த மகன் பள்ளியிறுதி ஆண்டு முடிக்குமுன்னரே நீரழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்து விடுகிறார். இதனால், தஞ்சைக்கல்லூரி ஒன்றில் அறக்கட்டளையை துவக்கி, ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வித் தொடர்பாக உதவும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் பள்ளிக்கட்டண நிதியுதவி வழங்கும்படி செய்துள்ளார்.
தனது மகன் பஞ்சாபகேசன் நினைவாக ஏழைகளின் கல்வித் தொடர்ச்சியில் தொய்வு ஏற்படலாகாதே எனும் சிறப்பான சமூகப் பண்பாகிற அக்கறையில் கல்விக்கென அறக்கட்டளையை தோற்றுவித்து சிறப்பாக பல்லாண்டுக் காலமாக நடத்தியுள்ளார். இடையில் கல்வியைத் தொடர முடியாமல் விட்டோர்களையும் தொய்வு காணாது, தேடிக் கண்டு பிடித்து தீராத விருப்பமாக, தணியாதத் தாகமாக, தனது கல்விப்பணியை சிரமம் பாராது தொடர்ந்து செய்து வந்துள்ளார். இன்றும் தொடர்கிறது.
கல்விக்காக ஓர் அறக்கட்டளையை முதன்முதலாகத் தமிழகத்தில் தொடங்கியவர் என்பது மட்டுமல்ல, தொடர் பெருமைக்குரியர் இவரேயாவார். இதுமட்டுமில்லாமல், பல சிறப்பான தொண்டுகளுக்கு தமிழகம் பொறுத்தவரையில் திரு. உமாமகேசுவரன் அவர்களே முன்னோடி என்பதனைக் கூற அன்னாரது வாரிசுகளாகிய நாங்கள் யாவரும் குறிப்பாக, நான் மட்டற்ற மகிழ்ச்சியுடன், மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்.
தஞ்சைக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றவுடன் வருவாய் தேடிடும் முயற்சியில் முதல் பணியாக தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் எழுத்தாளராக சிலகாலம் திறம்பட வேலைச் செய்திருக்கிறார். அப்போதெல்லாம் மூன்றாம் நான்காம் வகுப்பு படிந்தருந்தாலே எழுத்தாளராக பணிசேர முடிகிற காலத்தில் இளங்கலை படிந்திருந்த இவரால் எழுத்தரகத் தான் நுழைய முடிந்திருக்கிற நிலை, சாதி பேதம் உச்சத்தில் உலவியதையேக் குறிக்கிறது. என்னதான் அருமையான சமூகத்தை சேர்ந்தவராயிருப்பினும், கேடான சமூக அமைப்பிற்குள் உட்படுத்தப்பட்டிருந்த எல்லா மக்களும் தாழ்நிலையில் இருந்து எவரும் மீறிவிடாமலே வைக்கப்பட்டிருந்தனர். சைவ உணவுகளையே உண்டு, நற்பழக்கங்களை செயல்படுத்தி, ஒழுக்கத்தைக் கடைபிடித்து பொறுப்போடு அமைதியாக வாழ்ந்து வரும் நற்குடும்பத்திலிருந்து வருவோர் எவராகிலும் இதேச் சூழல் தான்.
பின்னர், சில காலத்திற்குப்பின் மனிதநேயத்தின் பால் அக்கறை கொண்டு பல புத்தகங்களை வாசிக்கும் வழமையின் காரணமாக ஒரு முக்கியதொரு புத்தகத்தை படிக்க நேர்ந்துள்ளது. “பெர்க்கிலின் ஆல்ஃபிரட்” என்ற அந்த அமெரிக்க அறிஞர் எழுதியிருந்த புத்தகத்தில் கண்ட ஒரு வாசகம் “சமூகச்சேவையில் உன்னதமானச் சேவையாகக் கருதப்படுவது மருத்துவம் அல்லது சட்டம்” இந்த வாசகம் இவரை பெருமளவு ஈர்த்த காரணமாக சட்டம் படிக்க முடிவெடுத்து சென்னை வந்து சேர்ந்தார். சாதிபேத வீச்சு இருந்த காலக்கட்டத்தில் எழுதப்படாத சட்டமாக நீதித் துறையிலும் பணியாற்ற இயலாது. படிக்கவும் முடியாத போதிலும் தட்டுத்தடுமாறி, கா.சு.பிள்ளை என்று அன்பாக மக்களால் அழைக்கப்பட்டு வந்துள்ள கா.சுப்பிரமணியப்பிள்ளை என்பார் சட்டப்படிப்பு கற்றுத் துணைப்பேராசிரியராக பணி துவங்கிய நாளிலிருந்து அறிவுத்திறன், கற்பித்தல் வல்லமை, நற்குணம் கொண்டிருந்தும், பேராசிரியராக தொழில் உயர்வு பெற பெரும் போராட்டம் நடத்த வேண்டியிருந்தது. மிகுந்த செல்வாக்கு மிக்க சர். பி.டி. தியாகராச செட்டி அவர்கள் சென்னைச் சட்டக்கல்லூரி நேரிடையாக வந்து இது குறித்து கேட்கவே அவர் மீது இருந்த மதிப்பு, மரியாதையின் காரணமாகவும் அது நிமித்தம் உண்டான கலந்துரையாடலின் பலனாக திரு கா.சு. பிள்ளை அவர்களுக்கு பதவியுயர்வு கிட்டியது. பேதம் மண்டியிருந்த இழிநிலையினை எண்ணியபடியேயான மனநிலையில், தன்னை நாடி வந்த திரு. உமாமகேசுவரப்பிள்ளை அவர்கள் சட்டக்கல்லூரியில் சேர்ந்து படிக்க வைக்க உதவியது. திரு கா.சு. பிள்ளை அவர்களின் பரிந்துரை கிட்டாவிடில் திரு. உமாமகேசுவரப்பிள்ளை வழக்குரைஞராக ஆகியிருக்க முடியாது.
