இலக்கியம்கவிதை

எறும்பு

98views
மமதைகளால்
சகலத்தையும் உதாசீனித்து
கண்ணுக்குத் தெரியா
குறுக்கு ஊழல் அடுக்குகளில்
பல பிரிவு ரத்தம் உறைந்திருக்க
குதித்து குதூகலிக்கிறதொரு
லெளகீக வெற்றி
சியர்ஸின் கிளிங்கில் தெறிக்கின்றன
அதிர் சிரிப்புகள்
கசப்பின் மிடறுகளில் துளிர்க்கும்
இனிப்புக் கிறக்கம்
அண்டசராசரமும் குவிந்தங்கு
தன்முனைப்பைக்
கவிபாடித் தீர்க்க
கண்ணெட்டும் தூரத்தில்
ஒரு சின்னஞ்சிறு எறும்பு
முதுகு காட்டி
முன்னிரு கால்களைச்
சொறிந்து நிற்கிறது
தாளமுடியா முனைப்பு
யாருக்கும் தெரியாமல்
தன் பூட்ஸ் காலால்
அதை மிதித்து தேய்த்துவிட்டு
அடுத்தடுத்த ரவுண்டுகளில்
இருக்கும் போது
மறுபடியும்
அதே இடத்தில் அதையே செய்யும்
அந்தச் சிற்றெறும்பு
தெரிகிறது மங்கலாய்.
  • ரவி சுப்ரமணியன்

 

 

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!