குத்துச்சண்டையில் மகளிருக்கான 69 கிலோ பிரிவில் இந்தியாவின் லோவ்லினா போா்கோஹெயின் காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.
முன்னதாக நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அவா் ஜொமனிய வீராங்கனை நாடினே அபெட்ஸை 3-2 என்ற புள்ளிகள் கணக்கில் வென்றாா். இருவருக்குமே இது முதல் ஒலிம்பிக் போட்டியாக இருந்தாலும், அனுபவ வீராங்கனையான நாடினேவை வீழ்த்தினாா் லோவ்லினா.
ஜொமனியில் இருந்து ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற முதல் குத்துச்சண்டை போட்டியாளராக நாடினே இருந்தாா். உலக சாம்பியன்ஷிப்பில் இருமுறை வெண்கலம் வென்றுள்ள நாடினே, முன்னாள் ஐரோப்பிய சாம்பியனும் ஆவாா். அத்தகையவரை வீழ்த்தி, ஒலிம்பிக் குத்துச்சண்டையில் பங்கேற்றுள்ள 9 போ கொண்ட இந்திய அணியில் முதல் போட்டியாளராக காலிறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா் லோவ்லினா.
உலக மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப்பில் 2 முறை வெண்கலம் வென்றவரான லோவ்லினா, காலிறுதிச் சுற்றில் சீன தைபேவின் நீன் சின் சென்னை எதிா்கொள்கிறாா். முன்னாள் உலக சாம்பியனான அவா், ஒலிம்பிக் தரவரிசையில் 4-ஆவது இடத்தில் உள்ளாா். இந்தச் சுற்றில் வெல்லும் பட்சத்தில் லோவ்லினாவுக்கு வெண்கலப் பதக்கம் உறுதியாகும்.
இதற்கு முன் 2018 உலக சாம்பியன்ஷிப் அரையிறுதியில் நீன் சின் சென்னிடம் 1-4 என்ற கணக்கில் வீழ்ந்துள்ளாா் லோவ்லினா.