தமிழகம்

சர்வதேச காற்றாடி திருவிழா.. களைகட்டிய மாமல்லபுரம்

72views
மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.
நாட்டின் 76-வது சுதந்திர தினம், வரும் 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு முதல் முறையாக சர்வதேச காற்றாடி திருவிழா மாமல்லபுரத்தில் இன்று தொடங்க உள்ளது. வரும் 15-ம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக தாய்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 10 அணிகள் வந்துள்ளன. பட்டம் பறக்க விடுதலில் கைதேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு காத்தாடிகளை பறக்கவிட உள்ளனர்.
இதற்காக மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 14 ஏக்கர் பரப்பளவு கொண்ட, ஓஷன் வியூ பகுதி ஜேசிபி இயந்திரம் மூலம் சமன்படுத்தப்பட்டு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த காத்தாடி திருவிழாவைத் காண குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது.
பெரியவர்கள் 150 ரூபாய் செலுத்தி நுழைவுச் சீட்டு பெற்று கண்டு ரசிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு உணவு அரங்குகள் மற்றும் மாலை நேரங்களில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
சர்வதேச காத்தாடி திருவிழாவை நடத்த மாமல்லபுரத்தை தேர்வு செய்தது ஏன் என்பது குறித்து சுற்றுலாத் துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன் கூறுகையில், “மாமல்லபுரத்தில் இன்று துவங்க உள்ள சர்வதேச காற்றாடி திருவிழா 13, 14, 15 ஆகிய மூன்று தினங்கள் நடைபெற உள்ளன.ஒவ்வொரு அணியும் 10 முதல் 20 காற்றாடிகளைக் கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு காற்றாடியும் 20 முதல் 25 அடி வரை உள்ளன.
மாமல்லபுரத்தில் அதிகமான சுற்றுலா பயணிகள் வருவதனால் அங்கு இந்த போட்டியை நடத்துவதற்காக அந்த இடத்தை தேர்ந்தெடுத்து இந்த புது முயற்சியை மேற்கொள்கிறோம். கொரோனா பாதிப்புக்கு பிறகு சுற்றுலா துறையை, வளர்ச்சி அடைய செய்வதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் இதுவும் ஒன்று.
காற்றாடி திருவிழா நடத்த நிறைய திறந்த வெளி இடம் தேவைப்படுகிறது, காற்றும் அதிகம் வீச வேண்டும் அதனால்தான் மாமல்லபுரத்தில் ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னையிலும் நிறைய முன்னெடுப்புகளை மேற்கொள்ள இருக்கிறோம் கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்களுடைய திருவிழா நடைபெற இருக்கிறதுஅதேபோல் நம்ம ஊரு திருவிழா என ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தி அதன் பிறகு மண்டல அளவில் நடத்தி அதில் வெற்றி பெறுபவர்களை மாநில அளவிலான ஒரு விழாவை இந்த ஆண்டு நடத்த திட்டமிட்டிருக்கிறோம்.
காற்றாடி திருவிழாவை கண்டுகளிப்பதற்காக பார்வையாளர்களுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருக்கிறது, மேலும் மாலை நேரங்களில் கலாச்சார நிகழ்வுகளும் உணவு கூடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளான ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளை கொண்டாடும் விதமாக “வீர விளையாட்டு விழா” என்னும் பெயரில் விழா நடத்த திட்டமிட்டு இருக்கிறோம் அது இந்த ஆண்டு தொடங்கும்.
மெடிக்கல் சுற்றுலாவை பிரபலப்படுத்துவதற்காக எந்தெந்த நாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரக்கூடிய பயணிகள் இருக்கிறார்கள் என கண்டறிந்து, அந்த நாடுகளில் இருக்கக்கூடிய மருத்துவத்துறையுடன் இணைந்து தமிழகத்தின் மருத்துவத்துறை சார்பில் சர்வதேச கருத்தரங்கு தொடர்பான திட்டமும் தமிழக அரசிடம் உள்ளது என தெரிவித்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!