தமிழில் திமிர், சண்டக்கோழி, பூஜை, இரும்புத்திரை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் விஷால்.
மேலும் தான் நடிக்கும் திரைப்படங்களை அவரே தயாரித்தும் வருகிறார். தற்போது எனிமி படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. மேலும், வீரமே வாகை சூடும் என்கிற புதிய படத்திலும் நடிக்கவுள்ளார். கைவசம் 4 படங்களை வைத்துள்ளார். குறிப்பாக முன்பு போல் எந்த சர்ச்சைகளிலும், செய்திகளிலும் அவர் சிக்குவதில்லை.
மிஷ்கின் இயக்கத்தில் அவர் நடித்த திரைப்படம் துப்பறிவாளன். அதில், நடிப்பில் வித்தியாசம் காட்டியிருந்தார் விஷால் எனவே, துப்பறிவாளன் 2 திரைப்படம் உருவானது. படத்தின் பெரும்பகுதி லண்டனில் படம் பிடிக்கப்பட்டது. விஷாலே அப்படத்தை தயாரித்தார். ஆனால், மிஷ்கினுக்கும் அவருக்கும் இடையே எழுந்த மோதலில் படம் டிராப் ஆனது. அப்படத்திலிருந்து வெளியேறினார் மிஷ்கின்.சமீபத்தில் இதுபற்றி பேசிய மிஷ்கின் ‘விஷால் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை’ எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஒரு வார இதழுக்கு பேட்டியளித்துள்ள விஷால் ‘மிஷ்கின் மீது எனக்கு கோபம் குறையவில்லை. திடீரென துப்பறிவாளன் 2 படத்திலிருந்து விலகினார். அவரின் தம்பி படம் முழுக்க வரும்படி கதை உள்ளது .அவரையும் அனுப்ப மாட்டேன் எனக்கூறிவிட்டார்.
இதுவரை ரூ.10 கோடி வரை செலவு செய்துவிட்டேன். மிஷ்கினின் இயக்கத்தில் இனிமேல் படம் நடிக்கவே மாட்டேன். ஒரு தயாரிப்பாளராக எனக்கு அவர் செய்தது பச்சை துரோகம். அவரால் நிறைய மன உளைச்சல்களை சந்தித்துவிட்டேன். தற்போது துப்பறிவாளன் கதையை மாற்றிவிட்டேன். இயக்குனர் விஷால் யார் என விரைவில் தெரிந்துகொள்வார்கள்’ என அவர் கூறியுள்ளார்.