இலக்கியம்

கொல்கத்தாவில் நடைபெற்ற விழாவில் பால சாகித்திய புரஸ்கார் விருது-2021 கவிஞர் மு.முருகேஷ்-க்கு வழங்கப்பட்டது

110views

மத்திய அரசின் இலக்கிய அமைப்பான சாகித்திய அகாதெமி, ஆண்டுதோறும் இந்திய மொழிகளில் எழுதப்படும் சிறந்த சிறுவர் இலக்கிய நூல்களுக்கு ‘பால சாகித்திய அகாதெமி விருது’ உடன் ரூ.50 ஆயிரம் பரிசுத்தொகையையும் வழங்கி கவுரவித்து வருகிறது.

2021-ஆம் ஆண்டிற்கான சிறந்த தமிழ் சிறுவர் இலக்கிய நூலென கவிஞர் மு.முருகேஷ் எழுதிய ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ நூலினைத் தேர்வுசெய்து., கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது. அதற்கான விருது வழங்கும் விழா, கொல்கத்தா தேசிய நூலகத்தில்ய்ள்ள பாஷா பவன் அரங்கில் ஜூலை 30 அன்று மாலை நடைபெற்றது.

சாகித்திய அகாதெமியின் செயலாளர் கே.சீனிவாசராவ் அனைவரையும் வரவேற்றார்.
சாகித்திய அகாதெமியின் துணைத்தலைவரும் எழுத்தாளருமான மாதவ் கெளசிக், விருது மற்றும் விருது தொகையினை வழங்கிச் சிறப்பித்தார். மூத்த வங்க எழுத்தாளர் சர்ஷெந்து முகோபாத்யாயா வாழ்த்துரை வழங்கினார். விருது பெற்ற கவிஞர் மு.முருகேஷ் குறித்த பாராட்டுக்குறிப்பும் வாசிக்கப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணத்தில் பிறந்த கவிஞர் மு.முருகேஷ், தற்போது வந்தவாசியில் வசித்து வருகிறார். கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து படைப்பிலக்கியத் தளத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார்.

இவர் 10 புதுக்கவிதை, 10 ஹைக்கூ கவிதை, 18 குழந்தை இலக்கியம், 9 கட்டுரைகள், ஒரு சிறுகதை நூல் உட்பட 48 நூல்களை எழுதியுள்ளார். மேலும், 3 புதுக்கவிதை, 5 ஹைக்கூ கவிதை, 5 சிறுவர் இலக்கிய நூல்களையும் தொகுத்துள்ளார்.

மனித நேயத்தையும், வாழ்வின் மீதான தீராத காதலையும் முன்நிறுத்தும் படைப்புகளை எழுதிவரும் மு.முருகேஷ், தமிழில் ஹைக்கூ கவிதைகளை ஒரு இயக்கம் போல் பரவலாக கொண்டுசென்றதிலும், குழந்தைகளுக்கான படைப்புகளை எழுதுவதிலும் 30 ஆண்டுகளாக கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார்.

மு.முருகேஷ் எழுதிய 16 சிறார் கதைகள் கொண்ட தொகுப்பு, 2017-ஆம் ஆண்டு அகநி வெளியீடாக ‘அம்மாவுக்கு மகள் சொன்ன உலகின் முதல் கதை’ எனும் நூலாக வெளிவந்தது. இன்றைய தலைமுறை குழந்தைகளின் பார்வையில் மறுவாசிப்பு செய்து எழுதப்பட்ட இந்த நூலை, 2021-ஆம் ஆண்டிற்கான ‘பால சாகித்திய புரஸ்கார் விருது’க்கு தேர்வு செய்துள்ளோம்.

கவிஞர் மு.முருகேஷ், தனது படைப்புகளுக்காக 20-க்கும் மேற்பட்ட பரிசுகளையும் விருதுகளையும் வென்றவர். இலங்கை, சிங்கப்பூர், குவைத், மலேசியா ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்றுள்ளார். இவரது படைப்புகள் இந்தி, மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், ஜப்பான் உள்ளிட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. பல்கலைக்கழக அளவிலும், கல்லூரிகளிலும் பாடத்திட்டத்தில் கவிதைகள் இடம் பெற்றுள்ளன. இவரது ஹைக்கூ மற்றும் புதுக்கவிதைகளை 10-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் முனைவர் மற்றும் இளமுனைவர் பட்ட ஆய்வுசெய்து, பட்டம் பெற்றுள்ளனர்.

இவரது ஹைக்கூ கவிதைகள் எல்.பி.சாமி மொழிபெயர்ப்பில் மலையாளத்தில் ’நிலா முத்தம்’ எனும் நூலாகவும், தற்போது பால சாகித்திய புரஸ்கார் விருதுபெற்ற நூல் பள்ளி மாணவி வி.சைதன்யா மொழிபெயர்ப்பில் ஆங்கிலத்தில் ’The first story told by a daughter to her mother’ எனும் நூலாகவும் வெளிவந்துள்ளன.

2009-இல் பெங்களூருவில் நடைபெற்ற 9-ஆவது உலக ஹைக்கூ கிளப் மாநாட்டில் பங்கேற்று, உலக அளவிலான ஹைக்கூ கவிதைப் போட்டியில் பரிசு வென்றதும், தமிழக அரசின் சமச்சீர்ப் பாடத்திட்ட நூல் தயாரிப்புக் குழுவில் இடம்பெற்றதும், ஹைக்கூ செயல்பாடுகளுக்காக குவைத் நாட்டில் ‘குறுங்கவிச் செல்வன்’ விருதினைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கன.

பால சாகித்திய புரஸ்கார் விருதினைப் பெற்ற பிறகு கவிஞர் மு.முருகேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது தமிழில் ஏற்பட்டுள்ள சிறார் இலக்கிய மறுமலர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை தரும் வகையில் இந்த விருதினைப் பெற்றுள்ளேன். இன்றைய குழந்தைகளே படைப்பாளர்களாக மாறி எழுதி வருகிறார்கள். இந்த விருதினை இலக்கியத்தின் புதிய தளிர்களாகச் சுடர்முகம் காட்டி எழும் இளைய சிறுவர் படைப்பாளிக்கு சமர்ப்பிக்கிறேன்” என்றார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!