ஐ.சி.சி., ‘டி-20’ பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் ‘நம்பர்-2’ இடத்துக்கு முன்னேறினார்.சர்வதேச ‘டி-20’ போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டுள்ளது.
பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ், 816 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார்.நாட்டிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் சதம் (117) விளாசிய சூர்யகுமார், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது போட்டியில் அரைசதம் (76) கடந்தார். தவிர இவர், முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானின் பாபர் ஆசமை (818) விட 2 ‘ரேங்கிங்’ புள்ளி மட்டும் குறைவாக பெற்றுள்ளார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அசத்தும் பட்சத்தில் சூர்யகுமார் யாதவ் ‘நம்பர்-1’ இடத்துக்கு முன்னேறலாம். பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் (653) 8வது இடத்தில் உள்ளார்.
ரோகித் பின்னடைவு: டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா (746) 8வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் ரிஷாப் பன்ட் (801) 5வது இடத்தில் நீடிக்கிறார். பவுலர்களுக்கான தரவரிசையில் ஒரு இடம் முன்னேறிய இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா, 828 புள்ளிகளுடன் 3வது இடத்தை பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிதியுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். தமிழகத்தின் அஷ்வின் (842) 2வது இடத்தில் தொடர்கிறார்.