சிறுகதை

சூரி

315views

“என் உசுரு கிரிக்கெட் ஆடிட்டு இருக்கும் போதே போகணும் மச்சான்”
கையில் கிரிக்கெட் பேட்டை சுழற்றியவாறு சூரி சொன்னபோது அங்கிருந்த எல்லோரும் ஒருவரையொருவர் பார்த்து புன்னகைத்துக் கொண்டோம் .
சூரியின் உண்மையான பெயர் சூர்யா. ஆனால் எனக்கு நினைவு தெரிந்து அவன் அம்மா அப்பா உட்பட ஊரில் யாரும் அவனை சூர்யா என அழைத்ததில்லை.அதைப்பற்றி அவனும் பெரிதாய் கவலை கொண்டதில்லை.
எவ்வளவு சாப்பிட்டாலும் உடம்பு ஏறாதவர்களின் பட்டியலை சேர்ந்தவன்.மீசை தாடி முளைக்காத மழுங்கிய முகம். சாதாரண உயரம்,தரையில் பாதத்தை அழுத்தி வைத்து எம்பி எம்பி நடந்து வரும் சூரியை பார்த்தாலே இதழோரம் சிரிப்பு வந்து ஒட்டிக்கொள்ளும்.
சூரியை உங்களுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது கிணறுகளில் பம்ப்செட் திருடும் திருடன் என்றா?ஆடு மேய்ப்பவன் என்றா?காரை வேலை செய்யும் சித்தாள் என்றா? இல்லை ஒரு சிறந்த நாடக கலைஞர் என்றா?
ஆம் சூரி ஒரு நாடகக் கலைஞன். நாங்கள் எல்லோரும் கல்லூரி படிக்கும் பருவத்திலேயே சூரி நாடகம் ஆடியவன் .சேலை கட்டிக்கொண்டு, ரவிக்கையில் கொட்டாங்குச்சி மாரோடும், நீண்ட சவுரி முடியைக் தலையோடு இணைத்துக்கொண்டு, பவுடரை முகத்தில் அப்பிக்கொண்டு,உதட்டில் லிப்ஸ்டிக்கை பூசியவனாய் திரையை விலக்கி சூரி வெளியே வந்தபோது எல்லாம் வாயை பிளந்துக்கொண்டு பார்த்தார்கள். வாரி அணைத்து முத்தமிட்டார்கள் .
ஐந்து ரூபாய்,பத்து ரூபாய் நோட்டுகளை சேலையிலும் ரவிக்கையிலும் குத்தினார்கள்.ஆர்ப்பாட்டமாய் கத்தி கூச்சலிட்டார்கள்,ஊரே குதூகலமானது.
“ஏய் என்ன கல்யாணம் பண்ணிக்கிறியாடி” “மாங்கா தோப்புக்கு போலாமாடி புள்ள”
என்ற கத்தல்கள் இளவட்டங்களின் இருப்பை வெளிக்காட்டியது .
அத்தனையும் கேட்டுக்கொண்டு கை கூப்பி வணங்கிபடியே தலைகுனிந்து நின்றிருந்தான் சூரி. ஒருவாறு கூச்சல்கள் அடங்கிய பிறகு வணக்கம் சொல்லி ஆரம்பித்தான், “வணக்கம் பலமுறை சொன்னேன் சபையினர் முன்னே அதாவது மகாராஜா சேதி என்னவென்றால்”…என தொடர்ந்தவன் நாடக வசனங்களையும்,பாட்டுகளையும் இடைவிடாமல் பாடிக் கொண்டே இருந்தான்.
சலங்கை கட்டிய காலை பூமியில் அழுத்தி வைத்து கையை சுழற்றியவாறு சுற்றி சுற்றி மணல் புழுதி பறக்க ஆடிய சூரியின் அசைவுகளும் அதிர்வுகளும் இன்னும் மாரியம்மன் கோயில் முன் நிலைக்குத்தி நிற்கிறது.
ஸ்கூலில் மனப்பாட செய்யுள் எழுதி ஐந்து மார்க் கூட வாங்க முடியாத சூரிதானா இப்படி பக்கம் பக்கமாக பாட்டுகளையும் வசனங்களையும் கொட்டி தீர்க்கிறான்.
