டோக்கியோ ஒலிம்பிக் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் பெரும்பாலான நாடுகள் பதக்கங்களை குவித்துவந்தன. இந்திய வெண்கலம், வெள்ளி பதக்கம் பெற்ற நிலையில் தங்கம் பெறவில்லை. இதனால் இந்திய ரசிகர்கள் அனைவரும் ஏக்கத்தில் இருந்தனர் என்றே கூறலாம்.
ஆனால், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, டோக்கியோ ஒலிம்பிக்கில் ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று நடந்த ஈட்டி எறிதல் போட்டியில் 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்து தங்கப்பதக்கம் வென்றார். ஒலிம்பிக் வரலாற்றில் தடகள போட்டிகளில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இதுதான் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
அவர் பதக்கம் வென்றதை இந்தியாவே கொண்டாடியது. இந்தியா 1 தங்கம், 2 வெள்ளி, 4 நான்கு வெண்கல பதக்கங்கள் என 7 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் 48வது இடத்தை பிடித்தது. இதனையடுத்து அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகிறது. அந்தவகையில், நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசாக வழங்கப்படும் என்று அரியானா மாநில அரசு அறிவித்திருந்தது. நேற்று நடந்த பாராட்டு விழாவில் ரூ.6 கோடிக்கான காசோலையை அரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா வழங்கினார்.
நீரஜ் சோப்ராவினால் விழாவில் கலந்து கொள்ள இயலாததால் அவரது சார்பில் அவரது மாமா பரிசுத்தொகையை பெற்றுக் கொண்டார். இதே போல் வெள்ளிப்பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் ரவிகுமார், வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா முறையே ரூ.4 கோடி, ரூ.2½ கோடி வீதம் பெற்றுக்கொண்டனர்.