இந்தியா

சட்டப்பேரவை தேர்தலில் கோவாவில் காங்கிரஸ் வெற்றி பெறும்: 40 இடத்தில் 20 கிடைக்கும் என கணிப்பு

55views

அடுத்த மாதம் நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜவை தோற்கடிக்கும் என தேர்தல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

உத்தரப்பிரதேசம், கோவா, பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 40 தொகுதிகளைக் கொண்ட கோவாவில் அடுத்த மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.

தேர்தல் நடக்க உள்ள 5 மாநில தேர்தலில் பஞ்சாப் தவிர மற்ற 4 இடத்திலும் பாஜ ஆட்சி நடக்கிறது. இந்நிலையில், கோவாவில் இந்த முறை தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களை வென்று ஆட்சியை பிடிக்கும் என தேர்தல் நிபுணர்கள் கணித்துள்ளனர். பெயர் வெளியிட விரும்பாத மூத்த அரசியல் நிபுணர் ஒருவர் கூறுகையில், ’40 சீட்களில் காங்கிரஸ் 20 சீட்களை வெல்லும். பாஜ 15, மகாராஷ்டிரா கோமன்தக் கட்சி (எம்ஜிபி) 3 அல்லது 4, ஆம் ஆத்மி ஒன்று அல்லது 2 சீட்களும் வெல்லும். எம்ஜிபி கட்சி மோசமான நிலையில் இருக்கும் நிலையில், கூட்டணி கட்சியான திரிணாமுல் காங்கிரசின் பண பலத்தால் தப்பிக்கும்’ என்றார்.

முன்னாள் மாநில தேர்தல் ஆணையர் பிரபாகர் திம்பிலோ கூறுகையில், ‘கோவாவில் அடுத்த ஆட்சியை காங்கிரஸ் அமைக்கும். பாஜ அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். உட்கட்சியிலும் மோதல்கள் உள்ளன. எனவே இதெல்லாம் பாஜவுக்கு எதிராக திரும்பும். காங்கிரஸ் கட்சி 20-22 சீட்களை வெல்லும். திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மியால் பெரிய அளவில் வெற்றியை பெற முடியாது’ என்றார். காங்கிரசுடன் கூட்டணி அமைத்துள்ள கோவா முன்னணி (ஜிஎப்பி) கட்சி பொதுச் செயலாளர் துர்காதாஸ் காமத், ”இந்த கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும்” என்றார். கடந்த 2017 சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் 17, பாஜ 13 இடங்களில் வெற்றி பெற்றன. ஆனால், பாஜ பிற உதிரிக் கட்சிகளுடன் (எம்ஜிபி (3 சீட்), ஜிஎப்பி (3 சீட்), சுயேச்சை (2 சீட்), என்சிபி (1 சீட்)) தேர்தல் முடிவுக்கு பின் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நெருங்கிய நிலையில், கோவாவில் அமைச்சரும், எம்எல்ஏ ஒருவரும் ஒரே நாளில் கட்சியிலிருந்து விலகியது பாஜவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கோவா பாஜ அரசின் கழிவு மேலாண்மை துறை அமைச்சர் மைக்கேல் லிபோ கட்சியிலிருந்து விலகிய பின் அளித்த பேட்டியில், ‘அமைச்சர், எம்எல்ஏ இரு பதவியையும் ராஜினாமா செய்து விட்டேன். பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடக்கிறது. அடுத்த கட்ட முடிவை விரைவில் அறிவிப்பேன். பாஜ சாமானியர்களுக்கான கட்சி அல்ல என மக்களே என்னிடம் சொல்கிறார்கள்.

அக்கட்சியில் அடிமட்ட தொண்டர்களுக்கு மதிப்பே இல்லை’ என குற்றம்சாட்டினார். விரைவில் லிபோ காங்கிரசில் சேருவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இதே போல, பாஜ எம்எல்ஏ பிரவின் ஜின்டையாவும் கட்சியிலிருந்து விலகி உள்ளார். இவர்கள் விலகலால் கட்சிக்கு எந்த பாதகமும் இல்லை என கோவா மாநில பாஜ தலைவர் கூறி உள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் நேற்று தனது டிவிட்டரில், ‘தேர்தல் 2022 என்ற ஹேஷ்டேக்கை’ இணைத்து, ‘வெறுப்பை வீழ்த்த இது சரியான வாய்ப்பு’ என பதிவிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!