தஞ்சை மாவடத்திலே பேரும் புகழும் பெற்றிருந்த கே. சீனிவாசப்பிள்ளை என்ற முது வழக்குரைஞரிடம் பயிற்சி பெற்றார். அவ்வாறு பயின்று வரும் காலத்திலே திரு. உமாமகேசுவரப்பிள்ளை அவர்களிடமிருந்த சட்ட நுண்ணறிவு கண்டு வியந்த திரு. கே. சீனிவாசப்பிள்ளை அவர்களே இவருக்கென தனி அலுவலகம் அமைத்துக் கொடுத்து பெரும் வழக்குரைஞராக பேர் பெற்றுத் திகழ வாழ்த்தி வேண்டிய வசதிகளை செய்து கொடுத்துள்ளார். அவர் வாழ்ந்த ஊரிலே வழக்குரைஞரான பிறகு தொழில் மூலம் வருவாய் பெற்று பெருமையுடன் வாழ்வது என்றிருக்காமல், ஏழை எளிய மக்களுக்கு, தன்னால் ஆன்ற உதவி என்பதற்கும் மேலாக வலிந்து அவர்களின் துயர் துடைத்திடும் படியாக சட்டத்திற்குட்பட்டே உரிய நீதி பெறும்படியாக கடுமையாக உழைத்திருக்கிறார் திரு. உமாமகேசுவரப்பிள்ளை.
அவர்கள் வழக்காடிய வகையில், வசதியானவர்களிடமிருந்து பெறுகிற பணத்தைக் கொண்டும், வழக்காடு மன்றத்திற்கு வரவும் பணவசதி இன்றி இருக்கக்ககூடிய ஏழை எளியோர்களின் இல்லத்திற்கும் சென்று போதிய வகையில் பணத்தையும் கொடுத்து அவர்களுக்கான வழக்கையும் சீரிய முறையில் நடத்தி உரிய நீதியையும் பெற்றுத் தந்தே வெற்றி மேல் வெற்றி பெற்றிருக்கிறார். பெரும்புகழ் கண்டிருக்கிறார். எங்களது பெரியோர்கள் திரு. உமாமகேசுவரப்பிள்ளை அவர்களைப் பற்றிக் கூறக் கேட்கும் போது மகிழ்ச்சியின் உச்சநிலைக்கே சென்று விடுவோம். அறிகிற எந்த நெஞ்சமும் உவகையும் உற்சாகமும் கொள்ளாமல் இருக்க இயலாது என நான் உறுதிப் படவேக் கூறுவேன். அன்னாரது வாரிசு என்ற முறையில் நாங்களும் பெருமை கொண்டாலும் அவரைக் காணக் கொடுத்து வைக்கவில்லையே எனும் வருத்தமும் மேலோங்கியே இருக்கிறது.
ஏழு ஆண்டுகளே வழக்குரைஞராக பணியாற்றிய போதும், சிறப்புற விளங்கியமை ஓர் அருமையே. சட்ட வல்லுநராக உயர்வதற்கு சட்ட நுணுக்கங்களை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலும் வழக்கு சம்பந்தமான உள்ளார்ந்த விசயங்களை கூர்ந்தறியும் திறனும் அவருடைய படிப்பின் மீதான ஈடுபாட்டு அடித்தளம் தான் உதவியிருக்கும். ஏழைகள் மீதான மனித நேயத்தில் இருந்துள்ள ஆழ்ந்த பற்று அவரை உச்சத்தில் உயர்த்தி அழகு பார்த்திருக்கிறது என்றால் மிகையாகாது என்றே உறுதியிட்டுக் கூறக் கடமைப்பட்டுள்ளேன். வழக்குரைஞர் பணியினால் தனது ஆங்கிலப்புலமை வெளிப்பாடும் நல்ல பேச்சாற்றல் திறனும் நுணுக்கமாகப் பேசக்கூடிய வல்லமையும் கிடைக்கப் பெற்றேன் என திரு. உமாமகேசுவரப்பிள்ளை அவர்களே கூறியிருக்கிறார். இதனை அவருடன் பழகியிருந்த பெரியோர்களும் வலியுறுத்தி கூறியுள்ளனர்
அரசு சாரா அமைப்புகளில் பதவி
இளம் வயதிலே தஞ்சை வட்ட அரசு சாரா அலுவலகத்தில் பணிபுரிந்துள்ளார். பின்னர், வெகு காலம் பின்னர், சட்டம் படித்ததை வைத்தே வழக்குரைஞர் என்ற வகையிலே தஞ்சை வாழ் மக்களுக்காக என சட்ட ரீதியாக வாதாடியே பெருந்தொண்டாற்றியிருக்கலாம். ஆனாலும், காலம் தாழ்த்தியே வேண்டியன யாவையும் மக்களுக்காக பெற முடியும் என்ற நிலையை புறக்கணித்து, அரசு சாரா அமைப்பின் தலைமைப் பதவி கிட்டியதை அடுத்து மக்களுடன் மக்களாக நின்று, மக்களுக்காக மக்களின் சமூகத் தேவைகள் யாவையும் அரசிடமிருந்து பெற்று பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அவைகளில் பல இன்றும் நாம் கேட்டறியும் போது ஆச்சரியத்தைத் தான் அள்ளித் தரும். இவரின் காலத்தில் தான் இவரது மேற்பார்வையில் இவருடைய முழுமுயற்சியின் பலனாக பல சாலைகள் அமைக்கப்பட்டன.
