புதுடில்லி: கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து லோக்சபாவில் அவர் கூறியதாவது: பொருளாதாரத்தை சீரமைக்க பிரதமர் உறுதிபூண்டுள்ளார். அதனை மீட்டெடுப்பதற்கான திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது. பொருளாதாரத்தை மறுசீரமைப்பதே எங்களின் முதன்மை நோக்கம். இந்தியா மீது பா.ஜ., கொண்டுள்ள நம்பிக்கையை இந்த பட்ஜெட் எடுத்து காட்டுகிறது.வரி கட்டுவோர்களுக்கு பட்ஜெட்டில் மரியாதை அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான சீர்திருத்தங்களை அரசு எடுப்பதை, பெருந்தொற்று போன்ற சவாலான சூழ்நிலைகள் தடுத்து விடாது. உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு சீர்திருத்தங்கள் உதவும். கொரோனா பாதிப்பில் இருந்து பொருளாதார வளர்ச்சி பாதையில் இந்தியாவை கொண்டு செல்வதற்கு மத்திய பட்ஜெட் உதவும்.இந்தியா தன்னிறைவு பெறுவதற்கான பாதையை பட்ஜெட் அமைத்து கொடுத்துள்ளது.
விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ரூ.6 ஆயிரம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் 9 கோடி விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர். 80 மில்லியன் பேருக்கு இலவச கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. 400 மில்லியன் விவசாயிகள் மற்றும் பெண்களுக்கு மத்திய அரசின் நிதியுதவி சென்றடைந்துள்ளது. எந்த ஒரு பெரு முதலாளிகளுக்காகவும மத்திய அரசு பணியாற்றவில்லை. மோடி மீது நம்பிக்கை வைத்துள்ள ஏழை மக்களுக்காகவே மத்திய அரசு பணியாற்றுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.