கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யா மற்றும் உக்ரைன் முக்கியப் பங்கு வகித்து வந்தன.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததையெடுத்து இரு நாடுகளிலிருந்தும் கோதுமை ஏற்றுமதி தடைபட்டது.
இதனால், இவ்விரு நாடுகளில் இருந்து கோதுமை இறக்குமதியை நம்பியிருந்த நாடுகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகின. இதையடுத்து சர்வதேச அளவில் கோதுமை விலை அதிகரிக்கத் தொடங்கியது.
இந்தியாவில் கோதுமை விலை அதிகரிக்கத்தையடுத்து, மத்திய அரசு கோதுமை ஏற்றுமதிக்கு மே 13-ம் தேதி தடை விதித்தது. எனினும், உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டு வரும் நாடுகளுக்கும், உரிய அனுமதி பெற்றிருக்கும் நாடுகளுக்கும் இந்தியா கோதுமையை ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் கடந்த பிப்ரவரி மாதம் வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் அடிப்படையில், இந்தியா கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தாலும், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. சர்வதேச அளவில் கோதுமை விநியோகம் சார்ந்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், உள்நாட்டு உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் மற்றும் ஏற்கெனவே இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மற்றும் கோதுமை மாவை ஐக்கிய அரபு அமீகரத்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி மற்றும் மறு ஏற்றுமதி செய்ய தடை செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை அமீரக பொருளாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ளது.