இவரால் முன்முயற்சி எடுக்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள, நாற்பது மேம்பாலங்கள் தமிழ்வேள் உமாமகேசுவரரின் பேரைச் சொல்லிக் கொண்டு இருக்கின்றன இன்றும் வாழும் அடையாளங்களாக. இன்றுள்ள தொழில்நுட்பமில்லாத அந்த காலத்தில் அரசு சாரா அமைப்பின் தலைமைப் பொறுப்பை வைத்துக் கொண்டே மரபு என்ற தஞ்சைப் பகுதியில் சுமார் ஐம்பது மேல்பாலங்களை மனித முயற்சியினைக் கொண்டு, கட்டியுள்ளார். குறிப்பாக, வயோதிகர்கள், நோயாளிகளை காப்பாற்றும் அவசரஅவசரமான மனநிலையில் செல்ல வேண்டியோர், அன்றாடம் அவ்வாற்றை கடந்து செல்லுவோர் என பலதரப்பட்ட மனிதர்கள் பலர் அவ்வப்போது மரணித்து விடும் தொடர் துயர் சம்பவத்தை கண்டு மகன் பொறுக்காமல் ஆலங்குடி பண்ணியூர் இடையே இருந்த எளிதாக ஆற்றைக் கடக்க வேண்டி வலிமை மிக்க ஓர் மேல்பாலத்தையும் கட்டிச் சாதித்திருக்கிறார். சமூகச் சேவையாகிற ஒரு அவசிய பாலத்தைக் கட்டியமைத்துள்ளார் என்பது பெரிய செய்தியில்லை என்றாலும் இதனால் தேவைப்பட்டிருந்த பெருமுயற்சியைப் பற்றி அறிந்து கொள்வது என்பது தான் மிகவும் சிறப்புக்குரியது.
ஆட்சிச் செய்து கொண்டிருந்த பிரிட்டீஷாருக்கும் இத்துயரவடுக்கள் தெரிந்திருந்த போதும், ஓரிரு இளகிய மனம் கொண்டிருந்த பிரிட்டீஷ் அதிகாரிகளும் செய்யத்தக்கன செய்ய எண்ணியிருந்த போதும், பிறருக்கு நல்லன செய்யும் மனப்போக்கற்ற சாதி, மதபேதச் சூழ்நிலையின் காரணமாக ஏற்பட்டிருந்த இழிநிலையை தனது வாதத்திறமையால் போராடித் தான் வெற்றியைக் காண வேண்டி இருந்தது. பெருஞ்சிரமத்தை மேற்கொள்ள வேண்டி இருந்திருக்கும் என்பதும் சொல்லாமலே புரிந்து கொள்ள முடிகிறதல்லவா.
மேலும், பிரிட்டீஷ் அதிகாரிகளைக் கொண்டே போதுமான பணம் அரசிடம் இல்லையெனச் சொல்ல வைக்கப்பட்டபோது பழிக்கப்பட வேண்டிய நிலைமையறிந்து, உமாமகேசுவரர் அவர்கள் தாமே முன்வந்து அந்த இழப்புகளை தவிர்க்க உதவ வேண்டி தனது சொந்தப் பணத்தைக் கொண்டே அவ்விரு கிராமங்களுக்கான பாலத்தை கட்டிய வரலாறு போற்றத்தக்கது தானே. இன்று அவ்விரு பாலங்கள் நூறாண்டுகளுக்கும் மேலானபடியால் இடித்து விட்டு புதிய பாலம் கட்டப்பட்டு இருக்கிறது. மனித உயிர் இழப்பு இல்லை. இதற்கு முக்கியக் காரணம் தான் சோக வேடிக்கையாக உள்ளது. ஆம், அவ்விரு ஆற்றை ஆற்றுப் பாதையில் மழைக் காலத்தில் கடந்தாலும் உயிரிழப்பு ஏற்படாது, ஏனெனில், பலகாலமாக அவ்வாறுகளில் மழை பெய்தாலும் நீர் தேங்கி இருப்பதில்லை.
அரசு சாரா அமைப்பின் தலைவர் எவரும் அரசிடமிருந்து சம்பளம் பெறத் தக்கவர்களே, எனினும், மக்களிடமோ அரசிடமிருந்தோ வேண்டிய பணத்தைத் திரட்ட போராடிப் பெறும் நிலையை ஒதுக்கி விட்டு, தனது சொந்தப் பணத்தை இதற்கென ஒதுக்கியே செலவழித்து மக்கள் பணியை தனது கனவுக் களப் பணியாக செய்து முடித்திருக்கிறார்.
தாகத்தி மற்றும் தொண்டறையும்பாடி எனும் சிற்றூர்களுக்குத் தேவையான பாலத்தையும் கட்டிக் கொடுத்துள்ளார். ஆற்றைக் கடக்கும் மக்களுக்கான சிரங்களை குறைக்கும் படியாக கட்டுவித்த பாலங்கள் மூலம் முக்கியமாக ஆற்றைக் கடந்து படிக்கச் செல்லும் மாணவச் செல்வங்களும் நன்றிக் கூறத்தக்க அளவில் பெருந்தொண்டாற்றியுள்ளார்.