சூரி என்னை விட ஒரு வருடம் மூத்தவன். ஒன்பதாவது பெயில் ஆனதால் என்னுடன் சேர்ந்து படிக்க நேர்ந்தது.
“இந்த மண்டையில் படிப்பு ஏறவே மாட்டேங்குது மச்சான். இதுல ஸ்கோலுக்கு வந்தா அடிக்கிறானுங்க,அடிச்சா கூட பரவால முடிய வெட்ட சொல்றானுங்களேடா.”
சூரிக்கு மொத்த அழகும் அவன் முடியில் குடி கொண்டிருப்பதாக ஒரு நினைப்பு.
முடியை சிலுப்பி விடுவதும் கோதி விடுவதும் அவனது மேனரிசமாக இருந்தது.
முடியை பற்றி எந்த ஆசிரியர் கேட்டாலும் “சார் சாமிக்கு விட்ருக்கேன் சார்” என சொல்லுவான்.
ஏன் உன் சாமிக்கு முடி இல்லையா? என்றவாறு அடிக்கும் செந்தில் சாரை முறைத்தபடி கடந்துசெல்வான்.
சாமிக்காகவெல்லாம் இல்லை. சூரி ஒரு தீவிர தோனி ரசிகன் ஒரு தோனி ரசிகனாய் அவனால் அதிகபட்சமாய் செய்ய முடிந்ததெல்லாம் நீளமாய் முடியை வளர்த்து கொண்டதுதான். மற்றபடி பள்ளிக்கூடம் என்பதே அவனுக்கு ஒரு பொழுதுபோக்கு,வீட்டில் வேலை ஏதும் இல்லை என்றால் வருவான்.
குச்சியோடு வரும் ஆசிரியர் என்றால் கடைசி பெஞ்சில் காய்ச்சல் நாடகத்தை அரங்கேற்றுவான்,
“மச்சான் அந்த பொண்ணு செமையா இருக்குடா”அதோடு சரி அவன் பள்ளிக்கூட வாழ்க்கை எல்லாம்.
இன்றைக்கு கேட்டாலும் என்னுடன் பயின்றது மட்டுமே அவன் பள்ளி வாழ்க்கையென நினைவு கூறுவான்.அதிலும் ஒரு முறை காலண்டு பரீட்சையில் எல்லாப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்று இருபத்தி மூன்றாவது ரேங்க் வந்தான். அதற்கு காரணம் கிளாஸ் லீடர் தான். புறா பிடித்து தருவதாக கிளாஸ் லீடர் காளியப்பனிடம் ஒப்பந்தமிட்டு ரேங்க் வாங்கிவிட்டான்.
“மச்சான் என் வாழ்க்கையில மொத தடவ ரேங்க் வாங்கினுகீரன்டா “
ஆடு மேய்த்தல் சித்தாள் வேலை செய்தல் என எத்தனை வகையில் சூரியின் கண்ணாடி பிரதிபலித்தாலும் சூரிக்கு முதன்மையான தொழில் என்றால் அது கிரிக்கெட்தான்.ஆடு மேய்க்கப் போகும் காட்டிலிருந்து ஒரே அளவிலான மூன்று குச்சிகளை வெட்டி அதன் கீழ் புறத்தை கூர்மையாக சீவி என்னளவில் ஊருக்கே ஸ்டம்ப்பை அறிமுகம் செய்தது சூரிதான்.அதிலும் எப்படிப்பட்ட தரிசு நிலமாக இருந்தாலும் கிரிக்கெட் பிட்ச்சை தயார் செய்து விடுவான்.
