‘மாநாடு’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் மனதில் மீண்டும் நீங்காதொரு இடத்தை பிடித்த சிம்புவிற்கு பல படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.
தற்போது சிம்பு நடிப்பில் ‘வெந்து தணிந்தது காடு’ படம் ரிலீசாக இருக்கிறது. கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கம் இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கீழ் ஐசரி.கே.கணேஷ் தயாரிக்கிறார். இப்படத்தில் சித்தி இத்னானி, கயாடு லோஹர், ராதிகா சரத்குமார், சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆபிரகாம், அப்புக்குட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.
சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத்தொடர்ந்து இப்படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு சிம்பு மேலும் தனது உடல் எடையை குறைத்து இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் ஐசரி.கே.கணேஷ் படத்தின் ரிலீஸ் குறித்தும், சிம்பு குறித்தும் சுவாரஸ்யமான தகவல்களை பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதில் , முதன்முறையாக சிம்பு என் வீட்டிற்கு வந்தபோது அவரின் புதிய தோற்றத்தை கண்டு நான் வியந்து போனேன், ஏனெனில் உடல் எடையை கடுமையாக குறைத்து என் முன் வந்து நின்றார், அவரின் கடின உழைப்பு என்னை ஆச்சர்யப்படுத்தியது. மேலும் சிம்புவிற்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்ததை பற்றி கூறுகையில், எங்கள் தயாரிப்பில் அவர் படம் நடிப்பதால் நாங்கள் அவருக்கு பட்டம் கொடுக்கவில்லை, அவரின் பன்முகத்திறமையை பாராட்டும் விதமாக தான் அவருக்கு பட்டம் கொடுத்தோம் என்று கூறினார். இந்த படத்தில் சிம்பு 5 விதமான கெட்டப்களில் நடிக்கிறார், இப்படம் நிச்சயம் ரசிகர்களுக்கு நல்லதொரு விருந்தாக அமையும். ஏப்ரல் 14 அன்று படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறோம், ஆனால் கொரோனா தொற்று பரவல் மற்றும் பிற நடிகர்களின் படங்கள் ரிலீஸை வைத்து ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என்றும் கூறியுள்ளார்.
இப்படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு கொரோனா சூழல் காரணமாக தள்ளிப்போன நிலையில் இந்த மாத இறுதிக்குள் மும்பையில் நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும் இவரது தயாரிப்பில் சிம்பு நடிக்கும் மற்றொரு படமான ‘கொரோனா குமார்’ படமும் இந்த ஆண்டு ரிலீசாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.