இன்றைய காலத்தின் கல்வித் தந்தை, கல்விச் செம்மல், கல்விக் கொடை வள்ளல் என அறியப்படுவோரும் புகழ்வோரும் வெட்கப்படத்தக்க வகையில் பொருத்தப்பாடு காண்பதற்கு அப்பால் வைத்து பார்க்கப்பட வேண்டயவர் தமிழ்வேள் உமாமகேசுவர் அவர்களே. ஏனெனில், அன்றைய தஞ்சையில் மொத்தம் இருந்த கல்விக்கூடங்கள் வெறும் ஐம்பது மட்டுமே, இதன் எண்ணிக்கையை கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு சாதனையை எட்டிப் பிடித்த ஒரே மக்கள் தலைவர் இவரே. ஆம் கல்விக்கூடங்களின் எண்ணிக்கையை ஐம்பதிலிருந்து நூற்றி நாற்பதாக மாற்றிக் காட்டவே தஞ்சை முழுவதும் பள்ளிக்கூடங்களை நிறுவியுள்ளார். இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கியக் குறிப்பாவது, பார்ப்பனரல்லாதாருக்கான படிக்கச் செய்ய வைக்கும் அவரது ஏழைக்கான கல்வி குறித்த நோக்கம் மட்டுமல்ல செயலாக்கம் கண்டது தான் அந்த நூற்றி நாற்பது பள்ளிக்கூடங்கள்.
கூட்டுறவு சங்கம் பற்றிய பாடம் சட்டம் படிப்போருக்கு ஒரு பாடமாகும். எதனையும் படிக்கும் போதே செயல்பாட்டளவில் உள்வாங்குதலுக்கு தமிழ்வேள் உமாமகேசுவர் அவர்களின் கூட்டுறவு குறித்து அவர் செயல்பட்டதே இதற்குச் சான்று. ஆம், 1926 செப்டம்பர் 10 ல், இந்தியாவிலே நிலவள வங்கியை முதன்முதலில் மக்களது மேம்பாட்டிற்காகத் தொடங்கினார். 1927 பிப்ரவரி 16 ஆம் தேதி தமிழகத்திலே கூட்டுறவு அச்சகம் ஒன்றை முதன்முதலில் தஞ்சை மாவட்டத்தில் தொடங்கியவரும் இவரே. மேலும், 1938 ல் கூட்டுறவு உற்பத்திக் கழகம் எனும் சங்கத்தை விவசாயிகள் நலனை மனத்தில் இருத்தி ஆரம்பித்துள்ளார். கூட்டுறவின்பால் மக்கள் நேயத்துடனான தனது தணியாத ஈர்ப்பின் வகையில் மேற்கண்ட மூன்றும் முதன்முதலாக தமிழகத்தில் தொடங்கிச் செயல்படுத்திய பெருமை தமிழ்வேள் உமாமகேசுவர் அவர்களுடையதே. சங்கம் அமைத்து தமிழ் வளர்த்திருக்கும் தமிழகத்தில் தனது தமிழ்த் தொண்டாக முதன்முதலில் 1911 மே மாதம் 14 ஆம் தேதி, கரந்தைத் தமிழ்ச் சங்கம் அமைத்து சீரோடும் சிறப்போடும் நடத்தி வந்தவரும் இவரே.
அந்தக் காலத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கம் உலகப் புகழ் பெற்றுத் திகழ்ந்துள்ளது. பெரிய பெரிய தமிழ்ச் சான்றோர், அறிஞர் பெருமக்கள், பெரும்புலவர்கள் என கரந்தைத் தமிழ்ச் சங்கத்துடன் தொடர்பில் இருந்து தமிழை வளர்த்துள்ளனர் என்பது தமிழுக்கு ஒட்டுமொத்த தமிழினமே பெருமை சேர்த்த வரலாறாகும். கரந்தைத் தமிழ்ச் சங்கம் தனது தமையனார் த.வே. இராதா கிருட்டிணப் பிள்ளை அவர்களுடன் இணைந்தே துவக்கப்பட்டு சங்கத்தின் தலைவராக உமாமகேசுவரப் பிள்ளை அவர்களே இருந்து உலகப் பிரசித்தி பெற்று விளங்கும் அளவிற்கு வளர்த்துள்ளார். மேலும் சங்கம் சார்பாக பல நூல்களை அச்சிட்டுள்ளார்.
பழம்பெருமையைப் பாடக்கூடிய ஓலைச்சுவடிகளை பாதுகாக்க ஒரு பெரிய அறையை உருவாக்கியபடியால் இன்றளவும் சில அரிய ஓலைச்சுவடிகளும் காக்கப்பட்டு வருகின்றன. தமிழுக்காக முதன்முதலில் 1915 ல் கட்டணமில்லா தமிழ் நூல்நிலையம் மற்றும் தமிழ் நூலகம் எனப் பயன்பாட்டு வழியில் வழமையாக்கியவரும் அன்னார் தான். தமிழ்க் குடிகள் மறுப்பதற்கில்லை, மறப்பதற்குமில்லை. தொழிற்கல்வி அவசியம் என உணரப்பட்ட காலத்திலே, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கி ஐந்தாண்டுகள் கழித்து, 1916 அக்டோபர் மாதம் ஆறாம் தேதி செந்தமிழ் தொழிற்கல்வி எனும் கைத்தொழிற்கூடத்தைத் துவங்கியவரும் உமாமகேசுவரப் பிள்ளை அவர்களே.
1928 – 1929 ல் இலவசமாக மருத்துவச் சேவை மக்களுக்குத் தேவை என்ற உயர்ந்த மனப்பாங்கின் பொருட்டு கட்டணமில்லா மருத்துவமனையை முதன்முதலில் கட்டி மக்களுக்கான மருத்துவ தொண்டினைச் செயல்படுத்தியுள்ளார்.
