தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடித்துள்ள புஷ்பா படம் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ளது. இதில் முதல் பாகம் வரும் டிச-17ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.
தெலுங்கில் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மற்றும் இந்தியையும் சேர்த்து ஒரே சமயத்தில் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் இந்தி உரிமையை பெற்றவர்களால் தயாரிப்பாளர்களுக்கு புது பிரச்சனையும் அதனால் அல்லு அர்ஜுனுக்கு சங்கடமும் ஏற்பட்டுள்ளதாம்.இந்தப்படம் ஆரம்பித்த காலகட்டத்தில் இது பான் இந்திய படமாகவோ அல்லது இரண்டு பாகங்களாகவோ வெளியாகும் என்கிற முடிவு எடுக்கப்படவில்லை. அல்லு அர்ஜுனின் படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு யூட்யூப்பில் வெளியிடப்பட்டு பல மில்லியன் பேரால் பார்த்து ரசிக்கப்படுகிறது. இதனால் புஷ்பா படத்தின் இந்தி உரிமையை அப்போது பிரபலமான ஒரு யூட்யூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்திருந்தனர்.
இப்போது படம் பிரமாண்ட ரிலீஸுக்கு தயாராகி வரும் வேளையில், அந்த யூட்யூப் சேனல் நிறுவனத்தினர் தியேட்டர் ரிலீஸில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லையாம். காரணம் யூட்யூப்பில் வெளியிட்டால் அவர்களுக்கு லாபம் அதிகம் என்பதால் தானாம்..ஆனாலும் புஷ்பா தயாரிப்பு நிறுவனம் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியபோது புரமோஷன், தியேட்டர் ரிலீஸ் போன்றவற்றில் ஏற்படும் செலவு ஆகியவற்றை தயாரிப்பு நிறுவனமே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், லாபத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதம் தங்களுக்கு தரவேண்டும் என்றும் நிபந்தனைகள் விதித்துள்ளனராம்.புஷ்பா படம் மூலம் வட இந்தியாவில் இன்னும் அழுத்தமாக காலூன்றலாம் என ஆர்வமாக இருக்கும் அல்லு அர்ஜுனுக்கு இந்த புதிய சிக்கல் சங்கடத்தை கொடுத்துள்ளதாம்.