‘தமிழகத்தில், 5 சதவீதம் பேருக்கு தான் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதால், ஊரடங்கு தேவையில்லை,” என, தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் நேற்று கொரோனா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த பின், அவர் கூறியதாவது:தமிழகத்தில் இதுவரை, கொரோனா தடுப்பூசி முதல் டோஸ், 94.68 சதவீதம் பேரும், இரண்டாம் டோஸ், 85.47 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசியால், மக்களிடையே, 88 சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர்., பரிசோதனையில், 10 சதவீதத்துக்கும் மேல் தொற்று உறுதி செய்யப்பட்டாலோ, தொற்று பாதிப்பு எண்ணிக்கை, 40 சதவீதத்துக்கும் மேல் இருந்தாலோ தான் ஊரடங்கு தேவை.தற்போது, தமிழகத்தில், 5 சதவீதம் பேர் தான் தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதால், ஊரடங்கு தேவையில்லை.
தனியார் மருத்துவமனைகளில், இலவச பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும்.’பிஏ4, பிஏ5’ என, உருமாறிய கொரோனா பாதிப்பு, இந்தியாவில் சில மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை.காரைக்கால் மாவட்டத்தில் காலரா பாதிப்பு இருப்பதால், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன; காலரா பாதிப்பு நம் மாநிலத்தில் இல்லை.சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4,308 பணியிடங்கள், செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.