அன்றைய தமிழகத்தில் தான் இந்தியாவின் மற்ற மாநிலங்களை விட அதிகமாக நாளிதழ், வாராந்திர மற்றும் மாதாந்திர பத்திரிக்கைகள் அதிகம். தமிழ்ப் பெருமையை மக்கள் கூடுதலாக அறியும் படியாக, கரந்தைத் தமிழ்ச் சங்கம் தொடங்கிய நான்காம் வருடத்திலே தமிழ்ப்பொழிவு எனும் நயமிக்கத் தலைப்புடன் கூடிய தமிழுக்கான மாதப் பத்திரிக்கை ஒன்றினையும் தொடங்கி நல்லத் தமிழ் உலா வரச் செய்துள்ளார்.
தமிழக வரலாற்றில் குறிப்பாக தமிழ்த் தொண்டு மற்றும் தமிழகத்திற்கான சேவை என அறிய வரும் எவரும் அந்த உன்னதமான சொல்லாகிற “முதன்முதலில்” என்று உச்சரிப்பில் கூடவே சேர்த்துப் பேசப்பட வேண்டிய பல செயல்களை நடைமுறைப்படுத்தியவர் உமாமகேசுவரப் பிள்ளை அவர்களையேச் சேரும். உதாரணத்திற்கு, மனோன்மணியம் சுந்தரனார் பிள்ளை அவர்களின் சிந்தனையில் தோன்றிய புகழ் மிக்க சொல்லாடல்களாகத் தொடங்குகிற “நீராரும் கடலுடுத்த” எனும் தமிழ்த் தாய் வாழ்த்தாக 1972 லிருந்து போற்றப்பட்டு பாடப்பட்டு வருகிற தமிழ்த் தாய் வாழ்த்தை முதன்முதலில் 1920 களில் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் அறிமுகப்படுத்தியதோடு அல்லாமல் ஒவ்வொரு தமிழ் நிகழ்ச்சிகளிலும் பாடச் செய்திருக்கிறார். இன்றும் பாடப்படுவதில் அவர் புகழும் இருந்தே வருகிறது. இதனை அறியாமல் இருக்கிறது தமிழ்ச் சமூகம் என்பதனை ஒதுக்கிப் பார்த்தாலும், உமாமகேசுவரப் பிள்ளை அவர்களையே மறந்திருக்கிறது என்பதில் அவருக்கு நேர்ந்த அநீதி மட்டுமல்ல, அவருக்கான மதிப்பு, புகழுக்கு இழைக்கப்பட்டு வரும் இரட்டடிப்பு மோசமே.
மராட்டிய மன்னர் சரபோஜி ஆண்ட காலத்தில் தன் அறக்கட்டளைச் சார்பில் நடத்தி வந்த திருவையாறு கல்லூரியில் பயிற்று மொழியாக சமற்கிருதம் கற்பிக்கும் நிலைக்கு மன்னருக்கு அழுத்தம் தந்து தமிழில் பாடம் நடத்த விடாமல் பார்ப்பனர்கள் பல்லாண்டு காலம் பிழைப்பும் நடத்தி வந்தும் பார்ப்பனருக்கே முழு ஆதரவு கிடைக்கும் படியே கோலோச்சி வந்துள்ளனர். இந்த நிலையை மாற்றி அமைத்து அனைத்து மாணவர்களும் தமிழை பயிற்று மொழியாக்கி கல்லூரிப் பெயரையும் எல்லாருக்குமான அரசுக் கல்லூரியாக விளங்கச் செய்தவர் உமா மகேசுவரன் பிள்ளை அவர்களையேச் சாரும்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் தமிழ்ச் சான்றோர்களால் முன்னெடுக்கப்பட்டு தமிழ் செம்மொழி ஆனது சமீபத்திய வரலாறு. ஆனால், நீதிக்கட்சியாக மக்களால் வழங்கப்பட்டு வந்த தென்னிந்திய நலச் சபை தமிழக ஆட்சிப் பொறுப்பில் இருந்த காலகட்டத்திலே அதாவது 1919 ஆம் ஆண்டில் தமிழைச் செம்மொழியாக ஆக்கி விட வேண்டும் எனத் தீர்மானம் போட்டவரும் இவரே.
தமிழகத்தில் தமிழுக்கென்று தனிப் பல்கலைக் கழகமும் சமீபத்தல் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், எவரும் ஆச்சரியப்படும்படியாக தமிழுக்கென்று தனியாகப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என 1922 ஆம் ஆண்டிலே தீர்மானமும் நிறைவேற்றி அரசுக்குப் பரிந்துரை செய்து, முதலில் குரல் கொடுத்தவர் ஐயா உமா மகேசுவரன் பிள்ளை அவர்களே.
1937 ல் இராசாசி முதல்வராக பொறுப்பிற்கு வந்த போது தமிழைப் புறக்கணிக்கும் படியான நிலைப்பாட்டினை மேற்கொள்ளவே தமிழகத்தில் இந்தி திணிப்பை கொண்டு வந்தார். இதனை எதிர்த்து தீர்மானங்களை எடுத்ததோடல்லாமல், களத்தில் இறங்கிப் போராடவும் துணிந்து கொதித்தெழுந்த முதல் தமிழறிஞரும் தமிழ்வேள் ஐயா அவர்கள் தான் என்றால் மிகையில்லை.
