தங்கத்திலிருந்து பிட்காயினுக்கு மாறும் இந்தியர்கள்: 2020-ல் ரூ.2.97 லட்சம் கோடி முதலீடு
இந்தியர்கள் கடந்த ஆண்டில் ரூ.2.97 லட்சம் கோடியை பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியர்கள் தங்கத்தில் அதிகஅளவில் முதலீடு செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயினில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகிறார்கள். கரோனா பாதிப்புக்குள்ளான 2020-ம் ஆண்டில் இந்தியர்கள் ரூ.2.97 லட்சம் கோடி அளவுக்கு இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். முந்தைய ஆண்டில் இது ரூ.1,485கோடியாக இருந்தது. இதற்குக்காரணம் பெரும்பான்மை முதலீடுகள் தங்கத்திலிருந்து பிட் காயினுக்கு மாறியிருப்பதுதான் என்று கூறப்படுகிறது.
பிட்காயின்கள் பல நாடுகளில் அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், அதன் வர்த்தகம்தொடர்ந்து நடந்து கொண்டிருக்கி றது. இந்தியாவிலும் பிட்காயின் வர்த்தகப் பரிவர்த்தனை சேவைகளை வழங்கக் கூடாது என2018-ல் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை அனுப்பியது. இதில் சில மோசடி சம்பவங்கள் நடந்ததால் இந்த நடவடிக்கையை எடுத்தது.
ஆனால் ரிசர்வ் வங்கியின் இந்தநடவடிக்கையை உச்ச நீதிமன்றம் கண்டித்ததோடு, மார்ச் 2020-ல் ரிசர்வ் வங்கி தடையைத் திரும்பப் பெறவும் உத்தரவிட்டது. அதன் பிறகு ரிசர்வ் வங்கி தனது சுற்றறிக்கையை திரும்பப் பெற்றது.
ரிசர்வ் வங்கியின் தடைவிலக்கப்பட்ட பிறகு பிட்காயின் வர்த்தகம் முன்பை விட அதிகமாக சூடுபிடித்தது. முதலீட்டாளர்கள் உற்சாகமாக முதலீடு செய்தார்கள். ஓராண்டுக்கு முன்புரூ.78 கோடியாக இருந்த ஒருநாள் வர்த்தகம், இன்று ரூ.757 கோடியாக உயர்ந்துள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி 1.5 கோடி இந்தியர்கள் பிட்காயின்களில் முதலீடு செய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெரும்பாலும் 18 முதல் 35 வயதுகளில் உள்ளவர்கள் இதில் ஆர்வமாக முதலீடு செய்து வருகின்றனர். இந்த வயதில் உள்ளவர்கள் தங்கத்தில் முதலீடு செய்வது குறைந்துள்ளதாக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது.
அதேசமயம் பிட்காயின் வர்த்தகங்களுக்கான வரி விதிமுறைகள் எதுவும் இல்லாததால் எப்போது வருமான வரித் துறையிடமிருந்து ரெய்டு வரும், நோட்டீஸ் வரும்என்று தெரியவில்லை என்கிறார்கள். விரைவில் முறைப்படுத்தப்பட்ட வர்த்தகமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.