மண்வெட்டியால் நிலத்தை சீர் செய்து நீர் தெளித்து மண்ணை இறுகச் செய்து சுண்ணாம்பு தூளால் கோடுகள் போட்டு பொட்டல் காட்டில் உண்மையான கிரிக்கெட் மைதானத்தை கண்ணில் காட்டி விடுவான். “கொத்து போடாதீங்கடா பௌலிங் போட்டு ஆடுங்கடான்னு சொன்னா எவன்டா கேக்குறீங்க டோரண்மெண்ட்டுனு எந்த ஊருக்கு போனாலும் காரி துப்புரானுங்க த்தூ” எங்கள் ஊரில் கையை சுற்றி பவுலிங் போடுபவர்களில் சூரிதான் முதன்மையானவன். நாங்கள் வீசினால் மேலே போன பந்து கீப்பரை தாண்டி கீழே விழும். தோனி ரசிகன் என்பதால் கீப்பராக மட்டுமே நிற்பான் சூரி.சாதாரணமாக கைக்கு வரும் கேட்சைக்கூட தள்ளி நின்று டைவ் அடித்து பிடிப்பான். “மச்சான் முடி நீளமா வச்சினு ஓடி வந்தா தோனி மாதிரி இக்குதா?” என எல்லோரையும் கேட்பான். தப்பித்தவறி ஒரு சிக்சர் அடித்து விட்டால் அடுத்த ஒரு வாரத்திற்கு அதைப் பற்றி தான் பேசிக் கொண்டிருப்பான். சூரி கிரிக்கெட் ஆடுகிறான் என்பதைவிட கிரிக்கெட் அவனை ஆட்டுவைத்தது.
ஒருநாள் எதேச்சையாக சூரியன் கையில் பார்த்தேன் ஆர்(R) என்ற எழுத்து பிளேடால் கீறி இருந்தது அவனளவில் அது அவனது காதல் டாட்டூ.
“பச்சை குத்துறதுன்னா என்னா மச்சான் அதுவும் தழும்புதான்டா என்ன அது கலரா இருக்கும் இது காயமா இருக்கு அவ்வளவுதான்டா”
“சரி யாரு மச்சான் அந்த ஆர் ”
“யாருக்கும் சொல்ல மாட்டல்ல”
“யாருக்கும் சொல்ல மாட்டேன் சொல்லு ”
“ரவி மாமாவோட பொண்ணு ரஞ்சிதாவ லவ் பண்றே மச்சான்”
“டேய் அந்த புள்ளகிட்ட சொல்லிட்டியாடா?”
“சொல்லிட்டேன் மச்சான் வீட்ல சொல்றது தான் கேப்பாளாம்”
‘யாருக்கும் சொல்ல மாட்டால்ல?’ என்ற வசனத்தை முன்னிறுத்தி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தான், ஊருக்கே அப்போதைய ட்ரெண்டிங் நியூஸ் அதுதான்.
அந்த ரஞ்சிதா செக்க செவேல்னு இருக்குது. சூரிய பாரு கருப்பா ஒல்லியா இருக்கிறான். எப்படி பொண்ணு குடுப்பாங்க ? அதெல்லாம் நடக்காது. இதுல பையன் ஆடு மேய்க்கரான்.என்ன கவுருமெண்டு வேலையா? பரவால்லன்னு குடுக்குறதுக்கு .என பல்வேறு வதந்திகளை தாண்டி சூரி ரஞ்சிதாவை கல்யாணம் செய்து கொண்டான் .ஆடு மேய்ப்பவனாக இருந்தால் என்ன? அமெரிக்காகாரனாக இருந்தால் என்ன? காதல் காதல் தானே.காதல் என்றால் என்ன? அது காதல் அவ்வளவுதான்.
கல்யாணத்திற்கு பிறகு சூரியை ஊரில் அதிகமாக பார்க்கமுடியவில்லை. ஈரோடு, பெங்களூரு ,ஓசூர் என எங்கெல்லாம் வாய்ப்பு இருக்கிறதோ அங்கெல்லாம் வேலைக்கு சென்று விடுவான் . கைசேரும் வரை தான் அதற்கு பெயர் காதல் அதன் பிறகு தொடங்குவது வாழ்க்கை.
சூரியின் வாழ்க்கை தொடங்கிவிட்டது அவன் உலகம் விரிய ஆரம்பித்தது அவன் ஓட ஆரம்பித்தான். நானும் கல்லூரி முடித்த கையோடு கோவையில் வேலைக்கு சேர்ந்தேன். பிறகு சினிமாவில் வாய்ப்பு தேடி சென்னைக்கும் வந்து விட்டேன்.இடையில் நான் ஊருக்கு செல்வதும் அரிதாகிவிட்டது. சொந்த ஊருக்கே சுற்றுலா செல்லும் வாய்ப்பு வெளியூரில் வேலை செய்பவர்களுக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று . எப்போதாவது ஊரிலிருந்து யாராவது அலைபேசினால் சூரியை பற்றி சொல்வார்கள் அப்படித்தான் ஜெய்சூரியா அலைபேசியபோது சூரிக்கு பொண்ணு பொறந்துருக்குடா என்றான்.