வடமொழிச் சொல்லாகப் புழக்கத்தில் பயன்படுத்தப் பட்டு வந்த ஸ்ரீமான், ஸ்ரீமதி என்ற சொற்களுக்கு மாற்றாக, தூயத் தமிழ்ச் சொல்லாக திருமகன் மற்றும் திருவாட்டி என்றேப் பயன்படுத்தப் பட வேண்டும் என அரசையே வலியுறுத்தி அரசாணையை வெளியிடச் செய்து கைப் பழக்கத்திற்கு கொண்டு வந்தப் பெருமையும் ஐயாவின் துடிப்பான செயல்பாட்டினை நன்கு உணர்த்த வல்லது. இன்று இவ்விருச் சொற்களும் சுருங்கி, திரு மற்றும் திருமதி எனப் புழக்கத்தில் உள்ளது எனினும் இவ்வாறு அழைப்பதிலும் தவறில்லை என்றாலும், தூய தமிழ் மனத்தினால் தூயத் தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தும் முன்னெடுப்பினைத் தொடங்கியவர் தமிழுள்ளம் எப்பேர் பட்டதென தெள்ளத் தெளிவாக தெரிவதற்காகவே இவ்வுதாரணம் என்றறிவோம்.
இன்றுள்ள தமிழ் இளையக் குமுகாயத்தினர் தமிழ் மொழி மேம்பாட்டிற்கென உழைக்கும் போக்கு இல்லா நிலை வருத்தற்குரியதென அறியும் சிலராவது முனைப்புக் காட்ட வேண்டும் என்பது எல்லா மக்களின் எதிர்பார்ப்பாகும். உமா மகேசுவரன் பிள்ளை அவர்கள் தமிழ்ப் படுத்திய பல வார்த்தைகளில் சிலக் குறிப்பிடும் போதே கலப்பற்ற விதமாக தமிழைப் பயன்படுத்த எல்லாரும் முயற்சிக்க வேண்டும் எனும் ஐயாவின் உள்ளார்ந்த ஏக்கத்தை அறிய முடியும். பத்திராதிபர், சந்தா, விலாசம், VPP போன்றப் பல சொற்களை தூயத் தமிழ் சொற்களாகப் பயன்படுத்தப் பட அவைகளுக்கு இணையான வார்த்தைகளாக பொழித்தொன்றன், கையொப்பத்தொகை, உறையுள், விலை கொள்ளும் அஞ்சல் எனக் கொடுத்து தமிழகம் பின்பற்றிட ஆவனச் செய்து, தானும் உரிய வாக்கியங்களில் தொடுத்து பயன்படுத்தி வந்துள்ளார்.
மேலும், அரிய பலப் பழையத் தமிழ் நூல்களைப் பதிப்பித்து இருக்கிறார். முக்கியமாக, ஈழத்தின் யாழ்ப்பாணச் சரித்திரத்தை விலாவரியாக விளக்கக்கூடிய யாழ்நூல், நக்கீரர், கபிலர் முதலானோர் பற்றியப் புத்தகங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் தமிழ்த் தொண்டு மற்றும் அரசியல் தொண்டும் பின்பற்றப் படாத பெருத்த இடைவெளித் தேக்கநிலை ஓர் அவலநிலையோ என்றே எண்ணத் தோன்றுகிறது.
அரசியல் தொண்டு
1885 ஆம் ஆண்டில் ஆங்கிலேயராகிய எச்.யூ. ஹூயூம் என்பவரால் இந்திய விடுதலைக்காக ஓர் இயக்கம் இந்தியரல்லாதவரால் தோற்றுவிக்கப்பட்டது. ஆனாலும், அதன் தலைவராக ஒரு வங்காளியை நியமித்து தான் அவ்வியக்கத்தில் 15 வருடங்களாக பொதுச் செயலாளராக பணியாற்றியுள்ளார். காங்கிரசு இயக்கம் தொடங்கப்பட்ட நாட்களிலிருந்தே ஆதிக்க இயக்கமாக மாறிப் போன நிலையில் மற்றோருக்காகக் குரல் கொடுக்க வேண்டுய நிர்பந்தமும் ஏற்பட்டது. மேலும், யார், யார் தாழ்ந்தவர் எனப் பாகுபடுத்தி, தாழ்ந்தோராக கருதியே ஒரு பொருட்டாகவே மதியாமல் அவர்களைக் கண்டால் எள்ளி நகையாடியும், பலவித தொல்லைகளை, சாதீய ரீதியாக பல இன்னல்களை ஏற்படித்தி, அவர்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் இழிவுபடுத்தச் செய்தும், தாழ்வு மனப்பான்மைகளைத் தூண்டிவிட்டு தனது மேலாதிக்க உணர்ச்சிகளை வெளிப்படுத்தி உல்லாசம் அனுபவித்து வந்துள்ள இழிநிலைப் பொறுக்காத நல்லோர்களும் மிகவும் துச்சமாக நடத்தப்படுவதை எண்ணி எண்ணி வருந்தினர்.
