140
அடர்த்தியான அன்பு நிச்சயமாக ஏதாவது பரிசு பொருட்களை பரிமாறியிருக்கும்.
பெற்றுக் கொண்ட அந்த நாளை டைரியில் குறித்துக் கொள்ளும் போது வரும் புன்னகைக்கு ஒரு மிதப்புணர்வு ,அதை வார்த்தைகளால் அளந்து சொல்ல முடியாததுதான்.
அடிக்கடி எடுத்துப் பார்த்து, தொட்டுக் கொடுத்த உணர்வுகளைத் தடவிக் கொடுத்து, அலுங்காமல் குலுங்காமல் மீண்டும் அதேயிடத்தில் வைக்கும் போது ஒட்டு மொத்த கவனமெல்லாம் ஒரு தியானமாகி ஒருங்கே குவியும் ஞானப் பொழுதது.
தொலைக்க விரும்பாத மனம், ஒரு ஓரமாக பத்திரப்படுத்த நினைக்கும் சில நாட்களில்.
எடுத்துப் பார்த்தல் குறைந்து எப்போதாவதென இடைவெளி நிகழும்.
ஆனாலுமென்ன அப்படியேதான் இருக்கக்கூடும் அதன் மீதான அக்கறையென்பது.
உபயோகிக்க கூடியதாயினும் புழங்குதலைவிட காத்தல் கண்ணியமாகப் படுகிறது அங்கு.
அது பொக்கிஷம், நமக்கே நமக்கான அன்பின் மிகுதி கைவருடிக் கொடுத்தது.
தன் மார்பொட்டி அணைத்துக் கிடக்கும் பொம்மையை ,யாரும் எடுத்துக் கொள்ள அனுமதிப்பதில்லை குழந்தை, அதுபோலத்தான் நாமும்.
என்றோ ஒருநாள் கைதவறி விழுந்து நொறுங்கிய கணத்தில் ,சிதறிய துண்டுகளில் படபடப்பாய் தேடிக் கொண்டிருப்போம் பரிசளித்தவரின் முகத்தை …
ஏனென்றால் உறவின் கட்டுமானங்களை உள்ளடக்கியதாய் இருந்த அந்தப் பரிசுப் பொருளின் உள்ளிருந்து பார்த்துக் கொண்டிருப்பது அன்புக்குரியவர் என்பது மறுப்பதற்கில்லைதானே…?
-
கனகா பாலன்
add a comment