டிஜிட்டல் பல்கலைக்கழகம் – இந்திய கல்வித் துறையில் புரட்சி: இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் உருவாக்கம்
இந்தியாவில் டிஜிட்டல் பல்கலைக் கழகம் தொடங்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
டிஜிட்டல் பல்கலைக்கழகம் என்றால் என்ன, அது எப்படி செயல்படும்? என்று கல்வியாளர்களும் மாணவர் சமுதாயமும் குழம்பிவந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, கடந்த மாதம் நடத்திய இணைய கருத்தரங்கு மூலம் இதற்கான அடுத்தகட்ட நகர்வு ஏற்பட்டுள்ளது.
டிஜிட்டல் பல்கலைக்கழகம் குறித்த நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தும்படி கல்வித்துறை அறிஞர்களையும், உயர் அதிகாரிகளையும் பிரதமர் கேட்டுக் கொண்டார். அதுமட்டுமின்றி, ‘அனைத்து பல்கலைக்கழகங்களும் சேர்ந்து உருவாக்குவதுதான் டிஜிட்டல் பல்கலைக்கழகம். இது செயல்பாட்டுக்கு வந்தால் கல்லூரி மற்றும் பல்கலை.களில் இடம் கிடைக்கவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. மாணவர் சேர்க்கைக்கு எந்த வரம்பும் இல்லை’ என்று குறிப்பிட்டு டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் வடிவத்தை கோடிட்டுக் காட்டினார்.
பிரதமர் எடுத்த முயற்சியின் தொடர்ச்சியாக உயர்கல்வித் துறை செயலர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் உயர்கல்வித் துறையை நிர்வகிக்கும் பொறுப்பில் இருப்பவர்கள் கூடி, டிஜிட்டல் பல்கலைக்கழக திட்டத்தை அடுத்த
கட்டத்துக்கு கொண்டு செல்வது குறித்து விவாதித்தனர். அதில் சான்றிதழ், டிப்ளமோ, பட்டப்படிப்புகளை டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பிளஸ் 2 தேர்ச்சிபெற்ற யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து பட்டம் பெற முடியும். மாணவர் சேர்க்கை இடங்களுக்கு எந்த வரையறையும் இல்லை. எத்தனை மாணவர்கள் சேர்ந்தாலும் அனைவருக்கும் டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் பட்டம் வழங்க முடியும். தற்போதுள்ள நடைமுறையில் மாணவர்களை கழித்து வெளியேற்றும் சேர்க்கை முறையே பின்பற்றப்படுகிறது. இதில் பல மாணவர்கள் உயர்கல்வி மையங்களில் இடம் கிடைக்
காமல் வெளியேறும் நிலை ஏற்படுகிறது. இப்பிரச்சினைக்கு டிஜிட்டல் பல்கலைக்கழகம் தீர்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய டிஜிட்டல் பல்கலைக்கழகம், இணையத் தொடர்புடன் கூடிய ‘ஹப்-ஸ்போக் மாடல்’ மூலம் இயங்கும். அதாவது, இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் டிஜிட்டல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக இருக்கும். அவை அனைத்திடம் இருந்தும் பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் குறித்த வீடியோ விவரங்களைப் பெற்று அவற்றை மாணவர்களுக்கு வழங்கும் மையமாக டிஜிட்டல் பல்கலைக்கழகம் செயல்படும்.
இந்தியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மையமாக டிஜிட்டல் பல்கலைக்கழகம் செயல்பட்டு ஒரே இடத்தில் மாணவர்கள் சேரும் வகையில் உருவாகும். இந்த புரட்சிகரமான முயற்சிக்கு நிலையான இணையத்தொடர்பு, அவசியமான மின்னணு சாதனங்கள், மாணவர்கள் பாடங்களை கவனிக்கும் காலவரையறை, ஆன்லைன் மூலம் பாடங்களை மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முறை ஆகியவை சவால்களாக இருக்கும் என்று கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அதேநேரம், சவால்களைக் கடந்து 6 மாதம் முதல் ஓராண்டுக்குள் செயல்பாட்டுக்குள் அடியெடுத்து வைக்க வேண்டும் என்று மத்திய அரசு கால நிர்ணயம் வகுத்துள்ளது. இந்த முயற்சியில் பைஜுஸ் போன்ற கல்வி கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் அமைப்புகளையும் பயன்படுத்திக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் உள்ள தொழில்நுட்ப உதவிகளை டிஜிட்டல் பல்கலைக் கழகத்துக்குப் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டத்தில் உரிய திருத்தங்களைக் கொண்டு வந்து கல்விப்பணியில் தனியாருக்கும் முக்கியப் பங்களிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கான விதிகளை 2 மாதங்களுக்குள் உருவாக்கி வெளியிடும் பொறுப்பு யுஜிசி-யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 8-ம் வகுப்பில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 15 லட்சம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 84 லட்சத்து 65 ஆயிரம் பேர் மட்டுமே கல்லூரிகளில் சேருகின்றனர். இன்னும் 15 ஆண்டுகளில் 18 முதல் 23 வயதுடைய இளைஞர்களில் 50 சதவீதம் பேரை உயர்கல்விக்குக் கொண்டு வர வேண்டும் என்ற இலக்கோடு டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த முயற்சிக்கு உறுதுணையாக, படித்தவர்கள் நிறைந்த மாநிலமாகக் கருதப்படும் கேரளாவில் முதல் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறப்பாகச் செயல்பட்டு வரும் கேரள நிர்வாகவியல் ஐஐஐடி-யை தரம் உயர்த்தி அம்மாநில அரசு டிஜிட்டல் பல்கலைக்கழகமாக மாற்றியுள்ளது. இது மத்திய அரசின் டிஜிட்டல் பல்கலைக்கழக முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.
டிஜிட்டல் பல்கலைக்கழகத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களும் இணையும், மாணவர் சேர்க்கைக்கு உச்சவரம்பு இருக்காது என்று கூறுவதன்மூலம் மருத்துவ பல்கலை.களும் இதில் இணையுமா? எம்பிபிஎஸ் போன்ற படிப்புகளை டிஜிட்டல் பல்கலைக்கழகம் மூலம் பெற முடியுமா? நீட் பிரச்சினைக்கு தீர்வாக அமையுமா? போன்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
இதுகுறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர், மருத்துவர் ஜெ.ஏ.ஜெயலால் கூறும்போது, ‘டிஜிட்டல் பல்கலை.யில் மருத்துவப் பல்கலைகள் இணைவதற்கு வாய்ப்புள்ளது. அப்படி, இணைந்தாலும் இளநிலை, முதுநிலை போன்ற மருத்துவப் படிப்புகள் அதில் இருக்காது. மருத்துவத்தில் திறன்மேம்பாடு போன்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்புகள் வேண்டு மானால் இருக்கும்’ என்றார்.மருத்துவர் ஜெ.ஏ.ஜெயலால்.