உலகம்

உக்ரைன்-ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தை தோல்வி.. போர் நிறுத்த முடிவு எட்டப்படவில்லை

39views

போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் துருக்கியின் அன்டலியாவில் இன்று பேச்சுவார்த்தை நடத்தினர். போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாததால், இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இருவாரங்கள் ஆகிவிட்டன. மிகப்பெரிய ராணுவ பலம் கொண்ட ரஷ்யா, உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை தாக்குதல் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தி வருகின்றன. தரைவழி பீரங்கி தாக்குதலையும் முன்னெடுத்து வருகிறது.

உக்ரைன் ராணுவமும் தாய்நாட்டை காக்க போராடி வருகிறது. பொதுமக்களும் உக்ரைன் ராணுவத்துடன் கைகோர்த்து உள்ளனர். இந்த போரில் உக்ரைன் தரப்பில் படை வீரர்கள், அப்பாவி மக்கள் உயிரிழக்கின்றனர். ரஷ்யாவுக்கு பொருட்சேதம், படை வீரர்களின் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

போரை கைவிட வேண்டும் என இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பலமுறை ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் அவர் செவிசாய்க்கவில்லை. இதனால் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் பொதுமக்கள் அகதிகளாக பிற நாடுகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவின் போர் நடவடிக்கையை கண்டித்து அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. மேலும் ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ளன. சொத்துகளை முடக்கி வருகின்றன.

இது ரஷ்யாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் உக்ரைன்-ரஷ்யா இடையே பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இதில் போர் நிறுத்தம் தொடர்பாக முடிவுகள் எட்டப்படவில்லை. இருப்பினும் சில நகரங்களில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தற்காலிக போர் நிறுத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் போர் நிறுத்தம் தொடர்பாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா ஆகியோர் துருக்கி அன்டிலியாவில் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தைக்கு துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் மெவ்லூட் கவுசோக்லு மத்தியஸ்தராக பங்கேற்றார். “ரஷ்ய அமைச்சர்கள் இடையேயான நேரடி சந்திப்பு நிரந்தர போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும் என நம்புகிறேன்” என துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இருநாட்டு அமைச்சர்கள் இடையே பேச்சுவார்த்தை இன்று துருக்கி அன்டிலியாவில் நடந்து முடிந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டாததால், தோல்வியில் முடிந்துள்ளது. இதற்கு முன் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டின் அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாட்டு அமைச்சர்கள் கலந்துகொண்டனர். இதுவே மாற்றத்துக்கான அறிகுறி என துருக்கி அதிபர் தெரிவித்துள்ளர். விரைவில் அடுத்தடுத்த பேச்சுவார்த்தை நடக்கும், போர் நிறுத்தம் கொண்டுவரப்படும் என்று சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!