இலவசங்களை அறிவிக்கும் கட்சிகள் அதன் நிதி ஆதாரம் குறித்தும் விளக்க வேண்டும் – ரிசர்வ் வங்கி உறுப்பினர்
113
இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான நிதி ஆதாரம் குறித்து மக்களிடம் விளக்க வேண்டும் என ரிசர்வ் வங்கி நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளதாக, ‘தினத்தந்தி’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
மக்களுக்கு இலவசங்களை வழங்கும் நடவடிக்கை குறித்து நாடு முழுவதும் பெரும் விவாதம் நடந்து வருகிறது. இந்த நடைமுறையை பிரதமர் மோதி சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கமிட்டி உறுப்பினர் அசிமா கோயல் பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், “இலவசங்கள் ஒருபோதும் இலவசமாக வழங்கப்படுவது இல்லை. அதன் தாக்கம் மக்களுக்கு தெரிய வேண்டும். அரசுகள் இலவசங்களை வழங்கும்போது வேறு வழியில் எங்காவது ஒரு செலவு விதிக்கப்படுகிறது. ஆனால் இது திறனை வளர்க்கும் பொது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலவாகும்.
பஞ்சாபில் வழங்கப்படும் இலவச மின்சாரம் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் வீழ்ச்சி போன்ற பெரிய மறைமுக செலவுகள் ஏற்படுகிறது. இது போன்ற இலவசங்களால் சுகாதாரம், கல்வி, காற்று மற்றும் நீர் ஆகியவற்றின் தரம் குறைந்து ஏழைகளை மிகவும் பாதிக்கிறது.
இலவசங்களை அறிவிக்கும் எதிர்க்கட்சிகள், அவற்றுக்கான நிதி ஆதாரம் குறித்து வாக்காளர்களுக்கு தெளிவாக விளக்க வேண்டும். இதன்மூலம் மக்கள் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால் ஈர்க்கப்படுவது குறையும்” என தெரிவித்ததாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.