சரியாக ஒரு வருடம் கழித்து அருண் பேசியபோது சூரிக்கு பையன் பொறந்து இருக்குடா என்றான்.கடைசி முறை நான் ஊருக்கு சென்றிருந்த போது ஊரை ஒருமுறை சுற்றி வந்தேன். கோயிலின் முன்பாக ஒரு குழந்தை தோனி ஸ்டிக்கர் ஒட்டிய பிளாஸ்டிக் பேட்டால் பந்தை தட்டி கொண்டிருந்தது. விசாரித்த போதுதான் அது சூரியின் பையன் என தெரியவந்தது. பெயர் மணிஷ்.
தெருவைத் தாண்டி ஊரை கடந்து மெல்ல நடக்கத் தொடங்கினேன் ஏரிக்கரை மேல் கம்பை ஊன்றியபடி தலையில் தொப்பி போட்டுக்கொண்டு யாரோ ஒருவர் ஆடு மேய்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்தேன். அருகில் நெருங்க நெருங்கத்தான் அவன் சூரி என தெரிந்தது மொட்டை தலையை தொப்பி போட்டு மறைத்திருந்தான். என்னை பார்த்ததும் எங்கோ தொலைந்து போயிருந்த சிரிப்பைக் கண்டுபிடித்தவனாய் மெல்ல புன்னகைத்து “என்ன மச்சான் எங்க இருக்க? எப்டி இருக்க? என்ன வேல போயினுக்கீது ?” என மூச்சு விடாமல் கேள்விகள் கேட்டுக் கொண்டிருந்தான். நான் என்னைப் பற்றி சொல்லிவிட்டு அவனைப் பற்றி கேட்டேன். சித்தாளா இருந்து இப்போ மேஸ்திரி ஆயிட்டேன் மச்சான் பெங்களூர்லதான் வேலை போயிட்டு இருக்கு சரி லீவு போட்டுட்டு புள்ளைங்கல பார்க்க வந்தேன் மச்சான் என்றான். நலன் விசாரணைகள் எல்லாம் முடிந்த பிறகு மெல்ல கேட்டேன் “என்ன மச்சான் மொட்டை”? சாமிக்கு அடிச்சது மச்சான் மாதேஸ்வரன் மலைக்கு போய் இருந்தேன். “சார் சாமிக்கு முடி விட்ருக்கேன்” என்ற சூரியா எந்த ஆசிரியரின் மிரட்டல் இல்லாமல் மொட்டைத் தலையோடு நிற்கிறான்.
சிமெண்ட் படிந்த அவன் பாதங்களை பார்த்து நாடகத்தைப் பற்றி கேட்க மனமில்லாமல் விளையாட்டாக கேட்டேன் “வரியா மச்சான் கிரிக்கெட் ஆட போலாம்” வாழ்க்கையின் ஒட்டுமொத்த வலிகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒரு பெருமூச்சு விட்டபடி சொன்னான்.
“பேட் தூக்கவே சத்தி இல்ல எங்கிருந்து கிரிக்கெட் ஆட்றது போ மச்சான்”
தொடக்கத்தில் நான் எழுதிய முதல் வரியை நினைத்துப் பார்த்தபடியே அவனிடமிருந்து மெல்ல நகர்ந்தேன்.
வாழ்க்கை எனும் பம்பரத்தின் மேல்
ஒட்டிக்கொண்டிருக்கும்
தூசிகள்தான் நாம்
அதன் சுழற்சி நம்மை
எங்கு கொண்டுசேர்க்குமோ
யார் கண்டார்கள்…
மனோராஜ் முனிராஜ்

3 Comments

  1. வரிகளுக்குள் வாழ்க்கை இருக்கிறது.. வாழ்த்துக்கள் தம்பி

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!