இந்தியா

ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரைக்கு தயாராகும் ஒடிசா: 2 ஆண்டுகளுக்கு பின் யாத்திரையில் பக்தர்களுக்கு அனுமதி

432views
புகழ்பெற்ற ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை ஒடிசாவில் இன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்காக மாநிலம் முழுவதுமாக பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
ஒடிசாவின் பூரி நகரத்தில் உள்ள ஆலயத்தில் ஜெகன்நாதர் ஆலயத்தில் ஆண்டுதோறும் ரத யாத்திரை நடைபெறும். இதில் பிற மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வது வழக்கம். ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று கோலாகலமாக நடைபெறும் இந்த யாத்திரையில், கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் பங்கேற்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
தற்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டிருக்கும் நிலையில், திரளான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். இதற்காக மாநிலம் முழுவதுமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வர இருப்பதால் பூரி ரயில் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளை ஒன்றிய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான் மற்றும் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியவர்கள் ஆய்வு செய்தனர். ரத யாத்திரையில் ஜெகன்நாதர், பாலபத்ரா, தேவி சுபத்ரா ஆகியவர்கள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஊர்வலமாக வருவர். இதற்காக புதியதாக ரதம் கட்டப்பட்டுள்ளது.
நேற்று முதலே பல பக்தர்கள் கோவிலுக்கு வர தொடங்கி விட்டனர். ஜெகன்நாதன் கோயிலிலிருந்து 3 ரதங்களும், அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் இருக்கும் கண்டிச்சா கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படும். அடுத்த 8 நாட்களுக்கு பிறகு, அந்த ரதங்கள் அங்கிருந்து மீண்டும் ஜெகன்நாதர் கோவிலுக்கு அழைத்துச் செல்லப்படும். இந்த யாத்திரையை பகுத்தாய் யாத்திரை என்று அழைக்கின்றனர். சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்று பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் மருத்துவ பாதுகாப்பு நடவடிக்கைகள் அங்கு மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரையை ஒட்டி, அந்த மாநிலத்தைச் சேர்ந்த மணல் சிற்ப கலைஞர் சுதர்ஷன் பட்நாயக் 125 மணல் ரதங்களை செய்தார். இதன் மூலமாக சர்வதேச அளவில் புதிய சாதனையை அவர் படைத்திருக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!