உலகத் திடல்தட சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவின் ஒரிகன் மாநிலம் யூஜின் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதிச் சுற்றில், அவர் 88.13 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
இதன்மூலம் 2003ஆம் ஆண்டுக்குப் பிறகு உலகத் திடல்தடப் போட்டியில் இந்தியாவுக்குப் பதக்கம் கிடைத்துள்ளது.
2003ல் மகளிருக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்சு ஜார்ஜ் வெண்கலம் வென்றார்.
அத்துடன் இது, உலகத் திடல்தடப் போட்டி வரலாற்றில் இந்தியாவுக்குக் கிடைத்துள்ள இரண்டாவது பதக்கமாகும்.
கிரெனடாவைச் சேர்ந்த நடப்பு வெற்றியாளர் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து, தங்கம் வென்றார்.
செக் குடியரசின் ஜாக்கூப் வாட்லெஜ் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலம் வென்றார்.
இறுதிச்சுற்றில் இடம்பெற்ற மற்றொரு இந்திய வீரரான ரோகித் யாதவ் பத்தாவது (78.72 மீட்டர்) இடத்தைப் பிடித்தார்.
பதக்கம் வென்று நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ள நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள் குவிந்தவண்ணம்
உள்ளன.
நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா,” என்றார். கடந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றிருந்தார்.