இதன் காரணமாகவே, பொன்னேரிக்கு அருகிலுள்ள சின்னத்தாவாரம் எனும் ஊரில் வாழ்ந்து வந்த மருத்துவர் நடேச முதலியார் அவர்கள், பின்னர், சென்னை திருவல்லிக்கேணியிலுள்ள பெரிய தெருவில் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்தார். இவ்வீட்டினை இன்றும் காணலாம். தென்னிந்திய நலவுரிமைக் கழகம் உருவாகக்காரணமாகவும் ஆணிவேராகவும் இருந்தவரான மருத்துவர் நடேச முதலியார் அவர்கள், ஏனையோருக்கான ஒரு சங்கம் தோற்றுவிக்கப்பட வேண்டுமென்று தீராத ஆதங்கத்தின் பலனாக அன்றைய சென்னை மாகாணத்தில் வாழ்-ஆளுமைகளை சந்தித்து வலியுறுத்தி சர். பி.டி. தியாகராய செட்டி, தாராவாட் மாதவன் நாயர் மற்றும் சில முக்கியத்தர்களைக் கொண்டு 1916 நவம்பர் மாதம் 20 ஆம் தேதி தென்னிந்திய நலவுரிமைக் கழகம் உருவாக்கினார். இவ்வியக்கம் மேன்மேலும் வலுப்பெற்று வளர்ப்பதற்காக, சென்னை மாகாணத்தை நான்கைந்து பகுதிகளாக பிரித்து தகுதியுடைய சிலரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.
அப்படியாக ஒப்படைக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்திற்கு உமா மகேசுவரன் பிள்ளை அவர்கள் உடனடியாக துணிந்து செயலாற்றத் தொடங்கி, மக்களுக்கு ஏற்படும் இன்னல்களையும், கல்வியறிவு பெற முடியாத அளவிற்கு தடை உண்டாவதையும், உழைக்காமலே ஏய்த்துப் பிழைப்பு நடத்தி ஆதிக்கம் செலுத்தி வரும் முகத்தை அம்பலப்படுத்தி மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டி தென்னிந்திய நலவுரிமைக் கழகத்தை வலிமை மிக்க கழகமாக தஞ்சையில் வளர்த்தெடுத்துள்ளார்.
இராமலிங்கர் என்றப் பெயருடன் வழங்கப்பெற்ற பனகல் அரசர் சென்னை மாகாணத்தின் முதல்வராக பொறுப்பேற்று ஆட்சி நடத்திய காலத்தில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில், உமா மகேசுவரன் பிள்ளை அவர்களுக்கு ராவ் பகதூர் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளார். இது இவர் பெற்ற முதல் பட்டமாகும். வங்கக் கவிஞர் ரவிந்தரநாத் தாகூர் என்பவரால் துவக்கப்பட்டு சீரும் சிறப்புடன் நடத்தப்பட்டு வந்த சாந்தி நிகேதன் எனும் கல்விக் கூடம் போல் தானும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை பேரும் புகழுடன் வளரத் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டதன் பேரிலும் ஒரு மாநாட்டில் உமா மகேசுவரன் பிள்ளை ஐயாவிற்கு “தமிழ்வேள்” எனும் பட்டமும் வழங்கப்பட்டது.
பதிப்பு கொண்டு வருவதற்கு முன்னோடிகளாக விளங்கியவர்கள் பாண்டித்துரை தேவர் மற்றும் தமிழ்வேள் ஐயா அவர்களும் தான். சிலப்பதிகாரம், தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு பல நூல்களை கரந்தைத் தமிழ்ச் சங்கம் மூலமாக பதிப்பித்துள்ளார்.
1911 மேத் திங்கள் 14 ஆம் தேதி, உமா மகேசுவரன் பிள்ளை அவர்களின் தமையனராகிய த.வே. இராதா கிருட்டிணப் பிள்ளை அவர்கள் மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு இணையாக ஒரு சங்கத்தை நிறுவும் பொருட்டு பாண்டித்துரை தேவரால் மதுரைத் தமிழ்ச் சங்கம் நான்காம் தமிழ்ச் சங்கமாகத் தோற்றுவிக்கப்பட்டதால், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தொடங்கினார்கள். பல சங்க நூல்களைப் புதுப்பித்து தமிழுக்குப் புத்துணர்வு ஊட்டவுமாகவும் தான் தொடங்கப்பட்டது. தொய்வில்லாமல் நடத்தியே ஐந்தாம் தமிழ்ச் சங்கமாக, புகழ் பெற்று தமிழ் மேன்மேலும் சிறப்புற விளங்கும்படி பிறத் தமிழ்ச் சான்றோர்களும் போற்றும்படியாக, இதன் தலைவரான உமா மகேசுவரன் பிள்ளை அவர்கள் செவ்வனே பணியாற்றியுள்ளார்கள். இதற்காகவே வலிமையானவன், சிறப்பானவன் என்ற பொருளுடைய “துங்கை” எனும் இன்னொரு பட்டத்தையும் பெறுகிறார்.
கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் புரவலாக இருந்தோர் சிதம்பரம், முத்தையா போன்ற பொத்தாட்சி செட்டியார்கள். அவர்களால் தமிழின் பெருமைகள் உலகப் பிரசித்திப் பெறத் தொடங்கிற்று. இதன் உறுப்பினர்களாக பல முன்னுதரணமாக இருந்த தமிழ்ச் சான்றோர்களாகிய வ. சாமிநாதப்பிள்ளை, ஆர். வெங்கடாசலம், எல். உலகநாதப்பிள்ளை, தாமு. வெங்கடச்சாமி நாட்டார், கந்தசாமி நாட்டார், கோபால்சாமி, இரகுநாத இராசமாணிக்கம், சர் ஏ.டி. பன்னீர்செல்வம் போன்றோர்களால் தமிழ் மேன்மேலும் பொலிவுப் பெறத் தொடங்கி உலகம் முழுவதும் பேசப்படலாயிற்று.
