ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள் :அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகீர் தகவல்
ஈரோடு சிறுமி கருமுட்டை விற்பனை தொடர்பாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சிறுமியை அவரது குடும்பத்தினரே நிர்பந்தம் செய்து கருமுட்டை விற்பனையில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தொடர்புடைய மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.மேலும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது, ‘கருமுட்டை விற்பனையில் ஈடுபட்ட 4 தமிழக தனியார் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ குழு விசாரணை அறிக்கையில் குற்றங்கள் கண்டுபிடிக்கப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஈரோடு, சேலத்தில் சுதா, ஓசூரில் விஜய், பெருந்துறையில் ராம்பிரசாத் மருத்துவமனைகளை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்கப்படும்.
4 தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகளை 15 நாளில் டிஸ்சார்ஜ் செய்ய வேண்டும். 4 மருத்துவமனைகளில் உள்ள ஸ்கேன் சென்டர்கள் உடனடியாக மூடப்படும். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூ.50 லட்சம் வரை அபராதம், 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளது.நிர்பந்தம் செய்து 16 வயதான சிறுமியிடம் இருந்து பலமுறை கருமுட்டையை அவரது குடும்பத்தினரே எடுத்து விற்றனர்.
ஈரோடு சிறுமியின் கருமுட்டை விற்பனை வழக்கில் 6 தனியார் மருத்துவமனைகளுக்கு தொடர்பு உள்ளது.தானம் தர விரும்பினாலும் 21 வயதான ஒருவரிடம் ஒரு முறை மட்டுமே கருமுட்டையை எடுக்க முடியும். ஈரோடு சிறுமியின் கருமுட்டைகளை 6 மருத்துவமனைகள் சட்டவிரோதமாக எடுத்துள்ளது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மருத்துவமனைகள் வணிகரீதியாக செயல்பட்டது தெரிய வந்துள்ளது.ஒரே சிறுமியிடம் இருந்து மாதந்தோறும் பலமுறை கருமுட்டையை எடுத்திருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட சிறுமியிடம் சாதக, பாதகங்கள் விளக்கப்படவில்லை. சிறுமியின் கணவர் என போலியாக ஒருவரிடம் இருந்து கருமுட்டை பெற ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.சிறுமி கருமுட்டை வழக்கில் விசாரணையின் இறுதி அறிக்கையை குழு சமர்ப்பித்துள்ளது; விசாரணை அதிகாரிகள் கேட்ட அனைத்து ஆவணங்களும் மருத்துவமனைகள் தரவில்லை; அறிக்கையில் நிறைய தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.’என்று கூறியுள்ளார்.