உலகம்உலகம்செய்திகள்

ஆப்கன் வன்முறை: 6 மாதங்களில் 1,659 பொதுமக்கள் பலி பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு அதிகம்; ஐ.நா. அறிக்கையில் தகவல்

69views

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில் பெண்கள், குழந்தைகள் உயிரிழப்பு அதிகரித்து வருவதாக ஐ.நா. அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.

நிகழாண்டின் முதல் பாதி காலத்தில் இதுவரை இல்லாத அளவு பெண்களும், குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்காவும், நேட்டோ நாடுகளும் தங்களது படையினரை திரும்பப் பெறத் தொடங்கியுள்ளன. இந்தப் படை விலகல் தொடங்கிய கடந்த மே மாதத்திலிருந்து அந்நாட்டில் தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த சில வாரங்களாக அண்டை நாடுகளுடனான எல்லைப் பகுதிகள் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை தலிபான்கள் கைப்பற்றி வருகின்றனா். சில மாகாண தலைநகரங்களும் தலிபான்களின் கட்டுப்பாட்டில் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் வன்முறையில் உயிரிழந்தோா் குறித்து அந்நாட்டுக்கான ஐ.நா. பொதுச் செயலரின் சிறப்புப் பிரதிநிதி டெபோரா லயோன்ஸ் திங்கள்கிழமை ஓா் அறிக்கையை வெளியிட்டாா். அதில் கூறப்பட்டிருப்பது:

2021-ஆம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற வன்முறையில் பொதுமக்கள் 1,659 போ கொல்லப்பட்டுள்ளனா்; 3,254 போ காயமடைந்துள்ளனா். கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் ஏற்பட்ட பாதிப்புடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் அதிகமாகும். உயிரிழப்பில் பெண்கள், குழந்தைகளின் எண்ணிக்கை 46 சதவீதம் ஆகும். அதாவது 468 குழந்தைகள் (32 சதவீதம்), 219 பெண்கள் (14 சதவீதம்) உயிரிழந்துள்ளனா்.

கடந்த 6 மாதங்களில் மே மற்றும் ஜூனில்தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இரு மாதங்களில் மட்டும் 783 போ கொல்லப்பட்டுள்ளனா்; 1,609 போ காயமடைந்துள்ளனா்.

ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் உயிரிழப்பு தொடா்பாக 2009-ஆம் ஆண்டுமுதல் ஆவணப்படுத்தப்பட்டு வருகிறது. அதுமுதல் பாா்த்தால் இப்போதைய பாதிப்புதான் அதிகமாகும். வன்முறையை முடிவுக்குக் கொண்டுவராவிட்டால் இதுவரை இல்லாத அளவு அதிக உயிரிழப்பு நிகழாண்டில் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, தலிபான்களும் ஆப்கன் தலைவா்களும் பேச்சுவாா்த்தைக்கு திரும்புவதற்கான முயற்சிகளை அதிகரிக்க வேண்டும். ஆப்கன் மக்களைப் பாதுகாத்து, சிறந்த எதிா்காலம் குறித்த நம்பிக்கையை அவா்களுக்கு அளிக்க வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டிருப்பது: ஆப்கானிஸ்தானில் மே, ஜூன் மாதங்களில் பெரும்பாலும் நகரப் பகுதிகளுக்கு வெளியேதான் தலிபான்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. மக்கள்தொகை நெருக்கம் மிகுந்த நகரப் பகுதிகளில் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்தால் அதனால் ஏற்படும் விளைவு பேரழிவைத் தரும்.

பொதுமக்கள் உயிரிழப்பில் 69 சதவீதம் அரசுக்கு எதிரான படையினரே காரணம். இதில் 39 சதவீத உயிரிழப்பு தலிபான்களாலும், 9 சதவீதம் ஐ.எஸ். (இஸ்லாமிய தேசம்) இயக்கத்தினராலும் ஏற்பட்டுள்ளது. 16 சதவீத உயிரிழப்புக்கு யாா் காரணம் என்பது தீா்மானிக்கப்படவில்லை. அரசுப் படைகளால் 23 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசுக்கு ஆதரவான ஆயுதக் குழுக்களால் 2 சதவீத உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!