தமிழகம்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றது; வங்கக்கடலில் உருவானது ‘ஜோவத்’ புயல்: வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே இன்று கரையை நெருங்குகிறது

89views

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘ஜோவத்’ புயல், வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா இடையே இன்று கரையை நெருங்க உள்ளது.

இதன் காரணமாக வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை அல்லது அதிகனமழையும் பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,’ஜோவத்’ புயலாக வலுப்பெற்றுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியை 4-ம் தேதி (இன்று) காலை நெருங்கக் கூடும். அதைத் தொடர்ந்து வடக்கு – வடகிழக்கு திசையில் ஒடிசா கடற்கரை ஒட்டி நகரும். இதன் காரணமாக 4-ம் தேதி மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதி, ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 80 முதல் 100 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக் கூடும். 5-ம் தேதி மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக் கடல் பகுதி, வடக்கு ஆந்திரா மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் மணிக்கு 60 முதல் 80 கி.மீ. வேகத்தில் புயல் காற்று வீசக்கூடும். எனவே, இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.

புயல் கரையை நெருங்குவதால் 4-ம் தேதி வடக்கு ஆந்திரா – தெற்கு ஒடிசா கடலோரப் பகுதியில் பெரும்பாலான இடங்களில் கனமழையும், ஓரிரு இடங்களில் மிக கனமழை அல்லது அதிகனமழையும், 5-ம் தேதி இந்தப் பகுதிகளில் கனமழையும் பெய்யக் கூடும். 6-ம் தேதி வடகிழக்கு மாநிலங்களில் கனமழை பெய்யக் கூடும். தென் தமிழக பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக 4-ம் தேதி கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கன மழையும், இதர தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பில்லை.

வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக தென்காசி மாவட்டம் ஆய்க்குடியில் 8 செ.மீ. மழை பெய்துள்ளது. திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவி, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண் டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் இரவு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதையடுத்து, தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. இந்நிலையில், காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ‘ஜோவத்’ புயலாக மாறியுள்ளதால், தூத்துக்குடி துறைமுகத்தில் நேற்று மாலை 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது. புயல் உருவாகியுள்ளது என்பதை அறிவிக்கும் தூர எச்சரிக்கையாக இந்த புயல் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புயல் காரணமாக ஆந்திராவின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. ‘ஜோவத்’ புயல் ஒடிசாவில் கரையை கடந்து மேற்கு வங்கத்தை நோக்கி நகரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளில் நாளை அதிகனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பேரிடர் மீட்புப் படையினர் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். புயல், மழையால் அதிக பாதிப்பு இருக்கும் இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!