செய்திகள்விளையாட்டு

சர்வதேச ஒலிம்பிக் தினம் இன்று… சிறப்பும் – வரலாறும்

92views

உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெருங்கனவு. அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் இன்று.

இந்த நாள் ஏன் சர்வதேச ஒலிம்பிக் தினம் என கொண்டாடப்படுகிறது?

ஒலிம்பிக் விளையாட்டின் ஐடியாவை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் இந்த நாள் காலண்டரில் மார்க் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1948 முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் கடந்த 1894இல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் வரலாறு!

பழங்காலத்தில் ஒலிம்பிக் போட்டியை ஒரு விளையாட்டு திருவிழாவாக கருதி கொண்டாடியுள்ளனர் கிரீஸ் நாட்டு மக்கள். அங்கு அமைந்துள்ள ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன. பெரும்பாலும் தடகள விளையாட்டுகளை முன்வைத்து ஆதிகால ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது. அதோடு மல்யுத்தம் மாதிரியான விளையாட்டுகளும் நடைபெற்று உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் விளையாட்டை வழிபட்டனர். இப்படியாக தூவப்பட்ட விதை இன்று விருட்சமாக ‘மாடர்ன் டே’ ஒலிம்பிக் விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மைய காலமாக சுமார் 200க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.

1896இல் கிரீஸ் நாட்டின் ஏதன்ஸில் மாடர்ன் டே ஒலிம்பிக்கின் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைத்தது. இதுவரை 31 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன. 32வது முறையாக டோக்கியோவில் வரும் ஜூலை 23ஆம் தேதி முதல் ஒலிம்பிக் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் கோடை காலம் மற்றும் குளிர் காலம் என இரண்டு வெர்ஷனாக நடைபெற்று வருகிறது.

ஒலிம்பிக்கில் இந்தியா!

இந்தியா கடந்த 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வருகிறது. இதுவரை 9 தங்கம், 8 வெள்ளி, 12 வெண்கலம் என 28 ஒலிம்பிக் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது. 2000க்கு பிறகு இந்தியா ஒரே ஒரு தங்கம்தான் வென்றுள்ளது. அதை வென்றவர் அபினவ் பிந்த்ரா. அதே நேரத்தில் இந்தியா ஒவ்வொரு முறையும் வெவ்வேறு விளையாட்டு பிரிவுகளில் ஒலிம்பிக்கில் பங்கேற்பதை வழக்கமாக கொண்டு வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 16 விளையாட்டு பிரிவுகளில் இந்தியா பங்கேற்க உள்ளது. சுமார் 103 வீரர்கள் இந்த 16 பிரிவுகளில் பங்கேற்க உள்ளனர். இந்த முறை இந்தியா அதிகளவில் பதக்கம் வெல்லும் என நம்புவோம்.

இன்றைய கொரோனா சூழலில் உலக மக்கள் அனைவரும் உடற்பயிற்சி செய்வது அவரவர் உடல்நலனை காக்க பெரிதும் உதவும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!