வேற்று மொழி கலவாமல் தமிழில் பேசப்படவும் எழுதப்படவும் உறுதுணையாயிருத்தல், உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல் அனைத்தே புலவர் தொழில் எனும் குறளுக்கு ஏற்ப எல்லா தமிழ்ச் சான்றோர்களும் புலவர்களும், தமிழ் அறிஞர்களும் அவ்வப்போது ஒன்று கூடல், தமிழ் இலக்கியங்களைப் பரப்புதல், சிறப்பானதான முத்தமிழின் இயல் இசை நாடகத்தை உலகறியச் செய்தல், என பல மேன்மைமிகு குறிக்கோளுடன் தொடங்கப்பட்ட சங்கம் தான் கரந்தைத் தமிழ்ச் சங்கம். இதன் பொருட்டே இலக்கண இலக்கிய வளமிக்க நம் தாய்மொழித் தமிழ் உலகெங்கும் கொண்டுச் செல்லப்பட்டது. அறிவார்ந்த தமிழ்ச் சமூகம் பரந்து பட்ட உலகின் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வரும் அனைவரையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களின் தமிழ் அறிவாற்றல் மற்றும் புலமையை வெளிக்கொணரும் பணியை திறம்படச் செய்யப்பட்டது. இதற்கெல்லாம் முழுமுதற் காரணமாக இருந்த உமா மகேசுவரன் பிள்ளை அவர்கள் மற்றும் அவரது அண்ணா இராதாகிருட்டிணப்பிள்ளை அவர்களையும் சாரும்.
சிறு வயதிலேயே மிகச்சிறந்த மாணவராக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டதோடு அல்லாமல் தமிழக மக்களும் கல்வி பெறும்படியாக உழைத்தும், தஞ்சை மாவட்ட மக்களுக்கு அளப்பரிய வகையிலே பல தலைமுறைகளும் மறக்கவொண்ணாதவாறு, பல்வேறு குமுகாயப்பணியைச் செய்தும், சட்டம் படித்து ஏழைச் சிரமத்தை குறைக்கும்படியாக ஏழைகளுக்கு கட்டணமில்லாமல் வழக்கு நடத்தி, வெற்றியால் அவர் தம் துயர் துடைத்தும், அறியாமையில் உலகம் புரியா மக்களுக்கு தென்னிந்திய நலச் சங்கத்தின் சார்பாக அறிவு சார்ந்த விழிப்புணர்வு ஊட்டியும், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தைத் தோற்றுவித்து தமிழை உலகம் அறியும் படியாக தமிழுக்கு தொண்டாற்றியும், உலகத் தமிழ்ச் சான்றோர்களை ஒன்றிணைத்து வளர்த்துள்ள அரும்பணியைச் செய்தும் கட்டணமில்லா நூலகம் மற்றும் கட்டணமில்லா மருத்துவமனை, கூட்டுறவு சங்கம் எனப் பல குமுகாயத்திற்கு அத்தியாவசியமான பணிகளை நேர்த்தியாகத் தொடர்ந்து நடத்தியும் தனக்கான ஆளுமையை தன் தலைமுறைக்குப் பின்னர் வரும் எவரும் பின்பற்றத் தக்க அளவில் சிறப்பாக வாழ்ந்து வழிகாட்டியுள்ள தமிழ்வேள் உமா மகேசுவரன் பிள்ளை அவர்கள் புகழ் என்றென்றும் நீடித்திருக்குமாக.
தஞ்சைப் பெருவுடையார் கோயிலை கட்டிய தமிழகத்தின் ஆகச் சிறந்த மாமன்னராகப் புகழ் பெற்று விளங்கும் அருண்மொழி வர்மனாகிய பதினோராம் நூற்றாண்டின் இராச ராசச் சோழன் ஓலைச்சுவடிகளை மீட்டெடுக்கும் பணியிலும் மாமன்னராக இருந்தார். குறிப்பாக தேவாரம் மற்றும் நாலாயிரத் திவ்வியப்பிரபந்தம் எனும் பத்தி இலக்கயங்கள். வெகு காலத்திற்குப் பின்னர் எல்லீஸ் டங்கன் என்பவர் ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்துள்ளார். கைவரப்பெற்ற திருக்குறளின் சில அதிகாரத்திற்கு தன் சொற்ப வாழ்நாளுக்குள் (இவரது மரணம் 36ஆம் அகவையில்) ஆங்கில உரையும் எழுதியுள்ளார். ஓலைச்சுவடி சேகரிப்பதில் சுணக்கம் ஏற்பட்டதன் அல்லது முக்கியத்துவம் உணரா மக்கள் மனநிலையால் பல சங்க கால ஏடுகளை நமக்குக் கிடைக்கப் பெறாமல் போனது. சமீபத்திய பத்தி இலக்கியமான திருப்புகழ் 16,000 செய்யுளைக் கொண்டது. நமக்குக் கிடைத்திருப்பதோ 1,356 மட்டுமே. மீண்டும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஆறுமுக நாவலர் தொடங்கி சில சங்க கால ஓலைச்சுவடிகளை மீட்டெடுத்துள்ளார். பின்னர், இவரின் மாணவரான சி.வை. தாமோதரம் பிள்ளை அவர்களும் உ.வை. சாமிநாதய்யரும் பெருமளவு சங்க கால ஓலைச்சுவடிகளைக் கண்டெடுத்து உரை எழுதியுள்ளார்கள்.
கதிரவன் எனத் திருத்திய போதும், எனது பழைய பெயரான திவாகரன் என்ற வடப்புல பெயராக நிலைப்பெற்றிருப்பது என்பது நமது தமிழ்ச் சமூகம் பண்டைய தமிழ்ப் பெயர் வைப்பு நிலையை மறந்து பாரம்பரியம் இழந்துள்ள காலத்தைத் தான் குறிக்கிறது.
-
அரிமா த.கு. திவாகரன்